எமதுபார்வை
Typography

“இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது…..” ‘தடம்’ இதழுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி இப்படி நீள்கின்றது.  

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் பற்றி போதிய அறிவின்றி சர்ச்சையான கருத்துக்களை எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு பற்றிய அறிவு அவரிடம் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் நின்று ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்தியத் தேசியவாதத்தை போசிக்கின்ற, நம்புகின்ற, அதற்கான அர்ப்பணிப்பை தொடர்ந்தும் வெளியிடுகின்ற ஒருவரிடத்திலிருந்து ஈழத்தமிழ் போராட்டங்கள் பற்றிய உரையாடல் எந்தத் தொனியில் ஆரம்பிக்கும் என்பது பற்றியது அது. 

சில ஆண்டுகளுக்கு முன் ஜெயமோகன் இன்னொரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, “இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்குப் பகுதிகளில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. குறிப்பாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை.” என்று அப்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவித்தார். குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கின்ற தரப்பிடமே நீதி கேட்டு ‘உண்மை’ என்னவென்று ஜெயமோகன் எழுதி தன்னுடைய அர்ப்பணிப்பை வெளியிட்டிருந்தார். பின்னராக, அவர் அந்த விடயம் தொடர்பில் சில பல நழுவல் போக்கினைச் செய்து தப்பிக்க முனைந்தார் என்பது வரலாறு.

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டம் என்பது மாதிரியான தோரணையிலும், எல்லாவற்றையும் அவசரமாக கோணத்தில் முன்னெடுத்துச் சென்று பெரும் அழிவொன்றுக்கான குழியை வெட்டிக்கொண்டார்கள் என்பது மாதிரியான தோரணையில் ஜெயமோகனின் ‘தடம்’ பேட்டி தொடர்கின்றது. அவர், எப்போதுமே ஆட்சியாளர்களின் நியாயம் பற்றி போதனை செய்வதில் ஆர்வமாக இருக்கின்றார். குறிப்பாக, தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியப் பெரும் தேசியவாதம் ஆற்றிய குற்றங்கள், அழிவுகள் பற்றியெல்லாம் நியாயப்படுத்தும் கருத்தியலை விதைப்பதில் ஆர்வத்தோடு இருக்கின்றார். அதனையே, ஈழத்தமிழர்களின் விடயத்திலும் முன்வைக்க முயல்கின்றார்.  குறிப்பாக, தமிழக மக்களிடம் எஞ்சியிருக்கின்ற ஈழத்தமிழ் ஆதரவு மனநிலையையும் அகற்றிவிட வேண்டும் என்பதில் இந்திய தேசியவாதம் அக்கறையோடு இருக்கின்றது. அதன்போக்கிலான செயற்திட்டங்களை ஜெயமோகனும் செய்கின்றார். அதற்காக, நீண்ட போராட்ட வரலாற்றினை மறைத்து ஒரு சில நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கடப்பதினூடு நியாயமான போராட்டத்தினை குழிதோண்டிப் புதைப்பதில் கவனம் செலுத்துகின்றார். 

இலங்கையில் அரச வன்முறை அனைத்து மக்களுக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட அத்துமீறல்- அழிப்பு பற்றிய விடயங்களை கடந்த 70 ஆண்டுகளாக தென்னிலங்கை பதிவு செய்து வந்திருக்கின்றது. தமிழ் மக்களின் போராட்டங்கள் எந்தவித அடிப்படையும் இன்றி ஆயுதங்கள் மீதான ஆசையினால் ஆரம்பிக்கவில்லை. அந்தப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களை அடைவதற்கு சுமார் கால்நூற்றாண்டு ஆனது. அதற்கு முன்னராக காலத்தில் திட்டமிட்ட மூன்று இனக்கலவரத்தினைக் கடந்தே தமிழ் மக்கள் வந்திருக்கின்றார்கள். அது, பௌத்த சிங்கள தேசியவாதத்தின் ஆணைக்கு அமைய நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையின், கீழ்த்தான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் என்ற நிலைக்கு சென்றார்கள். 

இந்த இடத்தில் தமிழ் இளைஞர்களிடம் ஆயுதங்களை சேர்ப்பித்து தன்னுடைய ஏவல் கருவிகளாக கையாளுவதற்கு இந்தியா எப்படி திட்டமிட்டது என்பதையும், ஜெயமோகன் இலகுவாக மறந்துவிட்டு கருத்துரைக்கின்றார். இந்தியாவின் அந்த எதிர்பார்ப்பினை சில இயக்கங்கள் மீறிய தருணத்தில் இந்தியத் தேசியவாதத்தின் திமிர் அடிபட்டது. அந்த எரிச்சலின் நீட்சியே முள்ளிவாய்க்காலுக்குள் பெரும் கோரங்களை நிகழ்த்துவதற்கு இந்தியாவையும் ஒத்துழைக்க வைத்தது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டமைக்கான ஏழு தசாப்த கால ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த இன அழிப்பில் இந்தியாவின் பங்கு பற்றலுக்கான ஆதாரங்களும் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், இந்தியத் தேசியத்தினை கொண்டு சுமக்கும் ஜெயமோகன், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்தப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளுவார். மாறாக, அவர் வாந்திகளை மாத்திரமே எடுத்துக் கொண்டிருப்பார். ஜெயமோகனை மறந்துவிட்டு ஆரோக்கியமான அரசியலின் பக்கம் ஈழத்தமிழர்கள் நகர வேண்டிய தருணமிது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்