எமதுபார்வை
Typography

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

கொரோனா வைரஸ் வடக்கு இத்தாலி முழுவதும் பரவத் தொடங்கும் வரை இது ஒரு ஆசியப் பிரச்சனையாகவே பொதுவில் பார்க்கபட்டது. லோம்பார்டியா மற்றும் வெனெட்டோ பிராந்தியங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலேயே இது தொடர்பில் எல்லோரும் பரபரக்கத் தொடங்கினர்.

இத்தாலியில் இது வேகமாகப் பரவத் தொடங்க, இத்தாலிய அரசும் மருத்துவத்துறையும் விரைந்து செய்ற்பட்டன. பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் உள்ள பதினொரு நகரங்கள் முடக்கபட்டதும், பாடசாலைகளை மூடியது, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், இந்த வைரஸ் தாக்கத்தின் பரவு வேகத்தைக் கட்டுப்படுத்தியது. ஆயினும், இத்தாலியின் பெரு மக்கள் பரம்பலில் இது அவ்வளவு சாத்தியமானதல்ல என்பதை வைரஸ் தொற்றின் பரவு பரம்பலும், வேகமும் உணர்த்தியது.

இது இவ்வாறிருக்க; இத்தாலியின் அண்டைநாடுகளுக்கும் இத்தாலியிலிருந்து இந்த வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்துதம் விழிப்படைந்தன. இத்தாலியிலியிருந்து சுவிஸ், ஆஸ்திரியா, ஸ்பானியா, ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் தற்போது பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரியா இத்தாலியுடனாக புகையிரதப் போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, னைய நாடுகளிலும் அதனைச் செய்ய வேண்டும், இத்தாலியின் எல்லைகளை மூட வேண்டும் என்ற யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

ஆனால் அது அவ்வளவு சாத்தியமான விடயம் அல்ல. உதாரணமாக, சுவிற்சர்லாந்தின் வலதுசாரி அரசியல்வாதிகள், சுவிஸின் இத்தாலிய எல்லையை மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த நடவடிக்கையின் பின்னாலுள்ள சிரமங்களை அவர்கள் புரியாதுள்ளனர் என்ற எதிர்வாதங்கள் எழுந்தன.

அதன் முக்கிய காரணம், இத்தாலியில் இருந்து, எல்லை தாண்டிய தொழிலாளர்களாக, தினசரி சுமார் தினசரி 70,000 பேர் வரையில் வந்து செல்கிறார்கள். தென் மாநிலமான திச்சினோவின் வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பல இடங்களிலும் இப் பணியாளர்கள் தொழில் புரிகின்றனர்.

இவற்றுள் அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் பலரும் உள்ளார்கள். குறிப்பாக சுகாதாரத் துறையில் சுமார் 4000 க்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் குறைந்தது 120 மருத்துவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மருத்துவத் தாதிகளும் அடங்குவர். எல்லையை மூடுவதால் இவர்கள் சேவை இழக்க நேரிடும்.

ஆனால் வௌிநாட்டவர்களது வருகையை மட்டுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவரும் வலதுசாரிக்கட்சிகள் இச் சந்தர்ப்பத்தில் தங்கள் குரலை மேலும் உயர்த்துகின்றன. அரசியல் நோக்கம் கொண்ட இந்த வாதம், மக்களின் சுதந்திர இயங்குதலுக்கு எதிரான செயல் என எதிர் தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன.

மேலும் எல்லையை மூடுவதனால் வைரஸ் தொற்றுப் பரவாதிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்குச் சிறப்பான உதாரணம் ஈரானில் இந்தத் தொற்றுக்கு உள்ளான முதல் நபர்கள், தங்கள் பகுதிகளிலிருந்து வெளியே செல்லாத உள்ளுர் வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எல்லைப்பகுதியில், வெப்பநிலை ஸ்கிரீனிங் கருவிகளினால் பயனிகள் பரிசோதிக்கப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமான வெப்பமானநிலையுடையவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இவ்வாறிருக்க; உலக சுகாதார அமைப்பின் அவசரத் தலைவர் மைக்கேல் ரியான், வைரஸ் அச்சுறுத்தலைக் கையாள்வதற்கு எல்லைகள் மூடுவது தீர்வாகாது. இது நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தருணம். ஐரோப்பா முழுவதும் வைரஸ் தாக்கத்தின் பரவலைக் கையாள்வதற்கு எல்லைகளை மூடி, முடங்கிக் கொள்வதிலும் பார்க்க, இணைந்திருந்து, பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்வதே மிகச் சிறந்த வழியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் தற்போதை நிலை என்ன ?

புதன்கிழமை வரையில், 400 பேருக்கு இத் தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை இரவு முதலான 24 மணி நேரத்தில் 80 க்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாகவும், 12 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த 12 பேரும் 62 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் சிலர் முன்னரே நோய்தாக்கம் உடையவர்கள். 7மில்லியன் முதியவர்கள் கொண்ட நாடு இத்தாலி என்பதனைக் கருத்திற் கொண்டால், கோரோனா பாதிப்பில் பலியானோரின் விகிதாசாரம் எவ்வளவு குறைவானது என்பது புரியும். இத்தாலியின் பிரதமர் முதியவர்களைப் பாதுகாப்பதில் கவனங்கொள்வோம் என அறிவுறுத்தியுள்ளார்.

இத்தாலியின் பரபரப்பான பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வைரஸ் தொற்றுக் குறித்த தகவல்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்சம் காரணமாக பலர் வீடுகளில் முடங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ரோம் நகரில் இத்தாலிய சுகாதார அமைச்சரை சந்தித்த பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கிரியாக்கிட்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு கவலைக்குரிய சூழ்நிலைதான். ஆனால் அதற்காக நாம் மக்களுக்குப் பீதியைக் கொடுக்கக்கூடாது. மாறாக நம்பிக்கையூட்ட வேண்டும். இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி இன்னும் முறையாக அறியப்படாத நிலையில் தற்போது ஐரோப்பாவிற்கு அப்பாலும் இது பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே அச்சமடைதல் இதற்குத் தீர்வாகாது." எனக் கூறினார்.

புதன்கிழமை, ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, குரோஷியா, கிரீஸ், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி என்பவற்றுடன், ஸ்கன்டிநேவிய நாடுகளில் ஒன்றான நோர்வேயும், தங்கள் நாடுகளில், கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதி செய்துள்ளன.

ஐரோப்பாவில் கோரோனா வைரஸ் தாக்கத்தின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்நாடுகள் பலவற்றிலும், நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் கண்ணகாட்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்தினால், பொருட்களுக்கான பரிமாற்றங்களிலும் சிரமங்கள் எழுந்துள்ளன. பல இடங்களிலும் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் பெருமளவிலான பொருட்களை சேகரித்து வைப்பதனாலும் இந்தச் சிரமங்கள் ஏற்படுகின்றன. இது தவிர  தொழிலகங்கள், உணவகங்கள், போக்குவரத்து என்பவற்றில் ஏற்படும் முடக்கங்கள், பெரும் பொருளாதார வீழ்ச்சியினை, இத்தாலிக்கு மட்டுமல்லாது, எதிர்வரும் நாட்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்டுகிறது.

நிறைவாக கோரோனா வைரஸ் தாக்கம் அச்சங் கொள்ள வேண்டியதுதானா ? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் அனைவரும் அவதானமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம். உரிய தற்காப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளோம். குறிப்பாக வயதானவர்கள், மற்றும் நோயாளிகள் குறித்த அக்கறையும் பரிவும், கவனிப்பும் அவசியமானவை.

இந்த வைரஸ் தாக்கம் தொடங்கிய சீனாவின் யுகான் நகரிலிலேயே, வைரஸ் தாக்கதிலிருந்து விடுபட்டு வீடுதிரும்பியவர்கள் பலர் இருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்களில் வைரஸ் தாக்கம் குறித்துப் பரப்பப்படும் போலியான, ஊர்ஜிதமற்ற தகவல்களை , மீளவும் பகிராதிருக்க வேண்டும். ஒவ்வொரு நாடுகளினதும், சுகாதாரத்துறையின் அறிவிப்புக்களை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டும்.

சென்ற ஒக்டோபர் மாதம் 10 ந் திகதி, உலக மனநலநாளில், உலகச் சுகாதார அமைப்பு, உலக மனநல வள அமைப்பு ஆகியன ஒரு கவனயீர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருந்தன. இந்த உலகில் ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒருவர் மனஉளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவ்வாறு இறப்பவர்கள் 15 - 25 வயதிலுள்ளவர்கள் எனவும் அறிவித்திருந்தது. இன்று கொரோனா வைரஸ் குறித்து அச்சமுறும் நாங்கள் இது குறித்து யோசித்திருக்கிறோமா. புள்ளி விபரத் தகவல்களின் படி பார்த்தால், இந்த இளம் தற்கொலையாளர்களின் விகிதாசாரத்தை விட, கோரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை பலியாகியோர் தொகை ஒன்றும் பெரிதல்ல. ஆதலால் கோவிட் -19 குறித்த அச்சம் தேவையில்லை. அவதானமாக இருப்போம், ஒன்றுபட்டிருப்போம் !

 

40 விநாடிகளுக்கு ஒருவர்.....

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்