எமதுபார்வை

‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், “கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக அதிகளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.”  

ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய ஜனநாயக இடைவெளியை தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆரோக்கியமான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களின் போக்கிலும், அதீத உணர்ச்சியூட்டல்கள் இல்லாமல் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியப் பரப்பினால் முன்வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை மீளவும் உறுதி செய்யக் கோரும் முகமாகவும் மக்கள்  எழுக தமிழில் இணைந்திருந்தார்கள்.

தேர்தல் அரசியலில் ஓரணியில் ஒன்றிக்கும் மக்கள், அதனைத் தாண்டி பொது நிகழ்ச்சி நிரலொன்றினூடான அரசியல் உரையாடல்களையும்- ஒன்றிணைவுகளையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென்னிலங்கை வாக்குறுதி அளித்த விடயங்கள் பலவற்றிலிருந்து மெல்ல நழுவிச் செல்லும் செயலினை குறிப்பிட்டளவில் கண்டிக்கும் முகமாகவும் மக்கள் இணைந்திருக்கின்றார்கள். 

இந்தக் கூட்டத்தில் 5000 பேர் கலந்து கொண்டிருந்தால், அதனை வெற்றிகரமான மக்கள் ஒருங்கிணைவாக கொள்ள முடியும் என்று கருதியிருந்தேன். ஆனால், அது 8000 பேரினையும் தாண்டியளவில் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆக, எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வெற்றி.

ஆனால், எழுக தமிழில் ஒருங்கிணைந்த தமிழ் மக்கள் தனிக்கட்சிகளின் சார்பிலானவர்கள் அல்ல. அவர்கள், கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களில் 80 வீதமானவர்கள். இதனை, அனைத்துத் தரப்புக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தல் வாக்களிப்புக்கு அப்பால், முறையான- தீர்க்கமான செய்திகளை சரியான வடிவத்தில் சொல்ல முயன்றால் அதன் பின்னால் மக்கள் இணைவார்கள் என்பதை அனைத்துத் தரப்பும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கும், எழுக தமிழ் உதவியிருக்கின்றது. 

தாங்கள் விடுகின்ற பிழைகளை அல்லது தங்களின் தோல்விகளை சரியான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற தரப்புக்களுக்கு, எழுக தமிழ் முக்கிய செய்தியைச் சொல்லியிருக்கின்றது. “ஊடகங்கள் புறக்கணிக்கின்றன, மக்களிடம் தமது செய்திகள் சென்று சேரவில்லை” என்கிற பிதற்றல்களுக்கு அப்பால், மக்களின் நம்பிக்கைப் பெறுதலே வெற்றிகளின் அடிப்படை. ஆக, இம்முறை ‘உதயன்’ எள்ளெண்ணை எரிக்குமாறு உபத்திரம் செய்த பின்னும் மக்கள் ஒருங்கிணைந்திருக்கின்றார்கள். இனி, உதயனின் உபத்திரம் பற்றிய பிதற்றல்கள் அவசியமற்றது. 

அடுத்து, எழுக தமிழ் கட்சிகளினால் மாத்திரம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால் அது சில நூறு பேரோடு கடந்து போயிருக்கும். மாறாக, பொது அமைப்புக்கள்- கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் பேரவையூடாக பொதுத் தளத்திற்கு வந்ததன் மூலமே கிடைத்த வெற்றி இது. அந்த வகையில், ஓய்வூதியர்களின் உரையாடல் தளமாக இருந்த தமிழ் மக்கள் பேரவை, எதிர்பார்க்காத அளவிலான வெற்றியொன்றை முதற்தடவையாக பதிவு செய்திருக்கின்றது. 

இந்த வெற்றியில், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், அது அவர்களின் தனிப்பட்ட வெற்றியல்ல. அவர்களது கட்சிகளினதும் வெற்றியல்ல.

எழுக தமிழ் பேரணியில் தமிழரசுக் கட்சி பங்குபற்றாது ஒதுங்கியிருப்பது அந்தக் கட்சியின் தனிப்பட்ட விடயம். ஆனால், அவசியமற்ற சில விடயங்களை செய்ய முனைந்து தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் மூக்குடைபட்டிருக்கின்றார்கள். அது, கட்சி என்கிற ரீதியில் கௌரவ குறைவாகவும் பதிவாகியிருக்கின்றது. 

இவ்வாறான காட்சிகளுக்கு அப்பால், எழுக தமிழின் முதல் வெற்றியை தொடர் வெற்றியாக மாற்றுவதற்கான படிமுறைகளை தமிழ் மக்கள் பேரவை எவ்வாறு செய்யப் போகின்றது என்பதில்தான் அதன் எதிர்காலம் தங்கியிருக்கின்றது. 

இந்த வெற்றியை தனிப்பட்ட அரசியலுக்காக பாவித்து தவறான அணுகுமுறையை யாராவது கையாள்வார்களானால் அது, முதல் வெற்றியோடு தோல்வியாகிப் போய்விடும். தமிழ் மக்கள் பேரவைக்கான வெளியும் இப்போது திறந்திருக்கின்றது. ஆனால், அந்த வெளியைப் பயன்படுத்துதல் என்பது பெரும் அர்ப்பணிப்பைக் கோருவது. அதனை வெற்றிகரமாக செய்வார்களா என்பதைத் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எழுக தமிழ் முதல் வெற்றியை ஆணித்தரமாக பதித்திருக்கின்றது!   

 

* 4tamilmedia-காக புருஜோத்தமன் தங்கமயில்

 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.