எமதுபார்வை

ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏழாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், கடமையும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

இறுதி மோதல்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் ஆரம்பித்த காலம் தொட்டு அதற்காகவும், அதற்குள்ளும் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு மாத்திரம் பொறுப்புக்கள் தீர்ந்துவிட்டதாக நினைத்து விலகிவிட முடியாத- கூடாத கடப்பாடொன்றின் முக்கிய கட்டத்தில் தமிழ்ச் சமூகம் இருக்கின்றது. எமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கும், படுகொலைகளுக்கும் நீதி கோருதலைத் தலையேற்பதுவும், நாம் முன்னெடுத்துச் செல்லும் உரிமைக்கான போராட்டத்தின் முக்கியமான கட்டமென்பதை முள்ளிவாய்க்கால் ஒவ்வொரு முறையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டங்களும், அதற்கான ஓர்மமும் முள்ளிவாய்க்காலோடு முடித்து வைக்கப்பட்டதாக எதிரிகள் நம்பியிருந்த தருணத்தை உடைத்து கூட்டுக் கோபத்தையும். ஒருங்கிணைவையும் வெளிப்படுத்திய தமிழ் மக்களின், ஆறாக் காயங்களும் அது வைத்துக் கொண்டிருக்கும் கொதிநிலையும் போராட்டங்களின் அடுத்த கட்டங்களைக் கட்டமைத்துச் செல்வதற்கான சக்திகளாக மாற்றப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் பெரும் சக்தியிழப்பு ஏற்பட்டு வேரறுந்த சமூகமாக அல்லாட வேண்டி வரும்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டங்கள் ஒவ்வொரு தருணத்திலும் புதிய வடிவமெடுத்து முன்னோக்கிச் சென்றிருக்கின்றன. தன்னுடைய பலத்தினை அல்லது பேரம் பேசும் நிலையினை தக்க வைப்பது தொடர்பில் மூர்க்கமான அர்ப்பணிப்புக்களையும் செய்து வந்திருக்கின்றது. குறிப்பாக, அஹிம்சை வழியிலிருந்து ஆயுத வழிக்கு மாறிய பின்னரான சுமார் 30 ஆண்டுகள் என்பது தொடர் அர்ப்பணிப்புக்களினால் மாத்திரமே நிகழ்த்திக் காட்டப்பட்டது. அது, ஒரு தரப்பின் வெற்றியல்ல. அது, ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்த மக்களின் வெற்றியாகும். அதுதான், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்கிற அடையாளத்தை இறுதியும் செய்தது.

அப்படிப்பட்ட நிலையில், இன்றைய சூழலுக்கு எற்ப போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர வேண்டும். அது, உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பாரிய சேதங்களை ஏற்படுத்தாதவாறு சூழ்ச்சிகளோடு மல்லுக்கட்டும் சாதுரியத்தோடு இருந்தாக வேண்டும். அதுதான், எம்மோடு நீண்டு வரும் இழப்புக்களின் பெரும் வலியை மெல்ல ஆற்றுவதற்கும், எதிர்காலத்தில் இழப்புக்களை வெற்றி கொள்வதற்கும் உதவும்.

தமிழ் மக்கள் உணர்ச்சிகரமான பெருந்துயரத்தின் பக்கத்தில் நிற்கின்ற தருணத்தில், இவற்றையெல்லாம் சொல்வதென்பது எரிச்சலூட்டும் விடயமாக இருக்கலாம். ஆனால், ஏழு வருடங்கள் என்கிற நீண்ட காலமொன்றை கடந்து வந்திருக்கின்ற நினைவுபடுத்தலோடு இவற்றை பேச வேண்டி ஏற்பட்டிக்கின்றது. அது, இழக்கப்பட்ட உயிர்களின் ஆன்மாக்களின் மீதான உறுதியாகவும், எதிர்காலத்துக்கான கடப்பாடாகவும் பரிமளிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலோடு கடக்கப்படும் களம் அல்ல. அது, விடுதலைக்கான பயணத்தின் புதிய வடிவங்களை பூண வேண்டிய இடமும் ஆகும். அங்கு ஆயிரமாயிரம் கனவோடு மண்டவர்களின் மீதும், ஏதுமறியாது பலிவாங்கப்பட்ட இளம் தலைமுறை மீதும் ஏற்கப்பட வேண்டிய சபதமும் ஆகும். நீதிக்கான போராட்டத்தை எதுவரினும் எதிர்கொண்டு வெற்றிகொண்டாக வேண்டும். அதுதான், இழக்கப்பட்ட உயிர்களுக்கான உண்மையான அஞ்சலியாகவும், தமிழ் தேசிய விடுதலையின் உண்மையான முன்நகர்வாகவும் இருக்கும்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.