எமதுபார்வை

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

ஜனாதிபதித் தேர்தல் வழக்கம் போலலே இம்முறையும் சிங்கள பௌத்த தேசியவாத நோக்கு நிலையிலிருந்தே பெரும்பாலும் அணுகப்படுகின்றது. பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தென் இலங்கையின் மத்தியதர வாக்குகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள். ஆனால், ஜனநாயக விரும்பிகளும், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மை மக்களும் அடக்குமுறைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெற்ற வெற்றி என்பது, ஜனநாயகத்தின் பெருவிரும்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வாக்களிப்புப் போராட்டத்தினால் கிடைத்தது. அப்படியான சூழலைக் கருத்தில் கொண்டே சஜித் பிரேமதாசவை இம்முறை ஜனநாயக விரும்பிகளும், தமிழ்- முஸ்லிம் மக்களும் தெரிவாகக் கொள்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ என்கிற கடந்தகாலக் கொடுங்கனவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக, ஏற்கனவே அடக்குமுறைக்குள்ளான மக்கள் அணி திரள்வது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவை தென் இலங்கையின் பௌத்த தேசியவாதத்தின் புதிய பாதுகாவலனாக சித்தரிக்கும் தொடர் வேலைத்திட்டம், தேர்தல் வாக்களிப்பில் தாக்கம் செலுத்திவிடுமோ என்கிற அச்சம் ஜனநாயக விரும்பிகளிடம் உண்டு.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில், முள்ளிவாய்க்கால் என்கிற பெரும் கொடூர காலத்துக்குப் பின்னரான, மீள் எழுச்சிக்காக ஜனநாயக இடைவெளியின் நீட்சியை தவிர்க்க முடியாமல் வேண்டுகிறார்கள். அதன்போக்கில், இந்தத் தேர்தலையும், தமது போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகவே கருதுகிறார்கள். அதுதான், தொடர் போராட்டங்களுக்கான வெளியையும், தமிழ்த் தேசிய அரசியலை நோக்கிய இளம் தலைமுறையின் வருகையையும் ஊக்குவிக்க உதவும்.

ஒரு சமூகமாக இம்முறையும் தமிழ் மக்கள் ஒரே புள்ளியில் திரண்டிருக்கிறார்கள். அந்தத் திரட்சி புதிய நம்பிக்கைகளின் நீட்சியாக இருக்கும். அப்படியான நிலையில், தேர்தல் புறக்கணிப்பு, அலைக்கழிப்பு கோசங்களுக்கு அப்பால் நின்று வாக்குகளை பெரும் ஆயுதமாக மக்கள் எந்தவித சமரசமும் இன்றி பாவிக்க வேண்டும். அதனைத், தவிர்த்துவிட்டு, எதிர்கால கொடுங்கனவுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.

(4tamilmedia- ஆசிரியர் குழுமம்)

-