எமதுபார்வை

இன்றைக்கு சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னர், அதாவது 2015, டிசம்பர் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “யாழில் 26 வருடங்களாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி முகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சொந்தக் காணிகளில் அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.” என்று வாக்குறுதி வழங்கியிருந்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய காலக்கெடு இன்றோடு (2016, ஜூன் 20) முடிவடைகின்றது. ஆனால், வலிகாமம் மக்களின் மீள்குடியேற்றம் என்பது பகுதி பகுதியாக, அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தொடர்கின்றது. இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள 5000 ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகளின் நிலை என்ன? அது மீள வழங்கப்படுமா?, என்கிற சந்தேகத்தின் அளவு மாத்திரம் எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி நீடிக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றின் போது வலிகாமம் வடக்கு உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் இராணுவ முகாம்களை அகற்றுவது மற்றும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது உள்ளிட்ட விடயங்களுக்கு இராணுவம் உள்ளிட்ட முப்படையும் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, ஜனாதிபதி மாற்றுவழிமுறைகள் தொடர்பில் சிந்திக்க தலைப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தென்னிலங்கையை நோக்கியும் வடக்கின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக கூறி வருகின்ற ஜனாதிபதியினால், செயற்பாட்டு வடிவம் என்கிற நோக்கில் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியவில்லை. அவரின் வாக்குறுதிகளில் தெரியும் உறுதிப்பாடு, செயற்பாட்டுத் திறனில் இல்லை. இது, காலம் காலமாக தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடம் வெளிப்படுகின்ற குணங்களில் ஒன்று.

தெல்லிப்பழையிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்த பின்னரே மீள்குடியேற்றம் ஆறு மாத காலத்துக்குள் செய்து முடிக்கப்படும் என்கிற உறுதிமொழியினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். அத்தோடு, அவர், “இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்படும்.” என்றார்.

அவர் வழங்கிய உறுதிமொழிகளின் பிரகாரம் ஜனாதிபதி விசேட செயலணி அமைக்கப்பட்டது. ஆனால், அது எந்தவிதமான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக எடுத்தது என்பதுவும் கேள்விக்குறி.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (2016, ஜூன் 18) துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலிகாமம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஒற்றை வார்த்தையேனும் பேசவில்லை. மாறாக, நல்லிணக்கம் பற்றிய போதனைகளில் ஒருமாதிரியாக ஈடுபட்டார். தான் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டனவா என்கிற கேள்விகளை அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

மீள்குடியேற்றம் தொடர்பிலான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்ற ஒவ்வொரு தடவையும் முகாம் வாழ்க்கை எனும் கொடுமையிலிருந்து விடுதலை பெறப்போகின்றோம் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் மக்கள், அந்த வாக்குறுதிகள் பொய்யாகும் போது முகாம்களின் தகரத்தின் வெக்கைகக்குள் வெதும்பிப் போகிறார்கள்… எல்லாவற்றுக்கும் அப்பால் வாழ்க்கை மீதான வெறுப்போடு சோர்ந்து போகின்றார்கள்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.