எமதுபார்வை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

நேற்றுமுந்தினம் சபை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த சபாநாயகரை கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டு, அவரை சூழ்ந்து கொண்ட ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. வரைமுறை மீறித் தாக்கிக் கொண்டார்கள். இதனை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களோ தொலைக்காட்சிகளுக்கு முன்னிருந்து அரற்றிக் கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சுமூகமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கமொன்றை அமைப்பதற்கு வழிகோலுமாறு கோரினார்கள். ஜனாதிபதியும், அவ்வாறான சூழலை இரண்டு மூன்று நாட்களுக்குள் உருவாக்குவதாக வாக்குறுதியளித்து அனுப்பினார்.

ஆனால், நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னராகவே அவைக்குள் நுழைந்த ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் (அக்கிர) ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சபை அமர்வுகளை 45 நிமிடங்கள் தாண்டியும் நடத்த விடாமல் தடுத்தனர். இறுதியாக, பொலிஸாரின் பாதுகாப்போடு நுழைந்த சபாநாயகர், ராஜபக்ஷ அணியினரின் தாக்குதலுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பைக் கோரினார். அது, பெரும்பான்மை உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பு நடைபெறும் போது, ராஜபக்ஷ தரப்பு உறுப்பினர்கள் கதிரைகளையும், அரசியலமைப்புப் பிரதிகளையும் தூக்கி சபாநாயகரை நோக்கி எறிந்தார்கள். மிளகாய்த்துளைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களில் இருந்து சபாநாயகரை பொலிஸார் காப்பாற்றினாலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், பொலிஸாரும் காயமடைந்தனர். சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிக் கொண்டு சென்ற ராஜபக்ஷ தரப்பினர், தூர வீசினர். சபாநாயகர் அமரும் பகுதியை தாக்கி சேதப்படுத்தினர்.

இந்தக் கோரத்தனமான வன்முறை ஆட்டத்தினையும் பார்த்து நாட்டு மக்கள் மீண்டும் கண்ணீர் வடித்தனர். தங்களின் இறைமை மீது எவ்வாறான தாண்டவம் ஆடப்படுகின்றது என்பதை நினைத்து வெட்கிக் குனிந்தார்கள்.

இப்போது, மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கின்றார். நாட்டையும் மக்களையும் குறித்து கிங்சித்தும் கரிசனையுள்ள ஒருவரால், இவ்வாறெல்லாம் நடக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உண்மையிலேயே அவர் சுய நினைவுடன்தான் நடக்கிறாரா?, என்கிற கேள்வியை அனைத்துத் தரப்பு மக்களும் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது, இலங்கை ஜனநாயகத்தின் மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள். அதனை, மைத்திரியே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான், வேதனையிலும் வேதனை!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்