எமதுபார்வை

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த காலங்களில் காணாமற்போனோ 17000க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என்று  சில தரப்புக்களினால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தினை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்தது. தென்னிலங்கையில் தொடர்ச்சியாக கவனக்கலைப்பான்களாக இருக்கும் கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி), இந்தச் சட்டமூலமானது படையினரைக் காட்டிக் கொடுக்கும் சட்டமூலம் என்று தொடர்ச்சியாக பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

இன்னொரு கோணத்தில், தென்னிலங்கையின் கடும்போக்குத் தரப்புக்கள் சிலவும் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன. குறிப்பாக, ஜாதிக ஹெல உறுமய சட்டமூலத்தினை ஆதரித்து வாக்களித்தது. இந்தச் சட்டமூலத்தின் ஊடக கடந்த காலத்தில் காணாமற்போன படையினரை மீட்க முடியும் என்றும் அந்தக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு, காணாமற்போதல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுக்களாகவும் கையாள்வதற்கான ஏற்பாடுகளாக அந்தக் கட்சி முன்னிறுத்த விளைகின்றது. 

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தினை மங்கள சமரவீர முன்வைத்த போது, கூட்டு எதிரிணியின் வாசுதேவ நாணயக்கார பெரும் கூச்சல்களை எழுப்பிக் கொண்டு எதிர்ப்பு வெளியிட்டார். தென்னிலங்கையில் 1980களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமற்போன தருணத்தில் ஐக்கிய நாடுகள் வரையில் சென்று அதற்காகப் போராடியவர்களாக மஹிந்த ராஜபக்ஷ, வாசுதேச நாணயக்கார, மங்கள சமரவீர கூட்டினைக் கொள்ள முடியும். முக்கியமான பேரணிகளை தென்னிலங்கையில் நடத்தி நீதியும் கோரினார்கள். 

ஆனால், வடக்கு கிழக்கில் பல்லாயிரக்காணக்கானவர்கள் காணாமற்போயுள்ள நிலை தொடர்பில் நீதி கோரும் கோரிக்கைகளை புறந்தள்ளும் ஏற்பாடுகளை வாசுதேவ நாணயக்காரவும் முன்னின்று ஏற்படுத்தினார். சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது, வாசுதேவ நாணயக்கார நடந்து கொண்ட முறைமையானது, அவரை முற்றுமுழுதாக சோரம்போன இனவாத அரசியல்வாதியாக அடையாளம் காட்டியது. 

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் வரவேற்றிருக்கின்றார்.

இந்தநிலையில், காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் யாரையும் தண்டிக்கும் அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்று சட்டமூலத்தினை முன்வைத்த மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார். அப்படியான நிலையில், பரிந்துரைகளை அல்லது தேடுதல்களை நடத்தும் அலுவலகமாக மாத்திரமா செயற்படப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. 

ஏற்கனவே கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, பகுதியளவான வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. சில பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது. அந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.  அப்படியான நிலையில், காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஏந்த வகையிலான நம்பிக்கைகளை கட்டியெழுப்பப் போகின்றது என்பதுவும், தண்டனைகளை வழங்காத சட்டமூலமொன்று எவ்வாறான நீதியை வழங்கும் என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுகின்றன.

இறுதி மோதல் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்களை வடக்கு- கிழக்கிலுள்ள தாய்மார் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், ஐக்கிய நாடுகளையும், வெளிநாடுகளையும் சமாளிப்பதற்காக மட்டுமே காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்தால், அது வரலாற்றுத் துரோகத்தின் நீட்சியாக பதிவு பெறும்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.