எமதுபார்வை

“ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் மாத்திரம் 18,000 திருட்டு விசிடி கடைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இணையத்தில் படம் பார்ப்பவர்கள், தரையிறக்கங்களின் கணக்கு தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.  

ஆனால், திருட்டு விசிடிக்களின் வெளியீட்டுக்கும், அதன் வலைப்பின்னல் வழி திருட்டு தொழிலுக்கும் ஈழத்தமிழர்கள் மாத்திரமே பொறுப்பு என்கிற தொனியில் சேரன் கருத்து வெளியிட்டே, ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்து ‘அருவருப்பு’ அடைந்திருக்கின்றார்.

திருட்டு விசிடிக்களின் (VCD) அபரிமிதமான ஆக்கிரமிப்பினால் தமிழ்ச் சினிமா அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதான கூக்குரல்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. புதிய படமொன்று வெளியாகி சில மணித்தியாலங்களுக்குள்ளேயே வெளியாகும் திருட்டு விசிடிக்கள் தமிழ்ச் சினிமாவின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கின்றன. பல தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டங்களைச் சந்தித்திருக்கின்றார்கள். தமிழ்ச் சினிமா தொழிற்துறையின் ஒட்டுமொத்த கட்டுமானமும் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானதாக இதனைக் கொள்ள முடியும். 

இது, தமிழ்ச் சினிமாவில் மாத்திரமல்ல, உலக சினிமா வியாபாரத் தளங்களிலேயே பாரிய பிரச்சினைதான். அமெரிக்க ஹொலிவூட் படங்களின் திருட்டு விசிடிக்கள் சில மணி நேரங்களில் ஆசிய நாடுகளில் கிடைக்கின்றன. இணையத்தில் வேறு பெயர்களில் தரவேற்றப்படுகின்றன. எவ்வளவு பெரிய தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டுப்படுத்தினாலும், அதனை மீறிய தொழில்நுட்ப வளர்ச்சி திருட்டு விசிடிக்களை உருவாக்கவும் ஒத்துழைக்கின்றன.

தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரையில் திருட்டு விசிடிக்களின் தாய் நாடு மலேசியா என்கிற குற்றச்சாட்டொன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் இருந்தது. மலேசியாவிலிருந்தே தமிழகத்துக்குள் திருட்டு விசிடிக்கள் வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளின் திருட்டு விசிடி குற்றங்கள் அல்லது அதனை இணைங்களில் தரவேற்றுவது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து தமிழர்கள் என்கிற குற்றச்சாட்டு பெரும் முனைப்போடு முன்வைக்கப்படுகின்றது. 

புலம்பெயர் நாடுகளிலுள்ள சிலரும் இந்தக் குற்றங்களோடு சம்பந்தப்பட்டிருக்கலாம். அதனை மறுப்பதற்கும் இல்லை. ஆனால், அனைத்துக் குற்றங்களுக்கும் ஈழத்தமிழர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது மாதிரியான உரையாடல்கள் தான் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழகத்திலிருந்து திருட்டு விசிடிக்கள் தயாரிக்கப்படுவதற்கான ஆதாரங்கள், சாட்சிகளையும் கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டவர்கள் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, சில படங்களின் தயாரிப்பாளர்களே, தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, தமது பட திருட்டு விசிடிக்களை விற்பது தொடர்பிலான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் தாணு தெரிவித்திருந்தார். 

அப்படிப்பட்ட நிலையில், தமிழ்ச் சினிமா வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமது தொழில் நடவடிக்கைகளையும் மாற்றி அமைத்து, அடுத்த கட்டத்தை அடையவேண்டிய தேவையொன்று உண்டு. மாறாக, குற்றச்சாட்டுக்களை மாத்திரம் வைத்துவிட்டு விடயத்தை சரியாக கையாளாமல் விட்டு அழுது அரற்றுவது எந்தவித பயன்களையும் விளைவிக்காது. 

தமிழ்ச் சினிமாவின் வெளிநாட்டு வியாபாரம் என்பது பெரும்பாலும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களினால் தீர்மானிக்கப்படுவது. தமிழ்ச் சினிமாவை குறிப்பிட்டளவில் பொருளாதார ரீதியில் தாங்கிக் கொண்டிருப்பதுவும் ஈழத்துத் தமிழர்கள். ஆனால், அதுவே, தமிழ்ச் சினிமாவின் குறிப்பிட்டளவான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களை “புலம்பெயர் ஈழத்து தமிழர்கள் என்றால் பணம் காய்க்கும் மரங்களாகவும், ஏமாந்த வாடிக்கையாளர்களாகவும்” கருத வைத்திருக்கின்றது. இன்னமும் அதுதான் நிலைமை.

ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்குப் பின்னால் இருக்கின்ற வலி அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றின் மீதான கணங்களைத் தாண்டி, ஒட்டுமொத்தமான குற்றமொன்றை அல்லது வசையை சேரன் போன்றவர்களினால் முன்வைக்க முடிவதற்கும் “பணம் என்பதே அடிப்படைக்காரணிகளாக அமைந்திருக்கின்றன” என்பதை ஈழத்துத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். திருட்டு விசிடி பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கும், “தாங்கள் ஈழத்தமிழர்களுக்கான வீதியில் இறங்கினோம், அதனால் பலவற்றை இழந்தோம்” என்கிற வசையும் சம்பந்தமில்லாத விடயங்களை ஒரு புள்ளியில் சந்திக்க வைப்பதாகும். அது, சேரன் போன்றவர்கள் மனப்பூர்வமாக அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டார்களே என்பது குறித்த கேள்விகளை எழுப்ப வைக்கின்றது. 

ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக சேரன் போன்றவர்களின் வசைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். ஆனாலும், அவர்களிடத்திலும் அது தொடர்பில் எந்தவிதமான ரோச உணர்ச்சியும் வெளிப்பட்டது கிடையாது. மாறாக, தமிழ்ச் சினிமா என்பதை ஒரு தொழிற்துறை என்று கருதாமல், அடிமையான ரசிக மனநிலையின் வழிபாட்டு இடமாக கொண்டு உச்சத்தில் வைத்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலை, தமிழ்ச் சினிமா துறையினரை இன்னும் இன்னும் ஆதிக்க மனநிலைக்கு கொண்டு செல்கின்றது. படங்களைப் பார்ப்பது என்பது அவரவர் விருப்பம். ஆனால், ஒட்டுமொத்தமான இனமொன்றின் அரசியலையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவர்கள் குறித்த தெளிவோடு இருப்பது ஈழத்தமிழர்களுக்கு அவசியமானது. இல்லையென்றால், சேரன் போன்றவர்களின் வசை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இங்கு சேரன் போன்றவர்கள் திருந்துவது பற்றியெல்லாம் நம்பிக்கை கொள்வதைக் காட்டிலும், தமிழ்ச் சினிமா மீதான வழிபாட்டு மனநிலையைக் கடந்து ஈழத்தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதே அடிப்படையாகும். இனியாவது, அது தொடர்பில் ஈழத்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..