இலங்கை
Typography

உலகப் பொது மொழியான விளையாட்டினை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது.  அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சமாதானம், சகோதரத்துவம், மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி மனங்களை சுகப்படுத்தும் உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு பாடுபடுவோம்.

விளையாட்டு மைதானமென்பது, இன, மத, சாதி, மாகாண பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றிணையக்கூடிய இடமாகும். ஒழுக்கமற்ற சமூகத்தை ஒழுக்கமான சமூகமாக மாற்றும் விளையாட்டு மைதானம், தனிநபர்களிடம் ஒழுக்கத்தையும், பண்பையும் உருவாக்குவதற்கு உதவும்.

இன்று எமது நாட்டுக்கும், முழு உலகுக்கும் ஒழுக்க விழுமியங்கள் கட்டாயமான தேவையாக உள்ளது. ஒழுக்க விழுமியங்கள் இல்லாததால் உலகில் யுத்தம் நடைபெறுகின்றது. யுத்தம் இல்லாதொழிந்து சமாதானம் உருவாக வேண்டுமென்றால் முழு உலகிலும் ஒழுக்கநெறி பின்பற்றப்பட வேண்டும்.

நற்பண்பும், ஒழுக்கமும் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டுத்துறைக்கு  அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தற்போதைய அரசு பாடுபடுகின்றது. முழு நாட்டிலும் ஒரேவகையான அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடியவாறு நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகைளை உயர்த்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குகின்றோம்.

அதற்குத் தேவையான உயர் தரமுடைய விளையாட்டரங்குகள், நவீன தொழிநுட்பங்கள் உட்பட ஏனைய வசதிகளையும் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்க முயற்சிகளை எடுத்துள்ளோம்.” என்றுள்ளார்.

 

Most Read