எமதுபார்வை

வடக்கு கிழக்கில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பொலிஸார், “மாணவர்களை சுட்டுக் கொல்வோம்” என்று அச்சுறுத்திச் சென்றிருக்கின்றனர். சக மாணவன் ஒருவரின் பிறந்தநாளுக்காக கேக் வெட்டிக் கொண்டாடியதையே பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிற ரீதியில் பொலிஸார் அணுகியிருக்கின்றார்கள்.  

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள், மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதிக்கு முதல் நாள் வருவதும் பாதுகாப்புத் தரப்பினரை அச்சுறுத்தலோடு கடந்த காலங்களில் உணர வைத்திருக்கின்றது. பிரபாகரனின் பிறந்த நாளில் பெரிய இராணுவத் தாக்குதல்களை நடத்தி புலிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்பது இலங்கை அரச படைகளின் கடந்த கால உணர்நிலை. அது, புலிகள் ஆயுதப் போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னராக கடந்த ஏழு ஆண்டுகளிலும் நீடித்து வந்திருக்கின்றது. அதன்போக்கில், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய போராட்டங்கள் வீச்சம் பெற்ற பகுதிகளை அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளாக இலங்கை அரச இயந்திரமும், அதன் படைக்கட்டமைப்பும் இன்னமும் நினைத்துக் கொள்கின்றன. அவ்வாறான நிலைப்பாடு, மாணவர்களை அச்சுறுத்தலுக்குள் தள்ளியுள்ளதுடன், கல்வி கற்றலுக்கான உரிமையிலும் பாரிய மீறல்களை செய்ய வைத்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் அச்சுறுத்தல்கள் குறைந்திருந்தாலும், அதன் இடைவெளி மிகவும் குறைவாகும். இலங்கையின் தேசியப் புலனாய்வுப் பிரிவும், அதனால் வழிநடத்தப்படும் தரப்புக்களும் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு மாத்திரமின்றி, இறந்த உறவினர்களை நினைவுகூரும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதைக் கூட தடுக்கும் வேலைகளைச் செய்து வருகின்றன. இது, ஒவ்வொரு மே மாதத்திலும், நவம்பர் மாதத்திலும் அதிகமாகி மக்களை அச்சுறுத்துகின்றன. 

இறந்தவர்களை, அவர்கள் எவ்வாறு உயிரிழிந்தாலும், என்ன காரணத்திற்காக உயிரிழந்திருந்தாலும் நினைவு கூருவது மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, மீறுவது ஜனநாயகம் அல்ல. ஆயினும், இலங்கை அரசும், அதன் இயந்திரமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது. அது, மாவீரர் தின நினைவு நிகழ்வுகளை நடத்த அனுமதிப்பதில்லை. அந்த  நிகழ்வுகள் தொடர்பில் கவனம் செலுத்துபவர்களையும் அச்சுறுத்தியும், கைது செய்தும் பணிய வைக்கின்றது. 

சர்வதேச விழுமியங்கள் மற்றும் சட்டத்துக்கு ஏற்ப உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிப்பதைத் தடுப்பது பாரிய குற்றமாகும். ஆனாலும், அதனை இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இந்த முறையும் மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மக்களினால் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்படவிருந்த அஞ்சலி நிகழ்வுகளும், கோவில் தேவாலய பூசைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. அல்லது. அதனை ஏற்பாடு செய்யாமல் இருப்பதற்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. 

இனமுரண்பாடுகள் கோலொச்சும் இலங்கையில், தொடர்ச்சியாக தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதுதான், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களை தோற்றுவித்தது. அப்படியான நிலையில், தமக்காக உயிரிழந்தவர்களை தமிழ் மக்கள் அஞ்சலிப்பதும், பூசிப்பதும் தார்மீகம். அந்த தார்மீகத்தின் மீது இலங்கை அரசும், அதன் கட்டமைப்பும் மீண்டும் காட்டுமிரண்டித்தனத்தினை வெளிப்படுத்தி அடக்கியொடுக்க முனைகின்றன. இது, என்றைக்குமே நல்லிணக்கத்திற்கோ- பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு தீர்வு காண்பதற்கோ உதவாது!

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..