எமதுபார்வை
Typography

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

தமிழக அரசியலில் இறுதி நூறு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அதில் 80 ஆண்டுகளை கலைஞர் எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றி ஆக்கிரமித்துக் கொள்வார். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் தளபதியாக, உடன்பிறப்புக்களின் தலைவனாக, தமிழகத்தின் முதல்வராக என்று அவர், தமிழக சமூக- அரசியல்- ஆட்சிப் பரப்பின் பெரும் ஆக்கிரமிப்பாளர்.

சமூக நீதிக்கான போராட்டங்களின் வழியிலும், திராவிட சித்தாந்தத்தின் படிகளிலும் பயணித்திருந்தாலும், கலைஞரின் ஆட்சி அதிகார அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நிறைகளும் குறைகளும், தனி மனித பலத்தினாலும், பலவீனங்களினாலும் நிறைந்த ஒன்றுதான். ஆனால், சாதி அடக்குமுறையின் ஆக்கிரமிப்பில் மனித அவலங்களை நாளாந்தம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவில், கலைஞர் செய்த சாதனைகள் மறக்கவோ மறுக்கவோ முடியாதவை.

சமூக நீதிக்கான அரசியல்தான், தமிழகத்தின் கடைக்கோடியில் ஒதுக்கப்பட்டு உழன்றுகொண்டிருந்த கோடிக் கணக்கானவர்களை, சமூகத்தில் சக மனிதர்களாக மாற்றியது. கல்விக்கான உரிமையை நிலைநாட்டியது. பட்டம் பதவிகளைப் பெற வைத்தது. அரசியல் உரிமைகளின் வழி மீட்சி கொள்ள வைத்தது. ஆண்டான் அடிமை முறைக்கு பெரியளவில் தடை போட்டு, சமூக நீதியின் கட்டங்களைத் அகலத் திறந்தது.

தந்தை பெரியாரின் பாசறையில் பயின்றவர்களாக அண்ணாவும், கலைஞரும் வெளிவந்தாலும்- அடையாளப்படுத்தப்பட்டாலும், ஆட்சி அதிகாரத்தினை அடைவதினூடுதான் சமூக நீதியின் கட்டங்களை பெரியளவில் நிலைநாட்ட முடியும் என்கிற உணர்நிலையைப் பெற்ற இடம்தான் தமிழக வரலாற்றை மாற்றி எழுதியது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, சமூக நீதியை எவ்வளவு பேசினாலும், அதனை சட்டங்களினூடு உறுதிப்படுத்த வேண்டிய தேவையை அண்ணா உணர்ந்த போது, அவர் பின்னால் கலைஞரும் சென்றார். அண்ணா ஏந்திய சமூக நீதிக்கான பெரும் தீப்பந்தத்தை சில வருடங்களுக்குள்ளேயே தான் ஏந்த வேண்டிய வந்தாலும், அந்தத் தீப்பந்தத்தின் பெரும் பாரத்தை தாங்கி, வெற்றிகரமாக கொண்டு சுமந்தவர் கலைஞர்.

அதுபோல, திராவிட அரசியல்தான் தமிழகத்தை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து தனித்துக் காட்டியது. இந்தித் திணிப்பு என்கிற வடிவில் வந்த வட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சமூக நீதி மாத்திரம் போதாது, திராவிட சித்தாந்த அரசியலும் அவசியம் என்று பெரியார் உணர்ந்த புள்ளியை, பெரும் அடையாளமாக மாற்றியது அண்ணாவும், கலைஞரும். திராவிட இயக்கத்தின் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்களில் ஒருவராக இருந்த கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா ஆரம்பித்த போது தளபதிகளில் ஒருவரானார். ஆனால், மூத்த தளபதிகள் பலர் இருக்க, அண்ணாவின் மறைவின் பின்னர் கலைஞர் தலைவரானபோது, தமிழகம் சற்றுத் திடுக்கிட்டுத்தான் போனது. அண்ணாவின் வல்லமை பெற்ற அனைத்துத் தளபதிகளையும், உடன்பிறப்புக்களையும் கட்டியாளும் தகுதியை கலைஞர் எவ்வாறு நிரூபிக்கப் போகின்றார் என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், அந்தக் கேள்விகளையேல்லாம் அவர் சில மாதங்களிலேயே ஊதித்தள்ளினார். தன்னைவிட மூத்தவர்களுக்கும், இளையவர்களுக்கும் ‘கலைஞரே தலைவர்; தலைவரே கலைஞர்’ என்கிற ஆளுமையாக வெளிப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆரின் வெளியேற்றம், கலைஞரை ஆட்சிக் கட்டிலில் இருந்து பல ஆண்டுகள் அகற்றி வைத்திருந்தாலும், தி.மு.க. என்கிற பேரியக்கத்தை இன்றளவும் கட்டுக்குலையாமல் பாதுகாத்ததில் கலைஞரின் ஆளுமை தனித்துவமானது. இந்திய வரலாற்றில் பேரியக்கமொன்றுக்கு 50 ஆண்டுகளாக தலைவராக இருந்திருக்கின்ற வரலாறு என்பது மாபெரும் சாதனையாகும்.

இன்றைக்கு கலைஞரின் சாதனைக் கோபுரங்களைக் கட்டிவிட்டு மீளத்துயில் கொள்கிறார். அவரின் சாதனைக் கோபுரங்களைத் தாண்டுவதற்கு முயற்சிக்காவிட்டாலும், அந்தக் கோபுரங்களைச் சாயாது காப்பாதுதான், பின்ன வரவுள்ளவர்களின் பெரும் கடமை. ஆனால், அது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஏனெனில், இரவிலும் ஓய்வின்றி உதித்த சூரியனாக கலைஞர் தன்னை நிரூபித்துச் சென்றிருக்கின்றார். போதும் கலைஞரே இனியாவது ஆழ்ந்து உறங்குங்கள்… அண்ணாவின் அரவணைப்பில்!

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS