எமதுபார்வை
Typography

இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் கடந்த இரண்டு மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை பெரும் அச்சுறுத்தலான நிலைமையொன்றை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

இறுதி மோதல்களின் போது, இராணுவத்திடம் சரணடைந்தவர்களையும், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களையும் சேர்ந்து பத்து ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் நீண்டகால புனர்வாழ்வுச் செயற்திட்டங்களின் பின்னர் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டார்கள். இந்த நிலையில், தம் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் சந்தேகப்பார்வையை கடந்து நியாயமான வாழ்வுவொன்றுக்கான எதிர்பார்ப்போடு அவர்கள் காத்திருக்கின்ற நிலையில், மீளவும் கைது செய்யப்படுவதும், உச்சகட்ட கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொள்ளப்படுவதும் பெரும் பின்னடைவானது.

பெரும் உயிர் இழப்புக்களை ஏற்படுத்திய ஆயுத மோதலொன்றின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலத்தில் மக்களுக்கு நிறையவே சந்தேகங்களும்- அச்சமும் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், முன்னாள் போராளிகள் குறித்தும் சமூகத்துக்கு நிறைய அச்சங்கள் உண்டு. அவர்களோடு இணங்குதல் என்பது தமக்கான எதிர்கால அச்சுறுத்தல்களை வழங்கும் என்பது உள்ளிட்டவை சார்பில் எழுபவை அவை. ஆனால், அவற்றை மெல்ல மெல்ல கடந்து முன்னாள் போராளிகளை நியாயமான முறையில் உள்வாங்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்ற நிலையிலேயே இந்தக் கைதுகள் தொடர்கின்றன. இது, மக்களையும்- முன்னாள் போராளிகளையும் பிரித்து வைத்து பதற்றமான நிலையொன்றைத் தோற்றுவிக்கும் நோக்கிலானதா என்கிற கேள்வியும் எழுகின்றது.

தேசியப் பாதுகாப்புத் தொடர்பில் ஒவ்வொரு நாடும் மிகவும் உன்னிப்பாக இருப்பது இயல்பானது. ஆனால், அந்த நடவடிக்கைகளின் போக்கிலான செயற்பாடுகளில் குறைந்த பட்ச நியாயத்தன்மையோடு நடந்து கொள்ள தேவையொன்றை மக்கள் எதிர்பார்ப்பது வழமையானது. ஆனால், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் நடவடிக்கைகளும், கைதுகளும் மோதல் காலங்களில் நீடித்தது மாதிரியான வெள்ளை வான் கடத்தல்கள் போன்று நிகழ்த்தப்படுவதும், பின்னர் அது கைது போன்று அறிவிக்கப்படுவதும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

நல்லிணக்கம்- நல்லாட்சி பற்றி தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்  இவ்வாறான கைதுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. மாறாக, அவற்றைப் புறந்தள்ளி விடயங்களைக் கையாளுதல் என்பது மக்களை சந்தேகத்துடனேயே வைத்துக் கொண்டிருக்கும். சட்டரீதியான விசாரணைகளும், கைதுகளும் நியாயமான வழிகளில் தொடர்வதில் சிக்கலில்லை. மாறாக, ஒட்டுமொத்தமான அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் மக்களிடம் வழங்கிவிடும் செயற்பாடுகள் என்றைக்குமே முன்னேற்றகரமானது அல்ல.

BLOG COMMENTS POWERED BY DISQUS