எமதுபார்வை

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகின்றது. ஆயுத மோதல்களுக்கான தோற்றுவாய் எது, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அதன் விளைவுகளின் நீட்சி நாட்டுக்குள் செலுத்தும் தாக்கம் எவ்வகையானது?, என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்பட வேண்டிய காலகட்டமொன்றுக்குள் நாடு தொடர்ந்தும் இருக்கின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களின் நியாயப்பாடுகளை உணர்ந்து கொள்வதற்கான முனைப்புக்களும், ஒற்றையாட்சிக்குப் பதிலாக ஒன்றிணைந்த ஆட்சி என்கிற தமிழ் மக்களின் கோரிக்கைக்கு பின்னாலுள்ள நல்லிணக்க அதிகாரப் பகிர்வு முனைப்புக்கள் பற்றியும் நாடு சீக்கிரமாக விவாதித்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டதும் இலங்கை அரசாங்கம் அதனை போர் வெற்றியாக பிரகடனப்படுத்திக் கொண்டதும், அந்தப் போர் வெற்றியை சிங்கள மக்களின் ஆணவம் என்கிற வகையில் பிரச்சாரப்படுத்திக் கொண்டதும் நாட்டை வேறுவகையான அச்சுறுத்தலுக்குள் கொண்டு சேர்ந்தது. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முனைப்புக்கள் எப்போதுமே வெற்றி மமதையுடனும், இறுமாப்புடனும் இருந்தன.

ஆனால், வெற்றி வாதத்திலும், ஆணவ மனநிலையினாலும் முரண்பட்டுக் கிடக்கின்ற சமூகங்களை இணைக்க முடியாது. அது, நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களின் தொடக்கப்புள்ளியும் அல்ல. ஆனால், அப்படிப்பட்ட முனைப்புக்களையே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டது. அது, முற்றுமுழுதாக முரண்பாடுகளை அதிகரிக்க மாத்திரமே செய்தது.

இப்படியான நிலைமைகளுக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் கூட நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை இடைநடுவிலிருந்து ஆரம்பித்திருக்கின்றதோ என்கிற அச்சவுணர்வு ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான சில நடவடிக்கைகளையும் நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். இப்படியான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது, “26 வருடங்களுக்கு அதிகமாக யுத்தத்துக்கு  முகம்கொடுத்து வந்திருப்பதுடன், பெரும்பாலும் யுத்தவெற்றி பற்றியே கதைத்தும் வருகின்றோம். அப்படியிருந்த போதும், யுத்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது பற்றி, இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சரியாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின், அதுவே பிரச்சினையாக அமைகின்றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு, யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும், தனி ஈழத்துக்கான கனவு தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். இந்நிலைமையை, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனி ஈழத்துக்கான கனவினை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாத ஒன்றாகும்.” என்றிருக்கின்றார்.

முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய உரையாடல் போர் வெற்றி வாதத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருக்கின்றார். அவர் குறிப்பிட்டுள்ளது போல “யுத்தம் ஏற்பட என்ன காரணம்?” என்பது பற்றி கவனம் செலுத்தி உரையாட வேண்டும். அதற்கு அவர் தலைமையிலான அரசாங்கம் தலைமையேற்று அக்கறையான முனைப்புக்களை செய்ய வேண்டும். அதில், நெஞ்சுரமும், நேர்மையும் அவசியம். மாறாக, வாய் வழி பேச்சாக போய்விடக் கூடாது.

சந்தேகங்களின் வழி நல்லிணக்கமும், நட்பும் என்றைக்குமே சாத்தியமில்லை. யுத்தமொன்றுக்கு பின்னாலிருந்து அல்ல… அந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டு சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும். அதுவே, இன முரண்பாடுகளை நீக்குவதற்கான முதற்புள்ளியாக இருக்கும்!

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.