எமதுபார்வை
Typography

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்று ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது.  அதிகாரங்களுக்கான தொடர் போராட்டங்களின் நீட்சியின் அடிப்படையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்தாலும், அதோடு சேர்த்து கொஞ்சமாக உள்ளக அபிவிருத்தி சார்ந்த நம்பிக்கைகளும் இருந்தன.

போரால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மாகாணம் என்கிற ரீதியில் வடக்கு மாகாண சபையின் ஆட்சியை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான ஆளும் கட்சியினருக்கு நீண்ட திட்டமிடல்களுடன் கூடிய பொறுப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் அழுத்தங்கள்- அலைக்கழிப்புக்களை தாண்டி கனதியான பெறுபேறுகளைப் பெற வேண்டியது அவசியமானதாக இருந்தது.

ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வடக்கு மாகாண சபையில் குழப்பங்களும், குறைபாடுகளுமே அதிகரித்து வந்திருக்கின்றன. தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் அளவுக்கு நிர்வாகத்திறன் அதிகரித்துச் சென்றிருக்கவில்லை. மாறாக, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் பிளவும்- பிரிவினையும் அதிகரித்தது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவை ஆளும்கட்சியின் மற்றைய உறுப்பினர்களோடு பொறுப்பான கலந்தாய்வுகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு மெல்ல மெல்ல எழுந்து வந்தது. அதன் உக்கிரமான நிலை அண்மையில் வெளிப்பட்டது. அதாவது, விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பிரேரணையொன்று வடக்கு மாகாண சபையில் ஆளும்கட்சி உறுப்பினர்களினால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் மிகவும் பின்தங்கிய வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும், மன்னாரும் காணப்படுகின்றன என்று உலக வங்கியின் அண்மைய அறிக்கையொன்று சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள 40 சதவீதம் மக்கள் வடக்கு மாகாணத்திலேயே வசிப்பதாகவும் உலக வங்கியின் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாரம்பரிய தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நடவடிக்கைகளும் ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. அதில், தன்னுடைய அதிகார எல்லை சார்ந்து வடக்கு மாகாண சபை முன்னெடுக்க கூடிய விடயங்களும் உள்ளன. அவற்றில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சரவை வெற்றிகரமான செயற்பட்டிருப்பதற்கான பெறுபேறுகளைக் காண முடியவில்லை.

முல்லைத்தீவில் அண்மையில் உழவர் திருவிழா என்கிற நிகழ்வு வடக்கு மாகாண சபையினால் நடத்தப்பட்டது. அந்த விழாவுக்கு தென்னிந்திய கவிஞர் வைரமுத்து அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வின் தேவைப்பாடு என்ன, அங்கு வைரமுத்துவின் அவசியம் எப்படிப்பட்டது?, என்கிற கேள்விகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டன. அந்த நிகழ்வு தொடர்பில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்குகூட எந்தவித அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கின் உள்ளக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களுக்காக 300,000 கோடி தேவைப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் வடக்கின் அபிவிருத்திக்கு அதனையும் தாண்டிய நிதித் தேவை காணப்படுகின்றது.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு மீண்டும் திறைசேரிக்கு செல்லும் காரணம் என்ன? அந்த நிதியை முறையான திட்டங்களினூடு வடக்கு மாகாணத்தில் செலவழிக்க முடியாமல் போனது ஏன்? என்கிற காரணங்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து தங்களை வேறு வேறு கோணங்களில் வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம். ஆனால், மக்களின் ஆணையை மதித்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கள் சார்ந்து இயங்குவது மக்கள் பிரதிநிதிகள் என்கிற ரீதியில் வடக்கு மாகாண சபையினரின் கடப்பாடு. அதனை, முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். மாறாக, நிர்வாக குறைபாடுள்ள மாகாண சபை என்கிற பெயரை பதிவு செய்வது யாருக்கும் நல்லதல்ல. அது, எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கே முட்டுக்கட்டைகளை போடலாம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS