எமதுபார்வை
Typography

இறுதி மோதல்களின் போது இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர்  ஜெனரல் கமல் குணரத்ன, ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். இராணுவத்திலிருந்து தன்னுடைய சேவைக்காலம் நிறைவுற்று சென்ற மறுநாளே குறித்த நூலினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த நிகழ்வில் வெளியிட்டார்.

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள குறித்த நூல் தென்னிலங்கையில் பரவலான வரவேற்பைப் பெற்றது. அந்த நூலின் உள்ளடக்கத்தின் சில பகுதிகள் தமிழ்த் தளங்களினாலும் சிலாகித்து பகிரப்பட்டன. குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனி மனித ஒழுக்கம் மற்றும் போர்க்குணம் பற்றிய விடயங்கள்.

ஆனால், அந்த நூல் வெளிப்படையாக சில விடயங்களை முன்வைக்கின்றது. அது, மஹிந்த ராஜபக்ஷ - கோத்தபாய ராஜபக்ஷ சகோதரர்களே வெற்றி நாயகர்கள் என்பதையும், அதனை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான விடயங்களையும் முன்வைக்கின்றது. அதற்காக, அந்த நூலின் ஆசிரியர், இறுதி மோதல்கள் காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் போர்க்கால பங்களிப்பு தொடர்பில் மறைமுகமாக கேள்விகளை எழுப்புக்கின்றார். அடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளின் தலைவரை பாதுகாக்க முனைந்தன என்பதையும், அதனை தடுத்த பெருமை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கே உண்டு என்று கட்டமைக்கின்றார். அதற்காக, சீன இராணுவம் ஒத்துழைத்ததாகவும் கூறுகின்றார். இறுதியாக, இராணுவம் ஒட்டுமொத்தமாகவே ராஜபக்ஷக்களின் மீதான அபிமானத்தினைக் கொண்டது என்கிற நிலைப்பாடுகளையும் முன்வைக்கின்றது.

இராணுவத்தின் 53வது படைப்பிரிவும், அதன் கட்டளைத் தளபதியாக இருந்த கமல் குணரத்னவும் பாரிய போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அந்தப் புத்தகத்தில் பிரபாகரன் குடும்பத்தினர் எப்படி இறந்தார்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் கமல் குணரத்ன, 53வது படைப்பிரிவினால் பிடித்துச் செல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இராணுவத்துக்குள்ளும் சில தளபதிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதில், கமல் குணரத்னவும் ஒருவர். ஏனெனில், இறுதி மோதல்களில் படைகளை வழிநடத்திய ஒருவராக அவர், கோத்தபாய ராஜபக்ஷக்களின் நேரடி ஆணைகளுக்கு அமைய செயற்பட்டவர். குறிப்பாக, இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவின் ஆணைகளுக்கு அப்பால், கோத்தபாய ராஜபக்ஷவின் ஆணைகளையே நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் கவனம் பெற்றவர். இதன்விளைவாக, “இராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பது சில அதிகாரிகளின் விதி மீறல்களாக மாத்திரம் இருக்கின்றன. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று சரத் பொன்சேகா கூறுமளவுக்கு சென்றிருந்தது.

இந்த நிலையில், தென்னிலங்கையில் தேய்ந்து கொண்டிருக்கின்ற ராஜபக்ஷக்கள் மீதான போர் வெற்றி வாதத்தினை மீட்டெடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கமல் குணரத்னவின் நூலும் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, நூலின் சில பக்கங்களில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் மீதான எதிர்ப்பும் ஆங்காங்கு தலைகாட்டுவது அதன் நோக்கினை இன்னமும் வலுப்படுத்துகின்றது.

சீனாவின் பெரும் பிடியிலிருந்து விலகி, ஒரு வகையிலான இணக்கமான உறவினை மாத்திரம் கொண்டிருக்கின்ற மைத்திரி - ரணில் அரசாங்கம், மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளை என்கிற நிலையில், இந்த அரசாங்கம் இராணுவத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானது எனும் தொனியையும் வெளிப்படுத்துகின்றது. இதன்மூலம், இராணுவத்துக்குள்ளும் புதிய அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டினை ஏற்படுத்தலாம் என்ற கருத்தியலும் கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறான எண்ணப்பாடுகளை கமல் குணரத்ன தெளிவாக முன்வைக்க முனைந்திருக்கின்றார்.

இறுதி மோதல்களை முன்வைத்து கோத்தபாய ராஜபக்ஷ ஏற்கனவே நூலொன்றை எழுதியிருக்கின்றார். அதற்கு ‘கோத்தாவின் போர்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்தது. அதுபோல, தற்போது கமல் குணரத்னவும், ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூலை எழுதியிருக்கின்றார். அதுபோல, மறைந்த முன்னாள் போராளி தமிழினியும் தன்னுடைய அனுபவங்கள் சார்பில் நூலொன்றை எழுதியிருந்தார். போரில் வெற்றி பெற்ற தரப்பும்- தோல்வியுற்ற தரப்பும் தங்களின் அனுபங்களை பெரும்பாலும் எதிர்கால அரசியல் இருப்பு சார் நிலையில் எழுதி வருகின்றன. அது, இன்னமும் தொடரக் கூடும். அந்த நிலையில், ராஜபக்ஷக்களை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே கமல் குணரத்னவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ முயன்றிருக்கின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS