பதிவுகள்

 

ஊரே சேர்ந்து வடம் பிடித்திழுத்த தேர், தேர்மூட்டியை வந்தடைந்துவிட்டது. ஆம், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கோலாகலங்கள் முடிவடைந்து ஆட்சி, அதிகார பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தலைநகரில் ஆரம்பித்திருக்கின்றன. தமிழர்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வாக்களித்திருக்கிறார்கள். 

வடக்கு (கிழக்கு) மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார்கள். தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் துன்பத்தை மட்டுமே தமிழ் மக்களுக்கு பரிசாளித்த மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கவும்- மாற்றத்திற்காகவும் வாக்களித்திருக்கிறார்கள்.

ஆயினும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான தேடல் இன்னும் ஆரம்பித்த புள்ளியிலேயே நிற்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உச்சபட்ச அதிகாரப்பகிர்வுடன் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தம்மை தாமே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வை பெறுகிற வரை தமிழரின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். போராட்ட வடிவங்கள் மாறியிறுக்கிறது. உள்ளக, உலக அரசியல் சூழ்நிலைகள் மாறியிருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிகள் இராஜதந்திர காய்நகர்த்தல்களை அதற்கேற்றால் போல் மாற்றி மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுதல் காலத்தின் அவசியம். 

மேற்சொன்ன விடயங்களை முனைப்பாக செய்ய எம்மிடையே ஒற்றுமையும், குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையும் இருப்பது இன்றியமையாதது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் முன்னிறுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாத்து அரசியல், ஜனநாயக உரிமைகளை வெற்றெடுப்பது அந்த கட்சிகளின் கடப்பாடு மட்டுமல்ல, மக்களின் கடமையுமாகும். குறிப்பிடத்தக்க முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தாலும், இன்னும் செம்மைப்படுத்தி அடுத்த பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்துவதற்கு பின்வரும் விடயங்கள் முக்கியமானவை.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்தல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது பங்காளிகளாக அங்கம் வகிக்கும் கட்சிகளின் முயற்சியுடன் உடனடியாக கலந்துரையாடி பொதுவான இணக்கத்துக்கு வந்து ஒரே கட்சியாக பதிவு செய்வது அவசியமானதும் அவசரமானதும் கூட. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா இதற்கான முன் முயற்சியில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு.

மக்களின் நலனுக்காக விட்டுக்கொடுப்புகளை செய்து ஒற்றுமையை வலுப்படுத்துவதில் தவறேதுமில்லை என்பதை புரிந்து கொள்வது காலம் நம் கண் முன் உணர்த்தி நிற்கும் பாடம். மாறாக நம் ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் எதிரிகளுக்கு இலகு வாய்ப்புகளை வழங்குவதில் பிரயோசனமில்லை.

2. பரந்த உட்கட்சி கருத்து சுதந்திரமும், கட்டுப்பாடுகளும்.

ஜனநாயகக் கட்சியொன்றில் ஒருமித்த கருத்து சிலசமயம் சாத்தியம். பெரும்பான்மையான கருத்தே முடிவாகவும், தீர்மானமாகவும் அமையும் சாத்தியங்களே அதிகம். மாற்றுக்கருத்துள்ளவர்கள் கட்சியின் பெயருக்கும், மக்களின் எதிர்காலத்துக்கும் குந்தகம் வரும் வகையில் பொதுவெளியில் கருத்து சொல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில், யாப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். கட்சியின் முடிவில் உடன்பாடு இல்லையெனில், வெளியேறலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேச்சு வழக்கு உண்டு. தேர்தல் காலங்களில் தம்மை புனிதர்களாக மக்கள் மன்றத்தில் நிரூபித்துக்கொள்ளலாம். மற்றையது மாகாண சபை அல்லது பாராளுமன்றில் அநாகரிக வார்த்தை பிரயோகம் செய்தல், செங்கோலை மறைத்து வைத்தல், தூக்கி கொண்டு ஓடுதல் போன்ற கோமாளித்தனத்தை உறுப்பினர்கள் செய்தால் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நன்னடத்தையான அரசியல் கலாசாரத்தை பேணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும்.

3. கட்சியை வளர்த்தலும், பரந்துபட்ட மக்கள் தொடர்பாடலும்.

அடுத்த தலைமுறைக்கான அரசியல் போராட்டத்துக்காக ஆளுமைமிக்க இளைஞர்களை அரவணைத்து இளைஞர் அணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியின் முடிவுகள், கொள்கைகளை ஆரோக்கியமான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். கிராம ரீதியான பரந்துபட்ட அரசியல் சமகால நிகழ்வு கருத்தரங்குகளினூடாக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பாராளுமன்ற, மாகாண சபை, நகர பிரதேச சபை அங்கத்தவர்களினதும், கட்சியின் முக்கியஸ்தர்களினதும் கடமை.

அத்தோடு, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அரசியலில் வழிவிட்டு பெரியவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். தொடர்பாடல் செய்முறை முறையாக நடைபெறுகிறதா என்பதை கட்சி மேலிடம் முறையாக கண்காணிக்க வேண்டும். சமூக வலைத்தளமூடாக ஆக்கபூர்வமான இருவழித் தொடர்பாடலை ஆரம்பிக்க வேண்டும்.

4. மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவி

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருளாதார உதவிகளை உலக/உள்ளூர் தமிழ் மக்களிடம் பெற்று வழங்க ஒரு பொறிமுறை அவசியம். அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். மாகாண சபையின் கீழ் 'முதல்வர் நிதியம்' ஆரம்பிக்க ஆளுநர் அனுமதிக்காத நிலை இதுவரை இருந்தது வரும் நிலையில் இப்போது புதிதாக பதவியேற்கும் மத்திய அரசாங்கத்திடம் வைக்கும் முதல் கோரிக்கையாக இதுவாக தான் இருக்க வேண்டும்.

முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வு, விதவைகள் மறுவாழ்வு, அங்கவீனர்களுக்கான மறுவாழ்வு, போரினால் தாய், தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான மறுவாழ்வு என அத்தியாவசியமாதும் உடனடியானதுமான நடவடிக்கைகளை பொருளாதார உதவி கொண்டு முன்னெடுக்க வேண்டும்.

முழுமையான நிவாரண ஆற்றுப்படுத்தல் தேவைகளை கவனிக்க கட்சியில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு மாகாண சபையுடனும் அபிவிருத்தி சங்கங்களுடனும் புலம்பெயர் நன்கொடையாளர்களுடனும் இணைந்து இணைப்பு பாலமாக இயங்க வேண்டியது இன்றியமையாதது.

உதவிகளின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த கணக்காய்வுகளும் இருக்க வேண்டும். நிதிநிலைக் கூற்றுகள் உறுப்பினர்கள் பார்வைக்கும் இருக்க வேண்டியதும் அத்தியாவசியமானது.

5. மாகாண, மாநகர, நகர, பிரதேச சபைகளின் வினைத்திறனும் வளப்பங்கீடும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் செயற்றிட்டங்கள், பாதீட்டு ஒதுக்கீடுகள், பணி நிறைவு அளவீடுகள், நிறைவேறாத செயற்றிட்டங்கள் பற்றி முமுமையான கால அட்டவணையுடன் கூடிய தொடர் ஆய்வு பொறிமுறை முக்கியமானது. அந்தந்த சபைகளினூடாக செய்யப்பட்ட செயற்றிட்டங்கள் பற்றி பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். இலஞ்சம், ஊழல் இல்லாமல் மக்களுக்கான பணம் மக்கள் பிரதிநிதிகளால் செலவு செய்வதை உறுதிப்படுத்துவதுடன் வினைத்திறனை மேற்பார்வை செய்வதன் மூலம் மக்கள் பணியில் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.

6. தூர நோக்கோடு அரசியல் தீர்வுக்காக உழைத்தல்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரே இரவில் பெற்றுவிட முடியாது. இது ஒரு தொடர் ஓட்டம் என்பதை புரிந்து இராஜதந்திர நகர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும். நேச சக்திகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும். புது நண்பர்களை உருவாக்க வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதிருத்தல் வேண்டும். தொடர்ந்து உரிமைகளுக்காக மக்கள் அபிவிருத்தியை புறந்தள்ளி காத்திருப்பார்கள் என்று நினைக்க முடியாது என்கிற யதார்த்தத்தையும் ஓரளவு விளங்கிக்கொள்ள வேண்டும். புதிய அரசாங்கத்தின் மூலம் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். கொண்ட கொள்கையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் பங்கம் நேரா வகையில் நேர்மையாக உழைக்க வேண்டும்.

நீ யார் இதை சொல்ல என்று நீங்கள் கேட்கலாம். இதை எல்லாம் சாதாரண தமிழ் மகனா தமிழ் மக்களின் எதிர்கால நம்பிக்கைக்காக சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை என்பதை அறிவேன்!

(இலங்கையில் ஆட்சி மாற்றமொன்று நிகழ்ந்திருக்கின்றது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்களித்திருக்கின்றார்கள். இந்த நிலையில், தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் அவசரமானதும், அவசியமானதுமான கடப்பாடுகள் இருக்கின்றன. அது, தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்துரைத்து வரும் சிவதாசன் டினேஷன் எழுதிய பகுதி இது. அவரின் அனுமதியோடு சில திருத்தங்கள் செய்து மீள்பிரசுரிக்கின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.