எமதுபார்வை

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார். 

புதிய அரசியலமைப்பினை வரைவது தொடர்பில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழு முன்னிலை வகிக்க ஆறு உபகுழுக்களும் அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பு தொடர்பிலான முதல் அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள கருத்தானது பெரும் சர்ச்சையை தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது. 

புதிய அரசியலமைப்பு நாட்டில் தொடரும் இனமுரண்பாடுகளுக்கும், இன ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீர்வு வழங்க வேண்டும் என்பதே தமிழ் முஸ்லிம் மக்களின் பாரிய எதிர்பார்ப்பு. அப்படிப்பட்ட நிலையில், பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தினை மீளவும் உறுதிப்படுத்தும் முனைப்புக்களில் நல்லாட்சி அரசாங்கமும், அதன் தலைமைப்பீடத்தில் இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது என்பது அடிப்படையிலேயே பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவது மாத்திரமல்லாமல், ஏனைய மதங்கள்- மார்க்கங்களுக்கான சுதந்திரத்தினை இரண்டாம் நிலையில் வைத்து அணுகும் முறையாகும். இவற்றுக்கும் எதிராகவே கடந்த காலத்தில் தமிழ் மக்கள் போராடி வந்திருக்கின்றார்கள். 

அப்படிப்பட்ட நிலையில், நியாயமான இணக்கப்பாடுள்ள அரசியலமைப்பினை அமைக்க வேண்டிய தேவையை நாடு எதிர்கொண்டு நின்கின்றது. ஆனால், அதனைப் புறந்தள்ளும் நடவடிக்கைகளானது, நாட்டில் எதிர்காலத்தின் மீது கேள்விக்குறிகளை  வைத்துச் செல்வதாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை எனும் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வினையாற்றியிருக்கின்றது. 

கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கியிருக்கவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து மாத்திரமே இதுவரை பேசப்பட்டுள்ளது.  மதச் சார்பற்ற ஒரு நாடாகவும், அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலுமே புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இவ்வாறான நிலையில் எமக்கு உடன்பாடில்லாத விடயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றுரைத்திருக்கின்றார்.

ஏற்கனவே, ஒற்றையாட்சி வடிவத்துக்குள்ளேயே புதிய அரசியலமைப்பு வரையப்படும் என்று தென்னிலங்கை ஆணித்தரமான அறிவித்துள்ள பின்னணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்தளித்து நிற்கின்றது. இந்த நிலையில், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப இணங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளமையானது, ரணில் விக்ரமசிங்கவின் சித்து விளையாட்டின் ஒருபகுதியாகவே இருக்கும். இது, தமிழ் மக்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கமான அரசியலையும் புறந்தள்ளும் நடவடிக்கைகளாகும். 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..