எமதுபார்வை

யாழ் பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க(?) விதிமுறைகளை அறிவித்துள்ளது.

“மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். மாணவர்கள் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவிகள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.” என்கிற மூன்று புதிய கட்டுப்பாடுகளை யாழ் பல்கலைக்கழகம் விதித்திருக்கின்றது.

பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு தங்களின் 20களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்துக்குள் புகும் இளைஞர்- யுவதிகளுக்கு, உலகத்தினை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான பரந்துபட்ட கல்வியூட்டலையும், முட்டிமோதுவதற்கான திடத்தினையும் பல்கலைக்கழங்கங்கள் வழங்க வேண்டும்.

சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பல்கலைக்கழங்களின் பங்களிப்பு என்பது எந்தப் பிராந்தியத்திலும் மிக முக்கியமானவை. புதிய வீச்சங்கள் கூடிய சிந்தனைகள் பல்கலைக்கழங்களிலிருந்து பிறந்திருக்கின்றன. அப்படியான முனைப்புக்களில் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் பாரிய பங்கினை வகித்திருக்கின்றார்கள். ஆனால், நம்மிடையே பல்கலைக்கழங்கள் தொடர்பிலான மதிப்பீடு எப்படிப்பட்டவை. அதன் மதிப்பீட்டு வீழ்ச்சி எங்கிருந்து ஆரம்பித்தது என்று ஆராயப்பட வேண்டிய சூழ்நிலையொன்று காணப்படுகின்றது.

அப்படிப்பட்ட நிலையிலேயே, எந்தவித தூரநோக்கும்- சமூக பொறுப்புணர்வுமற்று மாணவர்களின் சுதந்திரம், சமூக ஊடாட்டங்களைச் சிதைக்கும் முகமான கட்டுப்பாடுகளை யாழ் பல்கலைக்கழகம் விதித்திருக்கின்றது. ஆடைக்கட்டுப்பாட்டின் பேரில் கலாச்சாரக் காவலர்கள் வேடமணிந்து கொள்ளலாம் என்கிற பிற்போக்குத்தனங்கள் என்பது ‘தாலீபாஸினம்- ஆர்.எஸ்.எஸ்.’தனத்தினை நோக்கிய பயணங்களின் வழி வருபவை.

ஒவ்வொரு சமூகத்திலும் கல்வியாளர்கள், புத்திஜீவிகளின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்க வேண்டும். ஆனால், எம்மிடையே குறித்த இரு தரப்பின் பங்களிப்பு கடந்த காலங்களில் எப்படிப்பட்டவை என்பது எமக்குத் தெரியும். கல்வியாளர்களினாலும், புத்திஜீவிகளினாலும் மக்கள் சார்பு சிந்தனைகளைத் தாண்டி அதிமேதவித்தனங்கள் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டு, அவர்களாகவே விலகிக் கொண்ட நிலை காணப்படுகின்றது. அதுபோன்றதொரு நிகழ்வின் தொடர்ச்சி போலவே யாழ் பல்கலைக்கழகத்தின் மேற்கண்ட ஒழுங்க(!) விதிமுறைகளும் காணப்படுகின்றன.

தமிழ் மாணவர்கள் மாத்திரமின்றி முஸ்லிம்- சிங்கள சகோதர மாணவர்களும் கல்வி பயிலும் யாழ் பல்கலைக்கழகம் இனரீதியிலான அடையாளங்களை திணிக்கும் ஆடைக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னர் தெளிவாக சிந்தித்திருக்க வேண்டும். ஏனெனில், தொடர்ச்சியாக இனமுரண்பாடுகள் கோலொச்சி பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவசியமற்ற விடயங்களை முன்னிறுத்தி அந்தப் பிரச்சினைகளை இன்னுமின்னும் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கல்வியாளர்களாக- போதிப்பாளர்களாக தங்களை முன்னிறுத்துபவர்களுக்கான கடமை மற்றும் பொறுப்பு தொடர்பில் சிறிதாகவேனும் சிந்தித்திருந்தால் இவ்வாறானதொரு கட்டுப்பாட்டினை விதிக்கும் சந்தர்ப்பம் உருவாகியிருக்காது. மாறாக, எப்படியாவது கவனம் பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே இப்படியானதொரு நிலையை சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் என்று கொள்ள முடியும்.

டெனிமும், ரீ-சேர்ட்டும் காலாச்சார ரீதியில் என்ன இழுக்கினைச் செலுத்துகின்றது?, தாடி வைத்துக் கொள்வது அடிப்படை மனித உரிமை. அதனை மீறும் வகையிலான முடிவினை எடுக்கத் தூண்டியது எது? மூவினத்து மாணவிகளும் கல்வி கற்கும் சூழலில் வெள்ளிக்கிழமைகளின் பெண்களை சேலை உடுத்திவரக் கோருவது எவ்வகையான மனநிலை?

இப்படியான அரைவேக்காட்டுத்தனமாக ஆடைக்கட்டுப்பாட்டினை விதிப்பதற்கு முன்னர் எப்படியாவது யாழ் பல்கலைக்கழக சமூகம் கூடி ஆராய்ந்திருக்கும். அதன்போது, இப்படியான முடிவுகளுக்குப் பின்னாலுள்ள மனித உரிமை மீறல்கள்- கடும்போக்குத்தனங்கள் தொடர்பில் உண்மையிலேயே சிந்தித்திருக்க மாட்டார்களா? இல்லை என்றால், நிச்சயமாக இவர்கள் உருவாக்கும் இளைய தலைமுறை தொடர்பில் நாம் அச்சம் கொள்ள வேண்டி ஏற்படும்!

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.