எமதுபார்வை

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

ராஜபக்ஷக்களின் கடந்த கால ஆட்சிக் காலத்திலும் ஒருமுறை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்துக்குள் பெற்றிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினைக் கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எல்லைகள் அற்ற அதிகாரங்கள் கொண்டதாக மாற்றினார்கள். நீதியாக செயற்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கினார்கள். எதிர்க்கட்சிகளுக்கான எந்தவித இருப்பையும் ஜனநாயக மாண்பையும் பாராளுமன்றத்துக்குள்ளோ வெளியிலோ வழங்குவதைத் தவிர்த்தார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஒருவர் இருக்க முடியும் என்கிற ஏற்பாடுகளைச் செய்தார்கள். இப்படி, பாராளுமன்ற ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் கட்டங்களையும், நீதித்துறையின் சுயாதீனத்தில் அதிகாரத்தினைக் கொண்ட தலையீடுகளையும் அதிகமாகவே செய்து வந்தார்கள்.

அப்படியான காலமொன்றை நோக்கிய பயணத்துக்கு இன்றைய தேர்தல் முடிவுகள் மீண்டும் கட்டியம் கூறியிருக்கின்றன. தென் இலங்கை பூராவும் ராஜபக்ஷக்களின் சிறீலங்கா பொதுஜன பெரமுன பெற்றிருக்கின்ற வெற்றி, அதிகாரத்தின் அத்துமீறல்களை மீண்டும் தோற்றுவித்துவிடக்கூடும் எனும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வரும் நோக்கோடு இருக்கின்ற ராஜபக்ஷக்கள், அதனூடு 13வது திருத்தச் சட்டத்தின் மீதான தாக்குதல்களையும் செய்யக்கூடும். அது, மாகாண சபைகளின் எஞ்சியுள்ள அதிகார எல்லையை மூடிவிடும் என்ற நிலையும் உண்டு.

ராஜபக்ஷக்கள் இன்றைக்கு பெற்றிருக்கின்ற வெற்றி, எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கான ஆட்சிக்கான ஏற்பாடுகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஏனெனில், எதிர்க்கட்சிகள் பல கூறுகளாக உடைந்து, படுதோல்வியடைந்திருக்கின்றன. வரலாற்றில் முதல் தடவையாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருப்பது பதியப்பட்டிருக்கின்றது. கொழும்பு தேர்தல் மாவட்டத்தில், நாடு முழுவதிலும்கூட அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று கடந்த காலங்களில் வெற்றிபெற்று வந்திருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய தோல்வி, அவரை மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியையும் முற்றாக அழித்தொழிக்கும் கட்டங்களுக்குள் நிறுத்தியிருக்கின்றது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, சுமார் 24 வீத வாக்குகளைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாகியிருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட அரசாங்கத்துக்கு எதிராக சஜித் பிரேமதாச என்ன செய்யப் போகின்றார் என்கிற கேள்வி எழுகின்றது. வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்றிருந்த, கூட்டமைப்பு இம்முறை 10 ஆசனங்களையே பெற்றிருக்கின்றது. இது, அந்தக் கட்சியைப் பொறுத்தளவில் பாரிய தோல்வியே. இந்தக் கட்சிகளோடு மூன்று நான்கு ஆசனங்களைப் பெறப்போகும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கப் போகின்றது. இந்தக் கட்சிகளினால் ராஜபக்ஷக்களின் எதேச்சதிரகாரத் திட்டங்களை எந்த விதத்தில் எதிர்கொள்ள முடியும் என்கிற கேள்வி எழுகின்றது. அப்படியான கட்டத்தில் முழு நாடும் அச்சுறுத்தலான புள்ளியில் நிற்பதாகவே உணரப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இதன் மறுபக்கமாக வேறு சிலவிடயங்களையும் அவதானிக்க முடிகிறது. தென் இலங்கையின் பாரம்பரியமான குடும்பங்களிடமிருந்து ஆட்சிஅதிகாரத்தை முற்றாகக் கைமாற்றியுள்ளார்கள் தென்னிலங்கைச் மக்கள். சர்வதேசத் தலையீடு, போர்க்குற்றச்சாட்டு, அதிகாரதுஷ்பிரயோகம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்ட நிலையிலும், சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவர்களாக அதிகாரம் பெற்றிருப்பது முக்கியமானது. தற்போது கிடைத்திருக்கும் அதிகார பலத்தினூடு தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிலிருந்து வெளியேறவும், நாட்டில் நல்லாட்சி ஒற்றைத் தோற்றவும் முயல்வார்கள் எனவும் எதிர்பார்க்கவும் முடியும். ஏனெனில் பாரம்பரியக் குடும்பங்களிலிருந்து ஆட்சியதிகாரத்தைப் பறித்தெடுத்திருக்கும் சிங்கள மக்கள், தமது மாற்று அரசியல் தலைமையாகத் தெரிவு செய்திருப்பது சஜித்பிரேமதாசவை. பிரேமதாச குடும்பமும் ராஜபக்க்‌ஷே குடும்பம் போல் சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள குடும்பம். ராஜபக்சே குடும்பம் போல ஆளுமைப் பலம் இல்லாவிடினும், சிங்கள் மக்கள் சஜித்தை நோக்கிச் செல்வதை, நீண்டகால ஆட்சியதிகாரம் குறித்த சிந்தனையில் இருக்கும் ராஜபக்ஷ குடும்பம் விரும்பாது. ஆதலால் முன்னைய காலங்களின் குற்றசாட்டுக்களை கூடிய வரையில் தவிர்த்துச் செல்லும் ஒரு ஆட்சியினையே நடத்திட முனைவார்கள் எனவும் எதிர்பார்க்கலாம்.

ராஜபக்‌ஷக்களின் இந்தப் பெருவெற்றி என்பது நன்கு ஒருங்கமைத்துப் பெறப்பட்ட பெருவெற்றி என்றால், சீர்குலைவால் சிதறிச் சின்னாபின்னமாகியுள்ளது தமிழ்மக்கள் வாக்குகள். இன்னும் சொல்லப் போனால் மக்கள் மனங்களைத் தமிழ் அரசியலாளர்கள் இன்னமும் அறிந்து கொள்ள, வென்றெடுக்கத் தவறியுள்ளனர். தமிழ் அரசியலாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், தற்போது சிறையிலும் உள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பெற்றிருக்கும் வாக்குகளின் தொகை ஆச்சரியமூட்டுவதுடன், சிங்கள மக்களைப்போலவே தமிழ்மக்களும் அரசியல் அதிகாரத்தின் இடம்மாறுதலை விரும்புகின்றார்கள் என எண்ணவும் தோன்றுகிறது. கொழும்பு மலையகம் சார்ந்து, மனோ.கணேசனின் வெற்றியும், அவரது கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ள பிரதிநிதித்துவங்களும், தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவத்தின் முக்கியமான பெறுபேறு என்பதுடன், தென்னிலங்கை அரசியலில் மனோ.கணேசனின் இலாவகமான அரசியல் நகர்வுகளுக்குக் கிடைத்திருக்கும் மக்கள் அங்கீகாரமாகவும் கொள்ளமுடியும்.

வடக்குக் கிழக்கில் தமிழ்மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமக்குத் தாமே வைத்துக்கொண்ட பொறிகளுக்குள் சிக்கித் திணறியுள்ளது. 10 ஆசனங்களைப் பெற்றிருக்கும் போதிலும், கடந்தகால முடிவுகளின் வழி நோக்கில், கூட்டமைப்பின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, மக்கள் மாற்றத்தின் வழி பயணித்திருப்பதாகவே ஊகிக்க முடியும். ஆனால் இந்த மாற்றச் சிதறல்களும், தனித்தனியான வெற்றிகளும், தெற்கில் எழுந்துள்ள பேரலையின் முன் என்ன செய்யமுடியும் ?.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.