எமதுபார்வை

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

கருவறைக் குழந்தைகளைக்கூட நச்சுக் குண்டுகள் கல்லறைக்கு அனுப்பிய நாட்கள் அவை. பசிக் கொடுமையால் வற்றிப்போன தாயின் மார்பில் முகம் புதைத்து அழுத பச்சைக் குழந்தைகளை பல்குழல் ஏவுகணைகள் பல துண்டுகளாக்கி சிதைத்து எறிந்தன. உலகம் அனைத்துத் தார்மீகங்களையும் மறந்து நின்று ரசித்துக் கொண்டிருக்க முள்ளிவாய்க்கால் கரையில் ‘மனிதம்’ மாசுபடுத்தப்பட்டு புதைக்கப்பட்டது. 21வது நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பை, எந்த சர்வதேசச் சட்டமும், இணக்கப்படுகளும் தடுக்கவில்லை.

பல தசாப்தங்களையும் தாண்டிய விடுதலைப் போராட்டத்தினை இன அழிப்போடு முடித்துக் கொள்வதற்கு சர்வதேசம் பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு வழங்கி ஒத்துழைப்பை என்றைக்குமே மன்னிக்க முடியாதது. உப்பேறிய கடற்கரை மணலில் வெய்யிலின் தீரம் நர்த்தனமாட குண்டு மழைக்குள் உயிரைப் பிடித்துக் கொள்ள ஓடிய இலட்சக்கணக்கான தமிழர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழினமும் அலைக்கழிந்தது. ஒவ்வொரு நொடியும் வந்துவிழும் குண்டுகள் எத்தனை பேரை பலிவாங்கும் என்ற அச்சம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மரணம் மரத்துவிட்டதான உணர்வு என்று முள்ளிவாய்க்காலில் புகைப்பட்டது மனிதம் மாத்திரமல்ல. உலகத்தின் அனைத்து மாண்புகளும் அடிப்படைகளுமே.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் முள்ளிவாய்க்காலில் தொலைத்துவிட்ட உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தின் அழுகையும், ஆற்றாமையும் என்றைக்குமே எதனாலும் ஈடுசெய்ய முடியாதது. நீதியைப் தேடித் தேடி ஓடி நொடிந்துபோய்விட்ட மனங்களில் நம்பிக்கையை எந்தவொரு தரப்பும் இதுவரை ஏற்படுத்தவில்லை. அப்படிப்பட்ட நிலையில், முள்ளிவாய்க்காலில் இருந்து தீரத்தோடு எழுந்துவந்து, எமக்குத் தேவையானவற்றை நாமே எடுத்துக் கொள்ளும் அளவுக்கான வலுவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது, மீண்டுமொரு பெரும் இழப்பை தவிர்த்துக் கொண்டு வெற்றியின் பக்கத்திற்கு செல்லும் வகையிலான சீரிய சிந்தனையோடு இருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் நாம் ஏற்றுகின்ற ஒவ்வொரு அஞ்சலி தீபத்தின் மீதும் அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழ் இனத்தின் ஆணிவேர் வரை சென்று அதன் மீது வெந்நீர் ஊற்றுவதற்கு எத்தணித்த பௌத்த சிங்கப் பேரினவாதத்தையும், அதற்கு ஒத்துழைத்த சர்வதேசத்தையும் ஒரு கணமேனும் இமைக்காது நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு, அவர்களை சமயோசிதமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை எமக்குள் வகுக்க வேண்டும். அதுதான், தோற்றகடிக்கப்பட்ட புள்ளிகளில் இருந்து எழுந்து வருவதற்கு உதவும். அதைவிடுத்து, முள்ளிவாய்க்காலை ஒரு சம்பிரதாயபூர்வமான களமாக மாத்திரம் கடந்துவிட நினைப்பது, மரணித்த எமது உறவுகளுக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம். அந்தத் துரோகத்தைத் தாண்டி, உறவுகளின் மீதான ஆன்மாக்களிடம் உறுதிப்பாடு வழங்குவோம், ‘முள்ளிவாய்க்காலை போராட்டத்தின் புதிய களமாகக் கொண்டு மீண்டெழுவோம்’ என்று.

மரணித்த உறவுகளுக்கு அஞ்சலிகள்….!

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'