பதிவுகள்
Typography

அன்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் இளவயது மரணங்கள் பெரும் அச்சம் தருவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான இம் மரணங்களின் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களில் முக்கியமானது, கணிமைத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குபவர்கள் சந்திக்கும் அதிக மன அழுத்தம். இவர்களின் மனவலிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களிலேயே அறிமுடியாமற் போவது பெருந்துயரம். தங்கள் பணிச் சுமைகளுக்கு மத்தியிலும் தன்னலம் பாராது, தமிழ் கணிமைக்கு பெரும் தொண்டாற்றியவர்களின் இளவயது மரணங்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.

வலைப்பதிவுகளில் நான் தொடர்ந்தியங்கிய காலங்களில் அறிமுகமான நண்பர்கள், தேன்கூடு சாகரன், சிந்தாநதி, உமர் தம்பி, வரிசையில் இப்போது தகடூர் கோபி. நண்பர் தமிழ்சசியின் பதிவின் மூலமாகவே கோபியின் மரணம் தெரிய வந்தது. அப்பதிவு எழுப்பும் கேள்வியும், எண்ணமும், துயரமும், எனது எண்ணங்களை ஒத்தாகவே உள்ளதனால், அப்பதிவினை (தமிழ்சசிக்கான நன்றிகளுடன்) இங்கே மீள்பதிவு செய்கின்றேன்.

இன்று இணையத்தில், சமூக ஊடகங்களில் தமிழ் பெருமளவில் பரவி இருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் ஒரு நாளில் நடந்து விட வில்லை. இணையத்தில் தமிழ் மெல்ல, மெல்ல தான் எழுந்து நடக்கத் தொடங்கியது. சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை இவ்வளவு எளிதாகக் கணினியிலோ, இணையத்திலோ தட்டச்சு செய்யவோ, வாசிக்கவோ முடிந்ததில்லை என்பதை இணையத்தில் அக் காலக்கட்டத்தில் இருந்து வாசிக்கும், எழுதி வரும் பலர் அறிவார்கள்.

அப்படியான சூழலில் சிறு சிறு செயலிகள் தன்னார்வலர்களால் ஆங்காங்கே எழுதப்பட்டது. இந்தச் செயலிகள் தமிழ் வாசிக்கவும், தட்டச்சு செய்யவும் பலருக்கும் உதவியது. இணையத்தில் தமிழ் அப்படித் தான் சிறுக, சிறுக வளர்ந்தது. யாகூ குழுமங்கள், வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என வளரத் தொடங்கிய தமிழ் இன்று சமூக ஊடகங்கள் காலக்கட்டத்தில் இணையம் எங்கும் பரவி உள்ளது.

இந்த முயற்சிக்குப் பின் இருக்கும் மனிதர்களைப் பற்றி எத்தனை பேர் நினைத்துப் பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியாது ? ஒரு காலத்தில் தமிழை இணையத்தில் வாசிக்க, தட்டச்சுச் செய்ய எவ்வளவு சிரமங்கள் இருந்தது என்பது கூடப் பலருக்கும் தெரியாது.

இன்று வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இன்றைய செயலிகளைச் சில வருடங்களில் அர்த்தமற்ற ஒன்றாக மாற்றி விடுகிறது. ஆனால் அப்படியான தொழில்நுட்பங்களின் படிக்கட்டுகளில் ஏறித் தான் நாம் இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாது.

தமிழுக்குச் சத்தமில்லாமல் தொண்டாற்றி விட்டு அந்த மனிதர்கள் மறையும் பொழுது தான் நாம் அவர்களை நினைத்துப் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. அந்த வரிசையில் தகடூர் கோபி (http://www.higopi.com/). இவரது மரணம் இன்று என்னை என்னவோ செய்கிறது. சாகிற வயதா இது ?

அவரின் பல செயலிகளை நான் அடிக்கடி வலைப்பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த காலங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். நேரிடையான பழக்கம் இல்லை என்றாலும் அவரின் செயலிகள் மூலம் தான் அவர் எனக்குப் பழக்கம்.
தகடூர் கோபியின் மரணம் தமிழ்க் கணினி உலகிற்கு மிகப் பெரிய இழப்பு.

தமிழ்கணிமையாளன் தகடூர் கோபிக்கு 4தமிழ்மீடியா குழுமம் சார்ந்த அஞ்சலிகள்.

- மலைநாடான்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்