எமதுபார்வை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர். 

ஆனந்தசுதாகரின் மனைவி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். அவரின் இறுதிக் கிரிகைகள் கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது. தனது மனைவியின் இறுதிக் கிரிகைகளில், சிறைச்சாலையின் விசேட அனுமதிபெற்று ஆனந்தசுதாகர் கலந்து கொண்டார். இறுதிக் கிரிகைகளின் முடிவில், தாயாரின் உடலோடு மயானத்தை நோக்கி மகன் சென்றுவிட, மகளோ தந்தையோடு சேர்ந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார். இந்தக்கட்சி அனைவரையும் உலுக்கியது. தாயார் இறந்துவிட்டார். தந்தையார் சிறையில் என்கிற நிலையில், பிள்ளைகள் இருவரும் நிர்க்கதியாகியிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே, தமது நிலையைக் கருத்தில் கொண்டு தமது தந்தையை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்கள்.

அத்தோடு, “..உங்களது தந்தையிடம் சொல்லி எமது தந்தையை விடுதலை செய்யுங்கள்…” என்று கோரி ஆனந்தசுதாகரின் பத்தே வயதான மகள் சங்கீதா, ஜனாதிபதியின் மகள் சதுரிக்காவுக்கும் தனிப்பட்ட கடிதமொன்றை எழுதியிருக்கின்றார்.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்தது முதல் ஆயிரக்கணக்கான அப்பாவிகள், கைது செய்யப்பட்டு சிறைகளில் வழக்கு விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் பலர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமலேயே சிறைகளில் உயிரிழந்திருக்கின்றார்கள். தாயும், தந்தையும் கைது செய்யப்பட்ட நிலையில், வழியில்லாமல் அவர்களது குழந்தைகளும் சிறைகளில் வளரும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது. அதன் இன்னொரு கட்டத்தையே, ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இன்று எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

எழுந்தமான அடிப்படையில் கைது செய்யப்படுவதும், சித்திரவதை செய்து வற்புறுத்தி போலியான குற்றச்சாட்டுக்களைக் கூறி கையெழுத்து வாங்கப்படுவதும், அதனாலேயே தவறிழைக்காமல் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு சிறைகளில் வாடுவோரும் ஏராளம். மனிதாபிமானத்துக்கு அப்பால் நின்று அப்பாவிகளை வேட்டையாடும் சட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், சர்வதேச நாடுகளிடமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, சர்வதேச தரத்திலான சட்டத்தினை அமுல்படுத்துவதாக இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள் போல தற்போதையை நல்லாட்சி(?) அரசாங்கமும் வாக்களித்திருக்கின்றது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் பெரியளவிலான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாற்றுச்சட்டத்துக்கான வரையொன்று தயாரிக்கப்பட்டது. அது, தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் காட்டிலும் பயங்கரமான கூறுகளைக் கொண்டிருக்கின்றது என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்கள். இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவது தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

உண்மையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பிலோ, அந்தச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் விடுதலை தொடர்பிலோ இலங்கை அரசாங்கமோ, அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வாய்ப்பேச்சுக்களுக்கு அப்பால், எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கிறார்கள் இல்லை. சிறைகளில் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி அரசியல் கைதிகள், தமது விடுதலை தொடர்பில் உண்ணாவிரதம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் போராடி ஓய்ந்து விட்டார்கள்.

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று விடுதலை செய்ய வேண்டும் என்று மனது ஏங்குகிறது. ஆனால், அதற்கான அர்ப்பணிப்பை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என்கிற நம்பிக்கை சிறிதளவும் இல்லை. ஏனெனில், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து சுமார் 9 ஆண்டுகளாகின்ற நிலையிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அப்பாவிகள் கைது செய்யப்படுவது நின்றுவிடவில்லை. சித்திரவதைகள் நின்றுவிடவில்லை. போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறைகளில் வருடக்கணக்கில் அடைக்கப்படுவதும் நின்றுவிடவில்லை.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.