எமதுபார்வை

தமிழக அரசியலில் அதியுச்ச அதிகாரத்தோடு வலம் வந்த தலைவர் ஒருவரின் மறைவுக்குப் பின்னரான தருணங்கள் இராணுவ ஒழுங்குடனும், திட்டமிடலுடனும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவும், அவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் நிறைந்தவை. அந்தக் கேள்விகள் பெரும்பாலானவற்றுக்கு இன்னமும் பதில்கள் ஏதும் சம்பந்தப்பட்டவர்களினால் வழங்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா ஜெயராம் என்கிற ஆளுமை தற்போது அரங்கில் இல்லை என்பது மாத்திரம் உண்மை. அந்த உண்மையை இயல்புக்கு மாறிய வேகத்துடன் உள்வாங்கி பிரதிபலித்ததில் அரசியல் அதிகாரத்தளம் முக்கியமானது.  

ஜெயலலிதா ஜெயராம் மறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு (டிசம்பர் 05 நள்ளிரவு, 2016) இரண்டு மணித்தியாலங்களுக்குள் புதிய முதலமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்றுவிட்டது. முதல்வரின் மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்டு 18 மணித்தியாலங்களுக்குள் அவரது உடலமும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக ‘அதிமுக’) பொதுச் செயலாளராக 25 வருடங்களுக்கும் மேலாக பதவி வகித்த ஒருவர் மறைந்த பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக போதிய நேரம் ஒதுக்கப்படாமல் ஏன் குறுகிய காலத்துக்குள்ளேயே அவரது உடலம் அடக்கம் செய்யப்பட்டது என்கிற ஆதங்கம் கட்சியின் கடைக்கோடித் தொண்டனுக்கும், ஜெயலலிதா ஜெயராமை ‘அம்மா’ என்று உளமார அழைத்த கோடிக்கணக்கான மக்களுக்கும் உண்டு. 

இன்றைக்கு (டிசம்பர் 10, 2016) புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவையின் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. ஜெயலலிதா ஜெயராம் முதலமைச்சராக இல்லாமல் அதிமுக அரசின் அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், அது, அவரின் ஆளுமையின்றி நடத்தப்பட்டிருக்கவில்லை. அவர், சிறையிலிருந்த காலங்களிலும், நீதிமன்ற தீர்ப்புக்களினால் பதவி நீக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் தற்காலிக முதலமைச்சரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டங்கள் என்று பெயரளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கூட்டங்களில் இறுதி முடிவுகள் ஜெயலலிதா ஜெயராம் என்கிற தனி மனுஷியினால் எடுக்கப்பட்டவை. 

அதிமுக ஜெயலலிதா ஜெயராமின் அதிகாரத்தின் கீழ் வந்த பின்னர், அந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் என்கிற பேச்சுக்கெல்லாம் இடமிருக்கவில்லை. (எம்.ஜி.ஆர் காலத்திலும் அது இருக்கவில்லை) கிட்டத்தட்ட ஆண்டான்- அடிமை ஒழுங்குமுறையே இருந்து வந்திருக்கின்றது. அது,  உத்தியோகபூர்வமாக விடுபட்ட கடந்த 5 நாட்களில் அதிமுக முக்கியஸ்தர்களின் நடத்தைகளின் ஒழுங்கில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன, புதிய முதலமைச்சரின் கீழான அரசின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியெல்லாம் நிறையக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, மாநில அரசு, மத்திய அரசின் அதீத தலையீட்டுக்கு உள்வாகும் வாய்ப்புக்களை சந்தித்து நிற்கப்போகின்றதோ என்கிற அச்சமான சூழல் எதிர்கொள்ளப்படுகின்றது.

தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளை பின்தள்ளி திராவிடக் கட்சிகள் ஆட்சி பீடம் ஏற ஆரம்பித்து இன்றைக்கு 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதில், திராவிடக் கட்சிகளுக்கு என்று சில ஒழுங்குகள் உண்டு. அதற்கு தமிழக மக்களும் பழக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். தென்னிந்தியாவிலேயே தேசியக் கட்சிகள் அதிகம் தலையீடு செய்ய முடியாத சட்டப்பேரவையைக் கொண்டிருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். தற்போது, அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திராவிட ஒழுங்கு அரசியலில் சிதைவு ஏற்பட்டுவிடுமோ என்கிற உணர்நிலையொன்று தமிழக அரசியலை ஒட்டுமொத்தமாக அலைக்கழிக்கின்றது. ஜெயலலிதா ஜெயராம் ஆட்சியில் இருக்கும் வரையில் ‘இந்து மேலாதிக்கவாத மனநிலைவாதி’ என்று குற்றஞ்சாட்டி வந்த திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக), திராவிடர் கழகமும் அவரின் மறைவுக்குப் பின்னர், அவரை திராவிட அரசியலில் காவற்தெய்வமாக சித்தரித்திருக்கின்றன.

இன்னொரு பக்கம், அதிமுக என்கிற நீண்டு வளர்ந்துள்ள பெரிய கட்சியொன்றின் அதிகாரம் யார் யாரிடம் எல்லாம் சென்று சேரப்போகின்றது என்கிற விடயம் அதிக கவனம் பெறுகின்றது. ஜெயலலிதா ஜெயராம் இருக்கும் வரையில் அதன் ஒட்டுமொத்த அதிகாரமும் அவரிடமே இருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற அவரது பதவியே கட்சியின் எல்லாமுமாக இருந்தது. இப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மாத்திரமல்லாமல், மற்றைய பதவிகளை வகிக்கப் போகும் நபர்கள், ஜெயலலிதா ஜெயராம் காலத்து ஒழுங்குக்கு உட்படுவார்களா, அல்லது எதிர்வினையாற்றி தங்களது அதிகார எல்லைகளை விஸ்தரித்துக் கொள்வார்களாக என்கிற விடயமும் மேல்நோக்கி வருகின்றது. 

குறிப்பாக, அதிமுக அதிகாரபீடத்துக்கான போட்டியில் சாதி ரீதியிலான ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், தமிழகத்தின் புதிய முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் என்ன வகிபாகத்தை எடுத்துக் கொள்ளப் போகின்றார் என்பதுவும், ஜெயலலிதா ஜெயராமின் தோழியான சசிகலா நடராஜனின் நடவடிக்கைகள் கட்சிக்குள் என்னமாதிரியான மாற்றத்தைச் செய்யப் போகின்றது என்பதுவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.

அரசியல், அதிகாரம், ஆட்சி என்று எங்குமே எவருடைய வெற்றிடமும் என்றைக்குமே வெற்றிடமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. அது எவ்வாறாவது நிரப்பப்படும். நியாயமான ஆளுமைகளினால் நிரப்பப்படுமா என்பதே தொண்டர்களினதும் பொதுமக்களினதும் அதிகபட்ச ஆசையாக இருக்கின்றது. மாறாக, ஆளுமையற்றவர்களினால் நிரப்பப்படும் வெற்றிடம் பல நேரங்களில் எல்லாவற்றையும் செல்லரிக்கப் பண்ணி அத்திவாரங்களையே அசைத்துவிடும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஜெயராம் என்கிற ஆளுமைகளினால் வளர்த்து எடுக்கப்பட்டு உச்சம் தொட்டு ‘புனித ஜார்ஜ் கோட்டை’யை பலமுறை ஆண்ட அதிமுக என்கிற கோட்டையின் அத்திவாரத்தை காப்பாற்றிக் கொண்டு முன்னோக்கி பயணிக்கும் தலைமையாக யார் வருவார்கள் என்பதுதான் அந்தக் கட்சியின் கடைநிலைத் தொண்டனின் இன்றைய எதிர்பார்ப்பு?!

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.