எமதுபார்வை

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். அவரின் வருகை நிகழ்த்தியிருக்கின்ற விடயங்களை சற்று உற்று நோக்கினால், அவை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெருமளவு நற்சான்றிதழ்களை வழங்கும் போக்கில் அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  

பான் கீ மூனின் வருகையை தமிழ்த் தரப்பு அவ்வளவு பெரிய நம்பிக்கைகளோடு எதிர்கொண்டிருக்கவில்லை. ஆனாலும், தமது அரசியல் நிலைப்பாடுகள்- எதிர்பார்ப்புக்கள் சார்ந்து தொடர்ச்சியாக சர்வதேசத்திடம் வலியுறுத்தி வரும் விடயங்களை, பான் கீ மூனிடமும் வெளிப்படுத்தியிருக்கின்றது. 

இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் திரும்பவும் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் செறிவு குறைக்கப்பட வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியிருக்கின்றார். இந்த விடயத்துக்கு அப்பால், அவர் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சார்ந்து பெரிய வலியுறுத்தல்கள் எதனையும் வெளியிடவில்லை.

வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் அதீத பிரசன்னம் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பில் காலம் காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கமும் காணி விடுவிப்பு தொடர்பில் சில கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் அறிவிப்பாகவே அதனைக் கொள்ள முடியும். குறிப்பாக, அரசாங்கத்தின் மீது எந்தவித கால வரையறையையும் அவர் விடுக்கவில்லை. அது, தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெரும் மகிழ்வோடு ஊடகவியலாளர்கள்- பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருக்கின்றார். 

இந்த இடத்தில், இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் பதிலொன்றையே பான் கீ மூன் வெளியிட்டிருக்கின்றார். 

அதாவது, இந்த விஜயம் முழுவதும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றான சர்வதேச விசாரணை பற்றிய விடயத்தை புறந்தள்ளி வந்த பான் கீ மூன், தன்னுடைய இறுதி ஊடகச் சந்திப்பின் போது, “இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணைப் பொறிமுறை உள்நாட்டு பொறிமுறையாகவோ, வெளிநாட்டு பொறிமுறையாகவோ எவ்வாறு இருப்பினும் அது சர்வதேச தரத்திலான ஒரு விசாரணைப் பொறிமுறையாக இருக்க வேண்டும். இந்த விசாரணைப் பொறிமுறையானது மக்களின் அபிமானத்தை வென்றதுடன், மக்களுக்கு நீதியையும் நியாத்தினையும் பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.” என்றார்.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச தலையீடுகளுடன் கூடிய கலப்பு விசாரணைப்பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பிரதான நிர்வாகியான பான் கீ மூன், குறித்த தீர்மானத்தின் அடிப்படைகளையே புறந்தள்ளும் வகையில், உள்ளக விசாரணைகளுக்கான அங்கீகாரமொன்றையும் வழங்கியிருக்கின்றார். அதாவது, விசாரணைப் பொறிமுறை சர்வதேசத் தரத்திலானதாக அமைய வேண்டும் என்று சொல்லியிருக்கின்றாரே அன்றி, சர்வதேச தலையீடுகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.  இதன்மூலம், வார்த்தை மயக்கங்களினூடு இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிச் சென்றிருக்கின்றார் பான் கீ மூன். 

தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளின் மீதே ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஏமாற்று வித்தைகளின் விதைகளைத் தூவிச் சென்றிருக்கின்றார்.  அது, அநீதிகளினால் அலைக்கழிக்கப்பட்ட மக்களின் அவலத்தில் மீண்டும் மீண்டும் வலிகளை சேர்ப்பதாகவே அமையும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..