பதிவுகள்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மேடையும் அப்போது, அதி முக்கியத்துவத்துடன் நோக்கப்பட்டது. ஏனெனில், முரண்பாடுகள் முற்றிய நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி தூக்கிய போர்க்கொடியை, நேரடியாகத் தலையிட்டு, அப்போதுதான் சம்பந்தன் இறக்கி வைத்திருந்தார்.

அதன்பின்னர், ஒருசில மேடைகளை இருவரும் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அந்த மேடைகள், அவர்கள் இருவரையும் பிரதானப்படுத்திய மேடைகளோ, நிகழ்வுகளோ அல்ல. ஆனால் இந்நூல் வெளியீடு, இருவரையும் மையப்படுத்திய ஒரு நிகழ்வாக அமைந்தது. மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், இம்மேடை, பல தரப்புகளாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கூட்டமைப்புக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடுகளை, ஊடகங்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார். கனடாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகையொன்றுக்கு, 2015 ஏப்ரல் - மே மாதமளவில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் பலரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பின்னர், பொதுத் தேர்தல் காலத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை, முரண்பாடுகளின் அடுத்த கட்டத்தைப் பதிவு செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, கூட்டமைப்புக்கும் (குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கும்) அவருக்கும் இடையிலான முரண்பாடுகளின் அளவு, அதிகரித்தே வந்திருக்கின்றது. அது குறைவடையவில்லை.

2015 பொதுத் தேர்தல் காலத்துக்குப் பின்னர், விக்னேஸ்வரனால் ஆற்றப்பட்ட உரைகளில் பெரும்பாலானவை, கூட்டமைப்பை அல்லது கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைகளை விமர்சித்து ஆற்றப்பட்டவையே. அவற்றின் தொகுப்பையே, சம்பந்தன் வெளியிட்டு வைத்திருக்கின்றார்.

விக்னேஸ்வரனின் ‘முதலமைச்சர் கால’ உரைகளைத் தொகுக்க வேண்டும் என்கிற ஆலோசனையை ஆரம்பத்தில் வழங்கியவர்களில் எம்.ஏ.சுமந்திரன் முக்கியமானவர். அதனை, சம்பந்தனிடமும் கூட விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். ஆனால், முதலமைச்சரின் உரைகள் அடங்கிய நூல் வெளிவருகின்ற போது, அந்த நூல் வெளியீட்டுக்கும் சுமந்திரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் போய்விட்டது. ஆனால், நூலின் உள்ளடக்கங்கள் தோறும் சுமந்திரனும் குறிவைத்து விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், விக்னேஸ்வரனைப் பலப்படுத்தி, புதிய கூட்டொன்றை உருவாக்க வேண்டிய தேவை, கூட்டமைப்புக்கு எதிரான அனைத்துத் தரப்புகளுக்கும் உண்டு. அதன்போக்கிலேயே, இந்த நூல் வெளியீட்டு விழாவையும் ஆரம்பத்தில் ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள். அதனால்தான், சம்பந்தனை பிரதம விருந்தினராக அழைக்கும் கட்டமும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

ஆனாலும், காலம் செல்லச் செல்ல புறக்காரணிகளின் தலையீடுகளால், சம்பந்தனை அழைக்கும் கட்டத்துக்கு விக்னேஸ்வரன் வந்திருக்கின்றார். தொலைபேசி வழி, விக்னேஸ்வரன் அழைத்த போது, சம்பந்தனும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். விழா அரங்கைத் தன்னுடைய பரிவாரங்கள் சூழ, அவர் ஆக்கிரமித்தும் இருக்கின்றார்.

நிகழ்வுக்கு வரவே மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவை சேனாதிராஜா, சுமந்திரன் உள்ளிட்டவர்கள் விக்னேஸ்வரனின் பெரும் வரவேற்போடு முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சுமந்திரனோ ஒருபடி மேல் சென்று, நிகழ்வில் விக்னேஸ்வரனால் தான் வரவேற்கப்பட்ட காட்சிகள் முதல், சம்பந்தனின் உரைவரை, நிகழ்வில் இருந்து கொண்டே, சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் அதை ஒருவித குதூகல மனநிலையில் செய்து கொண்டிருந்தார் என்று தோன்றுகின்றது.

விக்னேஸ்வரன் தன்னுடைய ஏற்புரையின் போதும், தன்னுடைய ‘சிஷ்யன்’ என்கிற அடைமொழிக்குள் வைத்து, சுமந்திரனை விமர்சித்திருந்தார். ஆனாலும், அது பற்றியெல்லாம் சுமந்திரன், அலட்டிக் கொண்டதுபோல தோன்றவில்லை. அத்தோடு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தனக்காக அல்லாமல் சம்பந்தனுக்காகவே நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்கிற உண்மையையும் விக்னேஸ்வரன் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருந்தது.

ஆனால், கடந்த வருடம் பத்திரிகை அறிமுக விழா மேடையில், சம்பந்தனுக்கு முன்னால், வார்த்தைக்கு வார்த்தை தான் கூட்டமைப்பின் தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்றேன் என்று பேசியது மாதிரியான தோற்றப்பாட்டை, இப்போது விக்னேஸ்வரன் வெளிப்படுத்தவில்லை. ஒற்றுமையின் பலம் மற்றும் தேவை பற்றி சம்பந்தன் தனது உரையின் போது வலியுறுத்திய போதும், கொள்கைகள் இல்லாத ஒன்றுமையால் பலனில்லை என்று விக்னேஸ்வரன் பதிலுரைத்திருக்கின்றார்.

இரண்டு மேடைகளிலும் சம்பந்தன் தன்னுடைய நிலையிலிருந்து எந்தவித இறக்கு நிலையையும் காட்டவில்லை என்பது உண்மை. ஆனால், விக்னேஸ்வரனின் உரையிலும் நடவடிக்கைகளிலும், குறிப்பிட்டளவு மாற்றத்தை உணரக் கூடியதாக இருந்தது.

கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் தான் முதலமைச்சராகப் போட்டியிடும் சூழல் உருவானால், அதன்போது தன்னுடைய பலம் அதிகமாக இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். சம்பந்தனை வெட்டி ஓட வேண்டும் என்கிற நிலையை, அவர் எடுத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில், குறிப்பிட்டளவு சுயாதீனமாக இயங்குவதற்கான சூழலை உருவாக்க நினைக்கின்றார். அதன்மூலம், கடந்த காலத்தில் தன்னை நோக்கி திரண்ட கூட்டத்தைத் தக்கவைக்க முடியும் என்று நம்புகிறார். அத்தோடு, கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைக்குள் இருந்து தன்னை அகற்றம் செய்யாது பாதுகாக்கவும் விரும்புகின்றார்.

சம்பந்தன் ஏற்றிருக்கின்ற தலைமைக்கு மாற்றான தலைமையை ஏற்பதில், விக்னேஸ்வரனுக்கு ஆரம்பம் தொட்டு மனத்தடை உண்டு. அது, ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காத மனநிலையின் போக்கில் மாத்திரம் வருவதல்ல. மாறாக, நிலைமைகளைக் கையாளுவது சார்ந்தும் வருவது. விடயங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், கையாளும் சமயோசிதத்தை சம்பந்தன் கடந்த காலத்தில் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். அதன்போக்கில், விமர்சனங்கள் இருந்தாலும், இருப்பவர்களில் சம்பந்தன்தான், தலைமைத்துவத்துக்குத் தகுதியானவர் என்கிற உணர்நிலையும் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.

அத்தோடு, சம்பந்தன், என்றைக்குமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற நிலைப்பாட்டின் பக்கத்தில் நின்று முடிவுகளை எடுத்தவரில்லை. அப்படியான முடிவொன்றை தனக்குள் எடுத்தாலும், அதை வெளிப்படுத்தும் போது, மிகவும் இயல்பான ஒன்றுபோல காட்டிக் கொள்ளுவார்.

இந்தப் போக்கு, பங்காளிக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தென் இலங்கைக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கூட தெரியும். இதனால், இவ்வாறான ஒரு மனிதரை எதிர்கொள்வது என்பது, விக்னேஸ்வரனால் அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல. அதற்கு அவர் உண்மையிலேயே தயாராகவும் இல்லை. ஆனால், சம்பந்தனுக்கு அடுத்த நிலை, அதாவது முடிவெடுக்கும் தலைமை என்கிற நிலை தனக்கு இல்லை என்பதுதான் விக்னேஸ்வரனைப் பெரும் சிக்கலுக்குள் தள்ளி வந்திருக்கின்றது. அதுதான், அவரைக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியின் தலைமையை ஏற்கும் சூழலையும் உருவாக்கியது.

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற உறுதியான முடிவொன்றுக்கு சம்பந்தன் இதுவரை வந்திருக்கவில்லை. அதுபோல, கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு தலைமையேற்று வடக்கில் பெரும்பான்மை வெற்றியொன்றைப் பெற முடிவும் என்றும் விக்னேஸ்வரன் கருதவில்லை. குறிப்பாக, புதிய அணியொன்றுக்கு தலைமையேற்று தேர்தலில் போட்டியிட்டால், கடந்த முறைபெற்ற 130,000 வாக்குகள் என்கிற அளவில் சில நூறு கூட இழக்கப்படக் கூடாது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். அப்படி இழக்கப்பட்டால், அது சுய கௌரவத்துக்கான இழுக்கு என்றும் அவர் எண்ணுகிறார். அப்படியான சூழலில், கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள், யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, வடக்கின் ஏனையை மாவட்டங்களிலும் வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் காண்பிக்காத போது, புதிய கூட்டணிக்கு தலைமையேற்பது குறித்து சிந்திக்கவே அவர் விரும்புகின்றார்.

அப்படியான நிலையில், புறக்காரணிகளின் தலையீட்டோடு கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகும் காட்சிகளும் நிகழக்கூடும். அவ்வாறான காட்சிகள் அரங்கேறும் போது, சம்பந்தனுக்கு அடுத்து, முக்கிய பாத்திரத்தை வாங்கிக் கொள்வது சார்ந்து விக்னேஸ்வரன் தற்போது சிந்திக்கின்றார் போலத்தான் தோன்றுகின்றது. அவ்வாறான நிலை, உருவாகுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி, மீண்டும் கலைந்து போகும். அதுபோல, தமிழரசுக் கட்சியின் ஏக நிலைக்கான பாய்ச்சலும் சற்று காலதாமதமாகும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (யூன் 27, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.