எமதுபார்வை
Typography

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

வாழ்தலுக்கான உரிமை கோரி போராடிய மக்கள் மீது, எந்தவித அடிப்படை அறமும் இன்றி துப்பாக்கிகள், குண்டுகளை சரமாரியாகப் பொழிந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவல்துறையாக மாறி காவல்துறை மக்களை வேட்டையாடிய காட்சிகள், ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது, 9 ஆண்டுகளுக்கு முன், முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினால் வேட்டையாடப்பட்ட காட்சிகள் கண் முன் வருகின்றன.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் எப்போதுமே இரண்டாம் பட்சமே. அதிகாரத்தை அடையும் வரையில் மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் ஆட்சியாளர்கள், அதிகாரத்தினை அடைந்ததும், ஏதேச்சதிகாரம் கொண்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குகின்றனர். அதனையே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும் நிரூபித்திருக்கின்றது.

மக்களின் போராட்டம் வன்முறையாக மாறிய போது, கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தமிழக அமைச்சர்கள் ஊடகங்களிடம் கூறுகின்றார்கள். ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அனுமதியை யார் கொடுத்தது?, என்கிற கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாருமே பதில் சொல்கிறார்கள் இல்லை. கேள்விகளை தட்டிக்கழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அல்லது, ஊடகங்களிடமிருந்து ஓடுகிறார்கள்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு இன்னமும் தொடர்கிறது. இணைய சேவை முடக்கப்பட்டிருக்கின்றது. செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உதவியோடு, காவல்துறை வீடுகளுக்குள் புகுந்து மனித வேட்டையை தொடர்ந்தும் நடத்துகின்றது.

வாழ்தலுக்கான உரிமைக்காக வீதிக்கு வந்து போராடிய மக்களின் உயிர்களை குடித்து ஏப்பம் விடுவதில், காட்டும் ஆர்வத்தினை அந்த மக்களின் குரல்களைக் கேட்பதில் செலுத்தியிருந்தால், ஜனநாயகத்தின்- தார்மீகத்தின் பெருமையை ஆட்சியில் இருப்பவர்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால், இங்கு நிகழ்ந்திருப்பது, வேட்டையாடுவதற்கான போதை தலைக்கேறிய நிலை.

தூத்துக்குடி படுகொலைகளுக்கு தமிழக அரசும், அதன் ஏவல்துறைகளும் பொறுப்புக்கூற வேண்டும். இழக்கப்பட்ட உயிர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதைவிடுத்து, இழக்கப்பட்ட உயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகக் கூறிக்கொண்டு, எல்லாவற்றையும் தட்டிக்கழித்து செயல்படுவார்களாக இருந்தால், மக்களின் பெரும் கோபத்துக்கு ஆளாவார்கள். அது, தமிழகத்துக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல!

BLOG COMMENTS POWERED BY DISQUS