பதிவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பலதரப்புகளுக்குள் இருந்து ஒருவகையான கிளர்ச்சி மனநிலையோடு கூடிய கருத்துக்கள் வெளிப்பட்டன. கருத்துச் சொல்வதற்கும் போதனை செய்வதற்கும் மனித மனங்களில் அநேகமாவை பெரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றன. அப்படியானதொரு வாய்ப்பினைப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவமும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவத்தின் தோற்றுவாய் என்ன? அதன் போக்கு எப்படிப்பட்டது? அதனை எவ்வாறு கையாள வேண்டும்? என்கிற எண்ணப்பாடுகள் மற்றும் போதிய அறிவு இன்றி பலரும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்; கொந்தளித்தார்கள்; இனவாதத்தைப் பரப்பினார்கள்; நல்லிணக்கமும் பேசினார்கள்; தங்களை முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொண்டார்கள். எல்லாமும் சில நாட்களில் முடிந்து போனது. ஆரவாரங்கள் அடங்கிய பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் உண்மையான கரிசனையோடும், உள்ளார்ந்த அறிவோடும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அல்லது யோசனைகள் என்று தேடினால் மிகச் சொற்பமானவையே மிஞ்சின.

இந்த இடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவமானது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பெரும் முனைப்போடு ஈடுபடும் சில தரப்புக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது; ஏமாற்றமளித்தது. அந்தத் தரப்புக்கள், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் தம்மால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கத்தின் அளவு பெருவாரியானது என்று நம்பிக்கொண்டிருப்பவை. சீக்கிரத்திலேயே சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கருதுபவை. அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல் சம்பவம் எரிச்சலையும் ஆற்றாமையையும் ஏற்படுத்துவது இயல்பானதுதான். அதன் நீட்சி தமிழ் மக்களை நோக்கிய போதனைகளாக மாற ஆரம்பித்தன. அவற்றில் ஒன்று கீழ்கண்டவாறு இருந்தது.

'அன்பின் யாழ். மக்களே… புத்தர் சிலையோ, கண்டிய நடனமோ, சிங்கள மக்களோ உங்களின் கலாசாரத்துக்கான அச்சுறுத்தல் அல்ல. உங்கள் சமூகத்தினுள் இருக்கின்ற இனவாதமும் வன்முறையும் பாகுபாடுமே உங்களுக்கு உண்மையான அச்சுறுத்தல்' என்றவாறு அர்த்தப்படுத்தும் ஆங்கில வரி வடிவம் கொண்ட படமொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெருவாரியாகப் பகிரப்பட்டுக் கொண்டிருந்தது.

இங்கு, அன்பின் 'யாழ். மக்களே' என்பது 'தமிழ் மக்களே' என்ற தோரணையில் சொல்லப்பட்டதாக கொள்ளலாம். ஏனெனில், 'யாழ். மக்களே' என்று ஒட்டுமொத்தமான தமிழ் மக்களையும் இன்னொருவரும் அழைத்திருக்கின்றார். அது, திட்டமிட்ட கறுப்பு யூலைக் கலவரம் நிகழ்வதற்கு சரியாக 12 நாட்களுக்கு முன்னர், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் சொல்லப்பட்டது. அது கீழ்க்கண்டவாறு இருந்தது. 

'எனக்கு யாழ்ப்பாணம் வாழ் தமிழர்களின் கருத்துப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவர்களைப் பற்றி யோசிக்க முடியாது. அவர்களது வாழ்வு பற்றியோ, அவர்களது கருத்துப் பற்றியோ யோசிக்க முடியாது. வடக்கு மக்கள் மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்படும்போது இங்குள்ள சிங்களவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தமிழ் மக்களை நான் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் மகிழ்வார்கள்'- டெய்லிரெலிகிராப் (ஜுலை 11, 1983)

சுதந்திர இலங்கைக்கு முன்னரான காலத்திலேயே ஆரம்பித்து விட்ட இனமுரண்பாடுகளின் போக்கு எப்படிப்பட்டது? உண்மையிலேயே அதனை முடிவுக்குக் கொண்டு வந்து சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையையும் சமாதானத்னையும் ஏற்படுத்துவது மிகவும் கவனமாகவும் கண்ணியத்தோடும் முன்னெடுக்கப்பட வேண்டியது. அது, அனைத்துத் தரப்பு மக்களினதும் உணர்வுகளையும் உரிமைகளையும் இறைமையையும் மதிப்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது. மாறாக, அனைத்துக் கோடுகளையும் அழித்துவிட்டு புதியகோடுகளைப் போடுவதிலிருந்து ஆரம்பிக்க முடியும் என்று சில தரப்புக்கள் போதிக்க முயல்கின்றன. அந்தத் தரப்பொன்றின் முன்வைப்பாகவே, யாழ். மக்களை நோக்கிய 'புத்தர் சிலையோ, கண்டிய நடனமோ, சிங்கள மக்களோ அச்சுறுத்தல் அல்ல' என்கிற முன்வைப்பாகும்.

நல்லிணக்கப் போதனைகளை மக்களிடம் முன்வைப்பதற்கு முன்னர், அதன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது போதனையாளர்களின் கடமையாகும். மாறாக, நிறுவன மயப்படுத்தப்பட்ட ஆதிக்க சக்திகளின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைய விடயங்களைக் கையாண்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளுவதால், பிரச்சினைகள் ஆறாது பிரச்சினைகளின் கனதிதான் இன்னமும் அதிகரிக்கும்.

சரி‚ ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுப் பார்க்கலாம். அனைவரும் சமமானவர்கள்; சமாதானத்தின் வழி ஒழுகுங்கள் என்று போதித்த புத்தபெருமானை தமிழ் மக்கள் என்றைக்குமே தமக்கு அச்சுறுத்தலாக பார்த்ததில்லை. இன்னமும் புத்த பெருமானின் வாழ்க்கைப் போதனை மீதான பற்றுறுதியோடு இருப்பவர்கள் உண்டு. ஆனால், புத்தரின் போதனைகளைப் புறந்தள்ளி, புத்த பெருமானை 'சிலைகளாக்கி' அதனை ஆக்கிரமிப்பின் வடிவமாக மாற்றியது யார்? அதன் நீட்சி எத்தனை தசாப்தம் கொண்டது என்ற சின்னதொரு யோசனை கூட ஏன் நல்லிணக்கப் போதனையாளர்களுக்கு வரவில்லை?

இன்றைக்கு, வடக்கு - கிழக்கில் புத்த சிலைகள் என்பது ஆக்கிரமிப்பின் குறியீடு. புத்த சிலையை நிறுவிக் கொண்டு காணிகளை அபகரிக்கலாம்; இன்னொரு மதத்தின் மீதான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்; அடுத்தவர்களின் கலாசாரத்துக்குள் நுழைந்து மலினப்படுத்தலாம் என்பது வரையில் நடைபெறுகின்றது. அதனை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்ற தமிழ் மக்களை நோக்கி, புத்த சிலை அச்சுறுத்தலானது இல்லை என்கிற போதனையை எவ்வாறு வைக்க முடியும்? அந்தப் போதனையை முதலில் யாரை நோக்கி வைக்க வேண்டும் என்கிற கேள்வியை ஏன் எழுப்ப மறந்தார்கள்? புத்த சிலையை ஆக்கிரமிப்பின் வடிவமாக்கியது பௌத்த சிங்கள தேசியவாதத்தினை பிரதிபலித்து நிற்கின்ற இலங்கை அரசாங்கங்கள்தான். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக புத்த சிலைகளையும் விகாரைகளையும் ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக முன்வைத்து வருபவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பௌத்த சிங்கள தேசியவாதத்தின் அடியொற்றிய விடயங்கள் தமது அடிப்படையை கலைக்கின்றன என்கிற நிலையில் தமிழ் மக்களுக்கு பயமும் பதற்றமும் ஏற்படுவது இயல்பு. அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனைக் கூட புரிந்து கொள்ளாமல் நல்லிணக்கப் போதனைகளைச் சுமந்து கொண்டு வருபவர்களினால் உண்மையான நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்த முடியும்?

தமிழ் மக்களின் பாரம்பரிய பூமிகளில் புத்த பெருமான் சிலையாக முளைத்திருக்கின்றார். இந்துக்களின் பூமி, பௌத்த அடையாளங்களோடு புனித பூமிகளாகின்றன. பௌத்த பிக்குகளின் அதிகாரம் வடக்கு, கிழக்கின் குக்கிராமங்கள் வரை நீள்கிறது. அது, 30 வருடங்களுக்கு முற்பட்ட நிலையல்ல. அது, நேற்றும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏன், நாளையும் நீளும்.

நல்லிணக்க போதனையாளர்களின் இன்னொரு கோரிக்கை, நடந்து முடிந்து விட்டவைகள் தொடர்பில் மறப்பதும், மன்னிப்பளிப்பதும் பற்றியது. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக் கோரிக்கை என்பது அடிப்படையில் ஏற்கனவே நிகழ்த்த கொடூரங்கள் மீளவும் நிகழாமல் தடுப்பதற்கான எதிர்பார்ப்பாகும். அது, சர்வதேச ரீதியாகவும் உள்ளக அரசியல் சார்ந்தும் உறுதிப்பாடுகளை வழங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சார்ந்தவை.

நல்லிணக்கச் செயலணியின் கருத்தறியும் அமர்வுகள் வடக்கில் நடைபெற்று வருகின்றன. அங்கு கருத்துத் தெரிவிப்பவர்களில் அநேகமானோர், 'துப்பாக்கி முனையில்  நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது; நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வேண்டும்; பொறுப்புக் கூறுதலும், பொறுப்பளித்தலும் நிகழ வேண்டும்.' என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களில் அநேகர் தெளிவாகவும் திடமாகவும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. மன்னிப்பது என்பது பெரியவிடயமல்ல‚ ஆனால், மன்னிப்புக்களைத் தாண்டி, மீளவும் பெரும் குற்றங்கள் நிகழாது என்பதற்கான உறுதிப்பாட்டினை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்பதுதான் தமது பாரிய எதிர்பார்ப்பு என்று தெரிவிக்கின்றார்கள். இந்த மக்களின் குரல்கள் தெற்கின் காதுகளுக்கு கேட்காது. ஏனெனில், அந்தக் குரல்களை பெரும் இரைச்சலாக அது காண்கிறது. ஆனால், இந்த நல்லிணக்கப் போதனையாளர்களின் காதுகளுமா அடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஜெனீவா அமர்வுகள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு தருணமும் இலகுவான வீசா அனுமதியும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பெரும் நிதியையும் பெற்றுக் கொண்டு ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டு வருபவர்களுக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினை, அவர்கள் கோரும் உறுதி பற்றி என்ன தெரிந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை அண்மைய உரையாடலொன்றின் போது, சட்டத்துறை நண்பர் ஒருவர் எழுப்பினார். தமிழ் மக்கள் அடிப்படையில் கோரிக்கொண்டிருப்பது நீதி. அந்த நீதி எதிர்கால நம்பிக்கையான வாழ்வுக்கு அடிப்படையானது. அதுதான், நல்லிணக்கம் பற்றிய அடிப்படைகளின் முதற்படி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலுக்கு பல்வேறு பட்ட கோணங்கள் உண்டு. அவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தால் பல தரப்புக்களும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியிருக்கும். அது, முழுவதுமாக செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த மோதல் சம்பவத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை நல்லிணக்கத்துக்கும் சமாதான முனைப்புக்களுக்கும் விரோதமானவர்கள் என்று விரல்களை நீட்டுபவர்கள், நீதிக்கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு தப்பித்துக் கொள்ளும் முனைப்போடு இயங்கும் சதிகாரர்கள் என்றே கொள்ள வேண்டியிருக்கின்றது.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஆகஸ்ட் 10, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.