எமதுபார்வை

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதல் பெரும் இனவாதத்தின் நீட்சிக்கு நீருற்றியிருக்கின்றது. இனவாதம் தலைவிரித்தாடும் நாடொன்றின் நிகழ்வுகள் பெரும்பாலும் இனவாத அடிப்படைகளில் கட்டமைக்கப்படுவதும், நீள்வது இயல்பானதுதான். ஆனால், ஒவ்வொரு படியும், அதன்போக்கில் கொண்டு செலுத்தப்பட்டு இனவாதிகளின் ஆதிக்க- குரோத அரசியலுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துவிடுவதுதான் பெரும் அச்சுறுத்தலானது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கண்டிய நடனம் உள்ளக்கப்பட வேண்டும் என்கிற சர்ச்சை வலுப்பெற்று மோதலாக மாறியிருக்கின்றது. அது, தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையிலான பெரும் மோதல் என்கிற தோற்றப்பாட்டோடு வெளியில் கொண்டு செல்லப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டது. தென்னிலங்கையும், வட இலங்கையும் தம் சார்பு இனவாத மனநிலையிலிருந்து விடயத்தினை அணுகி சிக்கலை மேலும் வலுப்படுத்தின.

குறிப்பாக, சமூக ஊடகங்களும், இனவாத அரசியல்வாதிகளும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் அதீத ஆர்வம் காட்டினர். தொடர்ச்சியாக கருத்துரைத்தும்- இனவாத அலைகளைத் தோற்றுவித்தும் நீச்சலடிக்க முயன்றனர். தெற்கின் இனவாத அரசியல்வாதியாக பார்க்கப்படுகின்ற பட்டாலி சம்பிக்க ரணவக்க, “வடக்கில் நீளும் புலி ஆளுமை அடக்கப்பட வேண்டும்“ என்றார். அதாவது, தமிழ் மக்களின் காணப்படுகின்ற போராட்ட மனநிலையை சிதைக்கப்பட வேண்டும் என்ற தோரணையில் கருத்துரைத்து சிங்கள மக்களிடம் உணர்ச்சிமயப்படுத்தலை அதிகப்படுத்தினார். இது தென்னிலங்கையிலிருந்து வெளிப்பட்ட இனவாதத்துக்கான சின்ன உதாரணம்.

வடக்கிலோ, தமிழ்த் தேசியம் என்கிற உணர்நிலையில் நின்றுகொண்டு தமிழ் இனவாதம் பற்றிய உரையாடல்களை சிலர் செய்ய முயன்றார்கள். இனவாதத்துக்கும்- இன உணர்வுக்கும் இடையிலான வித்தியாசத்தை அதிக தருணங்களில் பலரும் உணர்வதில்லை. தமிழ்த் தேசியம் என்பது தன்னுடைய பாரம்பரியம், அடையாளம், பாதுகாப்பு, அரசியல் உள்ளிட்டவற்றை தக்கவைக்கும் முனைப்பாகும். மாறாக, இன்னொரு இனத்தின், சமூகத்தின் அடிப்படைகளை மறுதலித்து, ஆளுமை செலுத்தும் ஒன்றல்ல. அது, தமிழ் தரப்பில் பெரும்பாலும் உணரப்பட வேண்டிய ஒன்று. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதலின் பின்னர் சமூக தளங்களில் கருத்து வெளியிட்ட தமிழர்களில் பலரும் இனவாத தொனியிலேயே கருத்துரைத்தனர். குறிப்பாக, தென்னிலங்கை உதிர்க்கும் இனவாதத்துக்கு சளைக்காத இனவாதத்தை வெளிப்படுத்த தயாரானார்கள்.

அடிப்படையில், தெற்கும்- வடக்கு முரண்பாட்டின் நீட்சி. அது, அரசியலின் போக்கில் கையாளப்பட வேண்டியது. பல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. இங்கு மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலின் அனைத்துப் பக்கங்களும் ஆராயப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது, மீண்டுமொரு மோதலை உருவாக்காதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் தமிழ்த் தரப்பு புரிந்து கொள்ள வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது, தென்னிலங்கை இனவாத தரப்பும், அதுசார் தளமும் வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக குழப்பங்களை ஏற்படுத்துதில் அக்கறையோடு இருக்கின்றது. அதனை உணர்ந்து கொண்டு விடயங்களைக் கையாளும் நிலைக்கு செல்ல வேண்டும். மாறாக, அந்த வலைக்குள் சிக்கி சீரழியும் நிலைக்கு செல்ல முடியாது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சபை வெளியிட்ட அறிக்கை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அதாவது, “மோதலுக்கு காரணமான மாணவர்களின் ஆதங்கங்கள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.“ என்பது. ஏனெனில், சின்ன பிரச்சினைகளை தீவிரமான பிரச்சினைகளாக மாற்றி குளிர்காய்வதற்கு பல தரப்புக்களும் காத்திருக்கும் போது, விடயங்களை புத்திசாலித்தனமாக அணுகி அமைதியைப் பேணுவது அவசியமானது. அதுதான், மாணவர்களின் கல்வியையும் சீரழிக்காமல் இருக்கும்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.