எமதுபார்வை

போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு ‘பொதுமன்னிப்பு’ அளிக்கப்படக்கூடாது என்பதை நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கை வலியுறுத்துகின்றது. 

‘பொதுமன்னிப்பு’ என்கிற விடயத்தின் ஊடக நீதிக்கான கோரிக்கைகளை எம்பிக் கடக்கலாம் என்கிற தென்னிலங்கையின் நிலைப்பாட்டினை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை குறிப்பிட்டளவில் நிராகரித்திருக்கின்றது.

அத்தோடு, இறுதி மோதல்களின் போதான மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட கடந்த கால குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறை என்பது கலப்பு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் நல்லிணக்கச் செயலணி, ஒவ்வொரு அமர்விலும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதியின் பங்களிப்பை உறுதி செய்யக் கோருகின்றது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணி, மக்கள் கருத்தறியும் அமர்வுகளை நடத்தி சுமார் 7300 பங்குபற்றுனர்கள் மற்றும் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்று தன்னுடைய இறுதி அறிக்கையை தயாரித்திருக்கின்றது. கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி இறுதி அறிக்கையை நல்லிணக்கச் செயலணி தயாரித்திருந்த போதிலும், அதனை அரச தலைமை பெற்றுக் கொள்வதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் வரை அலைக்கழிப்பினை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது.

இறுதி அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாட்டமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதியும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை. இது, மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக, அரசாங்கம் அமைத்த செயலணி ஒன்றின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கே அரச தலைமை தயங்குவது என்பது தென்னிலங்கையின் அரசியல் கோணல் பக்கத்தினை மீண்டும் பிரதிபலித்திருந்தது. (ஜனாதிபதி சுகவீனமுற்றிருப்பதால் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. எனினும், உறுதி செய்ய முடியவில்லை). அத்தோடு, இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன மாதிரியாக இருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இது, ஏமாற்றமான செய்தியாகப் பதிந்தது.

நல்லிணக்கச் செயலணியின் இறுதி அறிக்கையும், அதிலுள்ள பரிந்துரைகளும் அரச தலைமைகள் மாத்திரமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்புக்களும் படித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக அடையாளப்படுத்த முடியும். ஏனெனில், வடக்கு- கிழக்கு, தெற்கு என்று போரின் விளைவுகளை தாங்கி நிற்கின்ற குறிப்பிட்டளவானவர்களின் குரல்களை அந்த அறிக்கை பருமட்டாக பிரதிபலிக்கின்றது.

இன்னொரு பக்கம், மக்கள் ஒரு விடயம் சார்ந்து அதிகம் மையப்படுத்தப்பட்டிருப்பதையும், கடந்த காலக் கொடூரங்கள் பல தொடர்பில் அவர்கள் மறந்து போய்விட்டதை அல்லது கருத்துக் கூறுவதிலிருந்து தவறியிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடியும். அது, நீதி கோரலுக்கான கோரிக்கைகளோடு இருக்கின்ற சமூகம் மிகவும் அவதானம் செலுத்த வேண்டிய பரப்பு. ஏனெனில், ஒரு விடயத்தில் குறிப்பாக, இறுதி மோதல் குற்றங்களில் மாத்திரம் கவனம் செலுத்திவிட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுத வன்முறைகள், படுகொலைகள், கலவரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதிலிருந்து பெரும்பாலும் தவறியிருப்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பவற்றில் சில:

1. போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச நியமங்கள் உள்நாட்டு சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட தரப்புக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், அவர்களின் நீதி கோரலுக்கான உரிமை காக்கப்பட வேண்டும்.

3. நீதிப் பொறிமுறை மீதான நம்பிக்கையீனங்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

4. உணவு விநியோகத்தடை, இராணுவத்திடம் சரணடைந்தோர் காணாமற்போனமை, பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை உள்ளிட்டவை கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டும்.

5. இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் தடுத்து வைத்துள்ளவர்களை விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் நீக்கம் ஆகியன நம்பிக்கையூட்டும் பொறிமுறைக்கான அவசியம்.

6. 1983 தமிழர்கள் மீதான படுகொலைகள், யாழிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, யாழ். வைத்தியசாலை படுகொலைகள், தலதா மாளிகை தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் பள்ளிப்பாடங்களில் மனித உரிமைத் தாக்குதல்களுக்கான உதாரணங்களாக உள்ளடக்கப்பட வேண்டும். அது, படிப்பினைகளாக காக்கப்பட வேண்டும்.

7. நினைவுச் சின்னங்களை எழுப்புவதற்கான அரசின் உரிமை என்பது, ஏற்கனவே இருக்கும் நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கான உரித்து ஆகாது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

8. இராணுவ நீக்கம் என்கிற பகுதியினூடாக இராணுவ ஆட்குறைப்பு அவசியமானது என்று வலியுறுத்தும் நல்லிணக்கச் செயலணி, இராணுவ ஆட்குறைப்பு என்பது புனர்வாழ்வுத் திட்டங்களினூடு நிகழ வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அத்தோடு, இராணுவத்தின் சிவில் நிர்வாகத் தலையீடுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

9. மதசார்பற்ற அரசை நோக்கிய அர்த்தமுள்ள பயணத்தை வலிறுத்துகின்றது.

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.