எமதுபார்வை

“இலங்கையில் தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ, அதே போன்று படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கும்  இது வரை நீதி கிடைக்கவில்லை.” என்று வடக்கு- கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில், யாழ். ஊடக அமையத்தினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 

மிக நெருக்கடியான கால கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடகப் பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் படுகொலைகள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னரே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கையின் ஊடகச் சூழல் என்பது எப்போதுமே பெரும் அச்சுறுத்தலுக்குள்ளேயே இருந்து வந்திருக்கின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றமை அல்லது கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்படுகின்றமை, தாக்குதலுக்கு உள்ளாகின்றமை மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை அல்லது எரியூட்டப்படுகின்றமை உள்ளிட் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை நிகழ்த்துபவர்கள் மீதான நடவடிக்கையோ, வழக்கு விசாரணைகளோ நீதியாக முன்னெடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பதிவுகளைக் தேடினால் அது ஏமாற்றமான பதில்களை வழங்கும்.

அதுவும், வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட ஊடக அடக்குமுறை மற்றும் படுகொலைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளோ, நீதிக் கோரிக்கைகளோ இன்று வரைக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இன்றி தட்டிக்கழிக்கப்பட்டு வந்திருக்கின்றன. கடந்த அரசாங்க காலத்தில் வடக்கு- கிழக்கில் ஊடக சூழல் என்பது கிட்டத்தட்ட சிறைவைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. செய்தி சேகரிப்பதற்கோ, பத்திரிகைகளை விநியோகப்பதற்கு செல்பவர்கள் உயிரோடு திரும்புவார்களா என்கிற நம்பிக்கை சுத்தமாக இல்லாமல் இருந்தது. இதனாலேயே பல ஊடகவியலாளர்களும், பணியாளர்களும் புலம்பெயர்ந்து விட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்ற ஊடகவியலை தக்க வைப்பதென்பது முடியாத காரியமாகிப் போயிருக்கின்றது.

“நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப் பணியாளர்களை கொல்லவோ அல்லது காணாமற்போகவோ செய்துள்ளது. இவர்கள் எவர் தொடர்பாகவும் இன்று வரை இலங்கை அரசு வாய் திறக்கவில்லை. தென்னிலங்கையில் படுகொலையான அல்லது காணாமற்போயுள்ள எமது சக ஊடக நண்பர்கள் லசந்த விக்ரதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஊடகப் படுகொலைகளிற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க நல்லாட்சி எனச்சொல்லிக்கொள்ளும் இந்த அரசும் பாடுபட்டு வருகின்றது. ஆனால் இந்த விசாரணைகள் கூட தள்ளாடி வரும் நிலையில், தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளை பெயரளவினில் கூட இந்த அரசும் ஆரம்பிக்க தயாராக இருக்கவில்லை. இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர், ஊடக அமைச்சர், காவல்துறை அதிபர் என வடக்கு ஊடகவியலாளர்கள் பல தடவைகளாக கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும், அவற்றிற்கு உரிய அங்கீகாரமோ கவனமோ கொடுக்கப்படவில்லை. மாறாக அவை ஒதுக்கப்பட்டுள்ளன.” என்றும் யாழ். ஊடக அமையத்தின் அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது.

இதுதான், இன்றைய யதார்த்த நிலை. ஜனநாயக இடைவெளிகளின் கோரிக்கைகள் தொடர்பிலும், ஊடக சுதந்திரத்தின் உறுதிப்பாடு தொடர்பிலும் புதிய அரசாங்கத்திடமும் வடக்கு- கிழக்கு மாத்திரமின்றி ஒட்டு மொத்தமாக நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனாலும், கடிவாளமிட்ட நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் ஊடகங்களைக் கையாண்டு வருகின்றது.  

அதுவும், ஊடகவியலாளர்கள் படுகொலைகள், காணாமற்போதல்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் பாதுகாப்பு தரப்பினரின் அல்லது துணைக்குழுக்களின் பங்கு இருக்கலாம் என்கிற சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தில் அரசாங்கம் ஈடுபடுகின்றதோ என்கிற சந்தேகமும் ஏற்படுகின்றது. இவ்வாறான நிலை, இலங்கையின் ஊடக சூழலை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள் வைத்திருக்கும் நிலைகளுக்கான ஏற்பாடுகளையே வழங்கும். அது, எதிர்காலம் தொடர்பிலான அச்ச நிலையை ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்தும்.

“இலங்கையிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் நோக்கத்தை தெளிவாகக் கூறுவதற்கான உறுதிப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், முக்கியமானதும் அவசரமானதுமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.” என்று சிறுபான்மை இன மக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்த அவர், பத்து நாட்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். அவரின் மேற்கண்ட கூற்று சிறுபான்மை இனத்தவர்களை மாத்திரம் சுட்டிக்காட்டுவதாக கொள்ளாமல், ஊடகத்துறையில் ஈடுபடும் சிறுபான்மைத் தரப்பான ஊடகவியலாளர்களையும், பணியாளர்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், நீதிக் கோரிக்கைகளை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக அவர்களும் அல்லாடி வருகின்றனர்.

எந்தவித பேதங்களும் இன்றி படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம்  நிமலராஜன் தொடக்கம் லசந்த விக்ரமதுங்க ஈறாக படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும், ஊடகப் பணியாளர்களும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அடிப்படை அறமாகும். அதுதான், ஊடக சுதந்திரத்தின் அத்திவாரங்களை தொடர்ச்சியாக ஆட்டங்காணாமற் பாதுகாக்க உதவும். 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..