எமதுபார்வை
Typography

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 

குறித்த தீர்மானத்தினை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், அதன் இணை அனுசரணையாளராக இலங்கை தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம், தான் சர்வதேச நியமங்களின் கடப்பாடுகளுக்குள் ஒன்றினைவதாக காட்டிக் கொண்டது. இதன்பிரகாரம், கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கான முன் நகர்வுகள் தொடர்பில் இலங்கை இம்முறை தன்னுடைய விளக்கங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றது. சுமார், 10 மாத கால அவகாசத்தின் பின்னரான அறிக்கையிடலாக அது அமையப் போகின்றது.

எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையில் அல் ஹுசைன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார். அப்படிப்பட்ட நிலையில், கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்றுக்கான விடயத்தை முற்றுமுழுதாக புறந்தள்ளிவிட்டு, உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றுக்கான அடிப்படைகளுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம் அது தொடர்பிலேயே தன்னுடைய அறிக்கையை முன்வைக்கப் போகின்றது.

நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கான பணியகம், காணாமற்போனோர் தொடர்பிலான தனிப் பணியகம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றான புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியே இலங்கை ஐக்கிய நாடுகளின் தன்னுடைய விடயங்களை இம்முறை தெளிவுபடுத்தப் போகின்றது. இதன்மூலம், பெரிய கால அவகாசமொன்றை இலங்கை பெற்றுக் கொள்ளும். அதனூடு, நீதிப்பொறிமுறையொன்றுக்கான முக்கிய புள்ளிகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்பதில் குறியாக இருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகளை முழுமையாக அகற்றுவதற்கான முனைப்புக்களில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அண்மையில் பெருமிதம் வெளியிட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றிய நம்பிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வாறு இறுதி செய்யப் போகின்றது என்கிற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக, இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படவுள்ள காணாமற்போனோர் தொடர்பிலான தனிப் பணியகம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்தவிதமான ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை. அதுபோலவே, எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்து பணியகங்களும், நீதிப் பொறிமுறை ஆணைக்குழுக்களும் மாறுமா என்கிற சந்தேகம் நீடிக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தரப்பே நீதி விசாரணையாளர்களாகவும் இறுதி செய்யப்படப் போகின்றார்கள். அது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிரந்தரமாக இல்லாமற் செய்யும் ஏதுகைகளோடு முடிந்து போகலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS