எமதுபார்வை

இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்போடு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளினாலும், ஐக்கிய நாடுகளினாலும் முற்றுமுழுதாக முடக்கப்பட்டு, (சர்வதேச கண்காணிப்புடனான) உள்ளக விசாரணையொன்றுக்கான வரைபு இறுதி செய்யப்பட்டு விட்டது.

அப்படியான பின்னணியில், உள்ளக விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்களிக்க வேண்டும் அல்லது அழைக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது இயல்பாகவே கவனம் பெறும். ஆனால், தமிழ் ஊடகங்களும், அரசியல் நோக்கர்கள் சிலரும் சற்று அவசரப்பட்டு சர்வதேச விசாரணையொன்றுக்கான அழைப்பை சரத் பொன்சேகா விடுத்துள்ளார் என்று எண்ணிக்கொண்டு தம்முடைய முன்முடிவுகளையும், கற்பிதங்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பாராளுமன்றத்தின் மீள் பிரவேசத்தின் பின்னர் சரத் பொன்சேகா கடந்த வியாழக்கிழமை (மார்ச் 10, 2016) தன்னுடைய கன்னியுரையை ஆற்றினார். அதில், இறுதிப் போர் முன்னெடுக்கப்பட்ட முறைமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எவ்வாறு போர் வெற்றியை தம்முடைய அடையாளமாக மாற்றிக் கொள்ள முயன்றார்கள். அவர்களின் மோசடிகள் எப்படிப்பட்டவை என்பது பற்றி சுமார் ஒரு மணித்தியாலங்கள் உரையாற்றியிருந்தார்.

அந்த உரையின் போது, சர்வதேச விசாரணை தொடர்பில் சரத் பொன்சேகா எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக, கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்,

“ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும், போரை வழிநடத்தியவன் என்ற வகையில் கட்டாயம் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதற்கும், அதை எமக்குப் பலமாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

போரை வழிநடத்தியன் என்ற வகையில் ஜெனீவா சாசனங்களையும், மனித உரிமைகளையும் மதித்தே போர் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவற்றை யாரும் ஒரு சிலர் மீறியிருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும். இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் எனக்கும்கூட மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விடயம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது பற்றி உண்மை. மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும். குற்றமிழைந்தவர்கள் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே…” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களைக் கழைந்து இராணுவத்தினருக்கு வெள்ளையடிப்பதற்கான சர்வதேச நியாயப்பாடுகளுடனான வழிமுறைகளையே சரத் பொன்சேகா முன்வைத்திருக்கின்றார். மாறாக, சர்வதேச விசாரணை என்கிற நிலைபற்றி அவர் பேசியிருக்கவில்லை. அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களின் நிலைப்பாடுடனேயே இருக்கின்றார். உள்ளக விசாரணை என்கிற அம்சங்களை மீறி சர்வதேச விசாரணைக் கோரிக்கையின் பக்கம் அவர் வரவில்லை. அப்படி, கற்பிதம் கொள்வது அபத்தமானது.

சரத் பொன்சேகா முன்வைத்திருப்பது, இறுதிப் போரின் இறுதி நாட்களில் மாத்திரமே மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கு, முழுமையான இராணுவத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மாறாக, அப்போது, கட்டளையிட்டவர்களையும், அதனை செயற்படுத்தியவர்களையுமே விசாரித்து தண்டிக்க வேண்டும் என்பதாகும். அது, மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களையும், இன்னும் சில அந்தக் காலத்தில் பிராந்திய தளபதிகளாக இருந்து போரினை முன்னெடுத்த தளபதிகள் மீதானதும் ஆகும்.

தான் கட்டளையிட்ட காலத்தில் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதினூடு சரத் பொன்சேகா, தன்னுடைய பரம வைரிகளான மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தபாய ராஜபக்ஷவையும் பழிதீர்க்கவும் எண்ணுகின்றார். அந்த விடயமும் மேலேந்து நிற்கின்றது. அதனை மீறி, அவர் முன்மொழிந்தவற்றில் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் முக்கியமானது. அது, விசாரணைகளின் போது  முக்கியமான சாட்சியமாக இருக்கும்.

மாறாக, அவர் சர்வதேச விசாரணையொன்றுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றார் என்று உள்ளூரச் சந்தோசப்பட்டுக் கொண்டு தமிழ் ஊடகங்களும், அரசியல் நோக்கர்களும், தமிழ்த் தரப்பும் ஓய்திருக்க முடியாது. இன்னும் இன்னும் வேகத்தோடு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிக்காக போராட வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.