எமதுபார்வை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 122 பேரும், ஆதரவாக கூட்டு எதிரணி, சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதியினர் உள்ளிட்ட 76 பேரும் வாக்களித்தனர். 26 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இலங்கை வரலாற்றிலேயே பிரதமர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இது. 1950களில் பண்டாரநாயக்க மற்றும் சிறிமோவோ பண்டாரநாயக்க ஆகியோர் பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அப்போதும், அந்தப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டன. இப்போது, ரணிலுக்கு எதிரான பிரேரணையும் தோற்கடிப்பட்டிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பாராளுமன்றத்துக்குள் கூட்டு எதிரணி தோற்றிருந்தாலும், அரசியல் நிகழ்ச்சி நிரலின் போக்கில் எதிர்காலத்துக்கான பெரும் ஆதாயத்துக்கான கட்டங்களை விதைத்துவிட்டிருக்கின்றது. ஏனெனில், 2015 ஆட்சி மாற்றமானது நாட்டிலுள்ள அனைத்துச் சமூக மக்களையும் நம்பிக்கை கொள்ள வைத்தது. இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகளும் பொது இணக்கப்பாட்டினூடு நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வாய்ந்தது. 2015 பொதுத் தேர்தலின் போதும், அதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டு மக்களிடம் வாக்குறுதிகளாக வழங்கினர்.

ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கம் பதவியேற்றத்திலிருந்து நம்பிக்கையான மாற்றங்களுக்குப் பதில், அதிகார இழுபறிக்குள் அரசாங்கம் சிக்கியது. ஜனாதிபதியும், பிரதமரும் ஆரம்பத்திலேயே அவற்றினைக் கழைத்திருக்க வேண்டும். மாறாக, அவர்கள் இருவரும் கூட தமக்கிடையிலான அதிகார இழுபறியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டினார்கள். அதனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மறக்கப்பட்டு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட்டது. தேசிய அரசாங்கம் பதவியேற்று மூன்று ஆண்டுகளாகிற நிலையில், நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்திக் கட்டங்களைத் தொடவில்லை. தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான செயற்பாடுகள், கட்சிகளுக்கிடையிலான தனிப்பட்ட அரசியலால் சில வரைபுகளோடு நின்று போனது.

நாட்டின் அரசியலமைப்பினை புதிதாக வரைந்து தொடர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கான சந்தர்ப்பமொன்று எதிர்காலத்தில் அமையுமா என்பது சந்தேகம். ஏனெனில், நாட்டின் இரு பிரதான கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கூட பொது இணக்கப்பாட்டோடு வேலை செய்வதற்கான அபூர்வ சந்தர்ப்பம் வாய்ந்திருந்தது. அதனை, ஒட்டுமொத்தமாக கீழே போட்டுடைத்துவிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அடிபடிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடின்மையும் மந்த கதியுமே, கூட்டு எதிரணியை நோக்கி குறிப்பிட்டளவான வாக்குகளைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையிலான பிணக்குகளை அதிகரித்து, கூட்டு எதிரணிக்கான வாய்ப்புக்களை அதிகரித்து விட்டிருக்கின்றார்கள். அதன் ஒரு கட்டமே நம்பிக்கையில்லாப் பிரேரணை வடிவிலும் வந்தது. அந்தப் பிரேரணைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் ஆதரவளித்திருக்கின்றார்கள் என்பதே அரசாங்கத்தின் தோல்வியாகக் கொள்ளப்படக்கூடியது.

இவ்வாறான நிலையை, தென்னிலங்கையில் பெரும் அரசியல் வெற்றியாக கூட்டு எதிரணி முன்னெடுத்து செல்லும். அதற்கான கட்டங்களை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்தும் விட்டார். இனி வரப்போகும் காலங்கள் தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்ட அரசியலையே முன்னெடுக்க வைக்கும். அப்படியான நிலையில், தேசிய அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்து தோல்வியுற்ற அரசாங்கம் என்கிற அடையாளத்தை பதிவு செய்யும். இது, கட்சிகளின் தோல்வியல்ல. நம்பிக்கை வைத்த மக்களின் தோல்வியே!

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'