கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் துவங்கவேண்டும் : இந்துநாதன்
- Tuesday, 25 September 2012 09:58
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை உடனடியாக துவங்கினால்தான் எங்களைப் போன்ற சிறுதொழில்,
மற்றும் குறுந்தொழில் செய்பவர்கள் பிழைப்பு நடக்கும் என்று சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத் தலைவர் இந்துநாதன் கூறியுள்ளார்.
"அறிவிக்கப் படாத 14 மணி நேர மின்வெட்டால், கோவையில் மோட்டார் உற்பத்தி தொழில், கிரைண்டர் உற்பத்தித் தொழில், பஞ்சாலை தொழில் இவைகள் முற்றிலுமாக முடங்கி விட்டது. திருப்பூரில் தீபாவளி ஜவுளி ஆர்டர் உற்பத்தித் தொழில் முடங்கிப் போகிறது, சேலத்தில் ஜவ்வரிசி உற்பத்தி தொழில், ஈரோட்டில் மின் மோட்டார் கொண்டு தண்ணீர் பாய்ச்சும் விவசாயம் முடங்கி விட்டது.
இவைகள் எல்லாமே சென்னையில் சிறு, மற்றும் குறுந்தொழில் செய்து பிழைக்கும் இண்டஸ்ட்ரிகளை பெருமளவில் பாதிக்கிறது. கோவையில் பெண்டாட்டி, உறவினர்கள் என்று அனைவரின் நகைகளையும் முதலீடாகப் போட்டு தொழிலில் ஈடுபட்டாலும் அறிவிக்கப் படாத 14 மணி நேர மின்வெட்டால் இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லப் படும் தொழில் நகரமான கோவை நகரம் இப்போது முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறது.
அடுத்த வேளை சோற்றுக்கே கடன் வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கோவை மாவட்ட தொழிலாளர்கள். ஆனால், இவர்களால் அணுமின் நிலைய மின் உற்பத்தி வேண்டும் என்று தினமும் ஒரு விதமாக போராட்டம் அறிவிக்க முடியாது, காரணம் எங்களுக்கு யாரும் நிதி உதவிகள் செய்வது இல்லை.
தமிழகமே தொழில் துறையில் முடங்கிப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை உடனே துவங்கி ஆக வேண்டும். இல்லை வேறு மாநிலத்தில் இருந்து மின்சாரம் கடன் வாங்கியாவது எங்களைப் போல சிறு குறுந்தொழில் முனைவோரைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் துவங்க வேண்டும் என்று சென்றமாதம் நாங்கள் போராட்டம் நடத்தினோம்.
இப்போது எதிர்வரும் புதன்கிழமை, 26 ம் திகதி மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியதுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஏற்கனவே, மின் தட்டுப்பாட்டால் முடங்கிக் கிடக்கும் எங்கள் தொழில் டீசல் ஜெனரேட்டர்களை நம்பியே இருக்கிறது . இப்போது இதற்கும் ஆபத்து என்றால் எங்கள் சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் மக்கள் எப்படி பிழைப்பை நடத்துவார்கள்? வங்கிக் கடனை எப்படி திரும்ப செலுத்துவார்கள்?வட்டி மேல் வட்டிப் போட்டு வங்கிகள் எங்களை சாகடித்து விடும். எனவே மத்திய அரசு டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் துவங்க வேண்டும் என்றும் எங்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கைகள் வைக்கிறோம்" என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவர் இந்துநாதன்.
"தமிழகம் முழுவதிலும் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் அத்தனை பேரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறோம். 8 லட்சம் தொழில் முனைவோர், 80 லட்சம் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தால் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும், இப்போது இந்த இழப்பு போராட்டம் நடத்தாமலே மின்வெட்டு பிரச்சனையால் எங்களுக்கு ஏற்படுகிறது. இப்போது போதாக் குறைக்கு டீசல் விலை உயர்வு வேறு. எப்படித்தான் நாங்கள் பிழைப்பு நடத்துவது? மத்திய அரசு உயர்த்திய டீசல் விலையை திரும்பப் பெறவேண்டும். இல்லை எனில் மாநில அரசு தடையில்லா மின்சாரத்துக்கு எங்களுக்கு வழி வகை செய்ய வேண்டும். இதற்காகத்தான் எங்கள் போராட்டம்" என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க செகரட்டரி மூர்த்தி.
நாளை புதன்கிழமை இப் போராட்டம் நடத்துவதாக இந்த அமைப்பினர் அறிவித்திருப்பதும், அது தொடர்பில் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கும் காரணங்களும் அவர்கள் தரப்பு நியாயத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இவ்வாறான நிலையில், அதிகளவிலான மின் வெட்டுக்கான உண்மையான காரணமென கூடங்குளம் போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் மற்றுமொரு செய்தி, இது விடயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது பல்வேறு கேள்சிகளை உருவாக்கத் தவறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
கூடங்குளம் செய்திகள் சமூக வலைத் தளத்தில் Agazhvaan GGanesh என்பவரது பெயரில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அச் செய்திக் குறிப்பில்;
அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலதாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது, ஆனால் உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,
அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.

மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது
அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,
கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இச் செய்தித் தகவல் சுட்டுகின்ற செயற்கை மின்தடை என்பது உண்மையானதா என்பது குறித்து மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டியது மின்சார வாரியத்தினதும், மாநில அரசினதும் பொறுப்பாகின்றது. ஆனால் அவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள் அல்லது கூடங்குளம் போராட்டத்தினைக் கை காட்டிவிட்டு அமைதியாகி விடுகின்றார்கள்.
கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்தினால், தமிழகத்தின் மற்றுமொரு தொழில்முனையும் மக்கள் சமூகம் பாதிப்படைவதானநிலை தோன்றுவது அமைதிநிலைக்குப் பாதகமானது. ஒரு மக்கள் சமூகத்தை இன்னுமொரு மக்கள் சமூகத்தின் மீது ஆத்திரம் கொள்ளவைக்கும் நிலையைத் தோற்றுவிப்பதானது. பல்வேறு வாழ்நிலைச் சூழலுக்குள், நடைபெறும் விடயங்கள் குறித்த தெளிவான புரிதல்கள் இன்றி அல்லாடும் மக்களுக்குள் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுத்துவதற்கு மாறாக, குழப்பங்களும், அதிருப்திகளும் ஏற்படுத்துவதற்கு அரசு காரணமாக அமைவது ஏற்புடையதல்ல.
4தமிழ்மீடியாவிற்காக: எழில் செல்வி மற்றும் வேல்மாறன்.
படங்கள்: எழில்செல்வி
ஏன் இவ்வாறு என்பதறிய இந்தப் பகிர்வு உதவலாம்
