பதிவுகள்
Typography

சிறிலங்கா ஜனாதிபதியாலோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களாலோ , இலங்கை முழுவதிலும் உள்ள சகல இனமக்களையும், சம உரிமைகளுடன் வாழக் கூடிய மக்கள் என்ற நிலையை உருவாக்க முடியும் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப்புலிகளோ, சிறிலங்கா அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம் புரிந்தால் அதை வெளிக் கொணர்வது ஊடகவியலாளர் கடமை.

ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது சிறிலங்கா தொடர்பிலும் அதையே செய்துள்ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும் என ஜெனிவாவில் 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' எனும் சனல்4 தொலைக்காட்சியின் ஆவணப் பட இயக்குனர் கல்ம் மக்ரே (Callum Mcrae) தெரிவித்தார்.

ஐ.நா.வின் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வரும் இவ்வேளையில், அதையொட்டி அங்கு நடைபெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான திரைப்பட விழாவில் இன்று (11.03.2012) ஞாயிற்றுக் கிழமை மாலை 6.45 மணிக்கு பிரித்தானியத் தொலைக்காட்சிச் சேவையான சனல்4 தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'(Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) ஆவணப்படம் திரையிடப்பட்டது.

எதிர்வரும் புதன்கிழமை (14.03.2012) சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த ஆவணப்படம் முதற் தடவையாக இத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், இன்றைய சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டு, இந்த ஆவணப்படத்தினைப் பார்வையிட்டனர். திரையிடலுடன் நடைபெற்ற கருத்துக்கள கலந்துரையாடலில், இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கல்ம் மக்ரே (Callum Mcrae) கலந்து கொண்டு ஆவணப்படம் குறித்த பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவணப்படத் திரையிடலின் பின்னர் இயக்குனரை நேரில் சந்தித்த 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர், உங்கள் ஆவணப்படத்தின் தாக்கம் சென்னறடையப்பட வேண்டிய முக்கிய தளமான சிங்கள மத்தியில் எவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்துச் சொல்ல முடியுமா எனக் கேட்ட போது, போர்க் குற்றங்கள் தொடர்பில் சனல் 4 முன்வைக்கும் ஆவணங்களை, போலியானவை என ஒற்றைச் சொல்லில் சிறிலங்கா அரசு மறுப்பதும், அதனை பெருமளவிலான சிங்கள் மக்கள் நம்புவதும் மறுக்கமுடியாது.

ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மக்களிடம் அதிர்ச்சி கலந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அதிக எண்ணிக்கையான சிங்கள மக்கள் ராஜபக்ச குழுவினரின் நடவடிக்கைகளை நம்புவரகளாக இல்லை. அதேபோல் அதிகளவு சிங்கள மக்கள் இவ்விடயங்கள் தொடர்பில் அக்கறைய உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள் கூட இவ்விடயங்களில் கவலைப்படுபவர்களாக இருக்கின்றனர்.

அதேபோல் சிறிலங்கா இராணுவத்திற்கு மிக நெருங்கியவர்கள் கூட இவ்விடயங்களில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு இருந்தபோதும் இதே அளவு மறுபக்கத்தில் ஏராளமான சிங்கள மக்கள் அரசு சொல்வதை நம்புவர்களாகவே இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசு தனித்தனியாக விளக்கம் தருவதை விடுத்து, ஒரேயடியாக வீடியோ காட்சிகள் அனைத்தும் போலி என்று இலகுவாக சொல்லுவிடுகின்றது. அவ்வாறு தான் சொல்வதை ஏராளமான சிங்கள மக்கள் நம்புப்படியாகவும் சிறிலங்கா அரசு பிரச்சாரங்களைச் செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகளின் சில ஆதரவு அமைப்புக்கள் பின்புலத்தில் செயற்படுவதாக சிறிலங்கா அரசு தொடர்ந்து குற்றச்சாட்டி வருவது பற்றி என்ன கூறுகிறீர்கள்? எனக் கேட்ட போது, புலிகளின் ஆதரவுடனே வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சிறிலங்கா அரசின் மற்றுமொரு குழப்பமான குற்றச்சாட்டுக்கு உதாரணமாகும் என்றார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், இக் குற்றசாட்டு உண்மையாயின் நாங்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொண்டு வர முடியும். உதாரணமாக மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமைமை வெளிப்படுத்தியிருக்கின்றோம். உண்மையில் இது மிகவும் கடினமான தருணம் ஏன் இலங்கை அரசு இவ்வாறு சொல்கின்றது என்பது புரியவில்லை.

ஆனால் ஆவண திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும். நிதி உதவி அழிப்பதாக கூறப்படுவது முட்டாள் தனமான கூற்றாகும். சேனல்4 தொலைக்காட்சியின் முழுமையான நிதி உதவியில்தான் இத்திரைப்படம் உருவாகியது. நாங்கள் சுதந்திர ஊடகமாக செயற்படுகின்றோம் . எமது முன்னைய விசாரணைகளில் அமெரிக்கா, இங்கிலாந்து  அரசுகளின் அதிகளவிலான போர்க்குற்றத் தவறுகள் சுட்டப்பட்டுள்ளன. அதுபோலவே சிறிலங்காவின் போர்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.

 'இலங்கையின் கொலைக்களம்  'அங்கு நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தியது போன்று,  'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் ' சிறிலங்கா அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், பொய்முகத்தையும், வெளிப்படுத்தியிருக்கிறது என தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.

கலந்துரையாடலை நிறைவு செய்யும் போது, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தனி அரச அலகு உருவாகவேண்டும் என்பது குறித்து எந்த நோக்கும் தன்னிடம் இல்லாத போதும், சிறிலங்கா ஜனாதிபதியாலோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களாலோ , இலங்கை முழுவதிலும் உள்ள சகல இனமக்களையும், சம உரிமைகளுடன் வாழக் கூடிய மக்கள் என்ற நிலையை உருவாக்க முடியும் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது  எனத் தான் கருதுவதாக  இயக்குனர் கல்ம் மக்ரே (Callum Mcrae) கூறி முடித்தார்.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்