எமதுபார்வை

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

தென் இலங்கை வீதிகளும், புத்தனின் கோவில்களும் பாற்சோறு பகிர்ந்துண்ணும் மக்களினால் சூழப்பட்டிருந்தது. ஒரே நாடு, ஒரே மக்களின் நாடு, ஒரே பேரினவாதத்தின் நாடாக இறுமாப்போடு எழுந்து நின்றதாக, வெற்றிக் கொண்டாட்டங்களில் காவி உடை தரித்த புத்தனின் சீடர்களும், புத்தசாசனத்தை தலையாய கட்டளையாக ஏற்றுவிட்ட வெள்ளுடை வேந்தர்களும் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தார்கள். புலியை சிங்கம் வென்றுவிட்டதான இறுமாப்பை இராணுவச் சீருடைகள் வெளிப்படுத்தின.

வடக்கின் சில தரிசுத் தரைகளில் முட்கம்பி வேலிகள் முளைத்தன. முள்ளிவாய்க்கால் கண்டு மீண்ட மக்கள், முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டார்கள். அம்மாவை இழந்த பிள்ளையும், அம்மாவைத் தேடிக் கொண்டிருக்கும் பிள்ளையும், பிள்ளையை தேடிக் கொண்டிருக்கும் அம்மாவும் என்று உறவுகளை தேடிக் கொண்டிருந்த, இலட்சக்கணக்கான மக்கள் நாதியற்று நின்றார்கள். காயம் பட்ட மக்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் காயத்தோடு வைத்தியசாலைகளில் இடமின்றி முகாம்களுக்குள் கிடக்க வேண்டி வந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும், யுவதிகளுக்குமாக புதிய புதிய முகாம்கள் முளைத்தன. அங்கு போனவர்களில் யாராவது மீள்வார்களா என்கிற ஒற்றைக் கேள்வி திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

பாராளுமன்றத்தின் சிம்மாசனத்தில் இருந்து, பிரிவினையை தோற்கடித்து நாட்டை மீட்டுவிட்டதாக குரக்கன் சால்வை அணித்த ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். உள்ளூர், உலக தொலைக்காட்சிகள் அதனை போட்டி போட்டு ஒளிபரப்புச் செய்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமற்போய், இலட்சக்காணக்கான மக்கள் அகதியாக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை, மனிதாபிமான நடவடிக்கை என்று அந்தக் குரக்கன் சால்வைக்காரர், சொல்லிக் கொண்டிருந்தார். ஒற்றைத் தேசியத்துக்காக ஒருங்கிணையுமாறு அவர் ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

முள்வேலி முகாம்களில் பாணுக்கும் பருப்புக்குமாக குழந்தைகள் முதல் நாளை மரணிக்கும் நிலையிலிருந்த கிழவர் வரையில் காத்திருந்தார்கள். மனது பயத்தினாலும், வயிறு பசியினாலும் நிரம்பியிருந்தது. அதனைக் கடத்தலே அப்போதைய ஒற்றைத் தேவையாக உணரப்பட்டது. இவ்வாறான காட்சிகளின் வழிதான் முள்ளிவாய்க்கால் என்ற பேரவல நாட்களை இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நேரடி அனுபவங்களாக கொண்டிருக்கிறார்கள். மாரி மழையைத் தாண்டிய உக்கிரத்தோடு கொட்டித்தீர்த்த எறிகணைகளுக்குள்ளும், குண்டுகளுக்குள்ளும் தப்பியவர்கள் தங்களின் அடுத்த நாள் குறித்த எதுவித நம்பிக்கையையும் கொண்டிருக்கவில்லை.

இன்றைக்கு பதினொரு ஆண்டுகளின் பின்னால் நின்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நோக்கும் போது, மாண்டவர்களுக்கான நீதி, காணாமற்போனவர்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல், மனிதாபிமான மாண்பு எல்லாமும் மீறப்பட்டமைக்கான எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இன்றி உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. வெற்றி பெற்றவர்களினால் எழுதப்படுகின்ற வரலாற்றின் வழி, உண்மையான நீதியின் கரங்கள் கட்டப்பட்டு அனாதையாக நிற்கின்றது. வெற்றி பெற்றவர்களின் நீதிக்கும் அநீதிக்கும் அதீத நெருக்கமுண்டு. அந்த நெருக்கத்தின் தீரத்தில் தென் இலங்கை இன்னும் குளித்துக் கொண்டிருக்கின்றது.

எல்லாமும் இழந்து கானல் வெளியில் நிற்கும் தமிழ் மக்கள், மாண்டுவிட்டவர்களுக்காக அஞ்சலி தீபத்தை ஏற்ற வேண்டி வந்திருக்கின்றது. அந்தத் தீபங்களின் ஒளியில் என்றைக்காவது மறுக்கப்பட்ட நீதியும், உரிமையும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எழுவதாக உணரப்படுகின்றது. அந்த உணர்வுதான், முள்ளிவாய்க்கால்களைக் கடந்தும் தமிழ் மக்களையும், போராட்ட உணர்வையும் தக்க வைப்பதற்கு ஒரே காரணமாக இருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உறங்கிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு இதய அஞ்சலிகள் செலுத்தும் மக்களோடு ...!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.