எமதுபார்வை
Typography

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

இதன்பிரகாரம், டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி மற்றும் நிர்வாக விடயங்கள் மீது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சக அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் தலையீடு செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, முதலமைச்சர் தவிர்ந்த நான்கு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்தியது. அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையில், கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் இராஜினாமாச் செய்தனர்.

ஆனால், சுகாதார அமைச்சராக இருந்த ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர்கள் இருவரும் அமைச்சுப் பதவிகளில் தொடரவே விரும்பினர். முதலமைச்சர் கேட்டுக்கொண்ட போதும், அவர்கள், பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்ய விரும்பவில்லை. அதன்பின்னர், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம், சத்தியலிங்கத்தையும், டெனீஸ்வரனையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி நீக்கினார்.

இந்த நிலையில், டெனீஸ்வரன் தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அதாவது, “எந்த அடிப்படையில் என்னை முதலமைச்சர் பதவி நீக்கினார்?” என்கிற கேள்வியை முன்வைத்தே டெனீஸ்வரன் நீதிமன்றத்தை நாடினார். ஆனாலும், அவரது வழக்கினை மேன்முறையீட்டு நீதிமன்றம், சத்தியக்கடதாசியில் தவறு இருப்பதாகக் கருதி நிராகரித்தது.

அதன்பின்னர், டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடினார். வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட சத்தியக்கடதாசி சரியானது என்று கூறி, வழக்கினை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதன்பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட டெனீஸ்வரனின் வழக்கில் இன்று இடைக்கால உத்தரவினை அளித்த நீதிபதிகள், வழக்கு முடியும் வரை, டெனீஸ்வரனிடமிருந்து பறிக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் அனைத்தையும் மீண்டும் அவரிடமே வழங்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை உறுப்பினராக மீளவும் அவர் செயற்படலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் வாதி டெனீஸ்வரனுக்காக சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவும், பிரதிவாதிகளில் ஒருவரான முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கனக- ஈஸ்வரனும் ஆஜராகியிருந்தனர்.

இதனிடையே, பதவி நீக்கப்பட்ட இன்னொரு அமைச்சரான சத்தியலிங்கம், தன்னுடைய பதவி நீக்கத்தினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடாமையினாலும், குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் பதவிகளை இராஜினாமாச் செய்ததாலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, வடக்கு மாகாண சபையில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட ஆறு அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், முதலமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவையே பதவி வகிக்க முடியும். அவ்வாறான நிலையில், புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் யார் நீக்கப்படப் போகிறார் என்கிற கேள்வியே தற்போதுள்ளது. முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?!

-புருஜோத்தமன் தங்கமயில்

BLOG COMMENTS POWERED BY DISQUS