எமதுபார்வை

இன முரண்பாடுகளினால் பிரச்சினைகளின் தீவிரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இலங்கையில், மத வேறுபாடுகள் தாண்டி சித்திரைப் பிறப்பினை புதிய வருடமாக கொண்டாடும் வழக்கமொன்று இருக்கின்றது. அதாவது, தமிழ் இந்துக்களும், சிங்களப் பௌத்தர்களும் சித்திரைப் பிறப்பினையே தங்களுடைய புதிய வருடமாக கொள்கின்றனர். அனுஷ்டிக்கின்றனர்.

மேற்குநாடுகளில் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரங்கள் விடுமுறைகளினால் நீள்வது போல, இலங்கையில் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி தேசிய விடுமுறைகளினால் நீளும். தொழில் வாய்ப்புக்களுக்காக பெருநகரங்களில் வசிக்கின்றவர்களின் பெரும்பான்மையினர் தங்களது வீடுகளைத் தேடிச் செல்வார்கள். வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும்.

இனமுரண்பாடுகள் நீண்டாலும் சித்திரைப் பிறப்பினை தேசிய பண்டிகையாக அல்லது அதனையொத்த கருத்தாக்கத்தோடு எதிர்கொள்ளும் பெரும் தரப்பொன்று இலங்கையில் உண்டு. ஏனெனில், இலங்கையின் 80 வீதமளவான மக்கள் அனுஷ்டிக்கின்ற ஒரே பண்டிகையாக சித்திரைப் பிறப்பு கொள்ளப்படுகின்றது.

சித்திரைப் பிறப்பினை வரவேற்பதிலும், அனுஷ்டிப்பதிலும் பெருமளவு ஒன்றுமையை தமிழ்- சிங்கள சமூகங்கள் பகிர்கின்றன. ஆனால், அந்த ஒற்றுமையின் நீட்சியை அல்லது சித்திரைப் பிறப்பு நாட்கள் உணர்ந்தும் ஒற்றுமையையும், இணக்கத்தினையும் அரசியல் ரீதியான நகர்வுகளின் போது கைவிட்டு தனித்தனி தீவுகளாக மாறி நிற்கின்றன காட்சிகளும் அரங்கேறும்.

சித்திரைப் பிறப்பினை முன்னிட்டு வெளியிடப்படும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துச் செய்திகளில் தேசிய நல்லிணக்கம், சமாதானம், இணக்கப்பாடு என்கிற வார்த்தைகள் ஜாலம் செய்யும். அந்த செய்திகளைப் படிக்கின்றவர்கள் ஒரு தாயின் குழந்தைகள் போல, பிணக்குகள் அற்றவர்கள் போல நாம் எதிர்கொள்ளப்படுகின்றோம் என்று தோன்றும். ஆனால், அந்த வாழ்த்துச் செய்திகளைக் கடக்கின்ற போது, நீண்டு செல்லும் முரண்பாடுகளின் முரட்டு முகம் வெளிப்பட்டு எம்மை அலைக்கழிக்கும். அப்படியான சித்திரைப் பிறப்பாகவே நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 13, 2016) மாலை பிறந்துள்ள துர்முகி வருடமும் எம்மை வரவேற்றிருக்கின்றது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதுவருடச் செய்தியில் வெளிப்பட்ட ஆதங்களும், ஆற்றாமையும் தமிழ் மக்களின் பெரும்பான்மையினர் கொண்டிருப்பது. அதாவது, “புதிய வருடங்கள் வருகின்றன. போகின்றன. ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.” என்பது.

ஒரு பண்டிகையை தேசிய கொண்டாட்டமாக காட்டிக் கொள்வதனாலோ, அல்லது ஒரு நாளில் காணப்படும் ஒட்டுறவினாலோ நீண்ட சுபீட்சமும், சமாதானமும் ஏற்பட்டுவிடாது.

மாறாக, நிலையான சமாதானத்துக்கும், நல்லிணக்கத்துக்குமான விதைகள் தூவப்பட வேண்டும். அதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் மனப்பூர்வமான வெளிப்பாட்டோடு செய்ய வேண்டும். அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பவர் யார் என்கிற கேள்விக்குறி தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடம் பல காலமாக இருக்கத்தான் செய்கின்றது.

 புத்தாண்டில் உண்மையான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நோக்கி பயணிப்போம்…!

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.