பதிவுகள்

'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் (வன்வலுவின் ஒரு வடிவம்) கோலோச்சிய அரங்கொன்றில், மென்வலு பற்றிய எண்ணக்கருவும், சொல்லாடலும் கவனம் பெறுவது சற்று வியப்பானதுதான். ஆரம்பத்திலிருந்து அந்த உரையாடல்களை சில தரப்புக்கள் ஒருவிதமான ஒவ்வாமையோடு எதிர்கொண்டன. ஆனாலும், மென்வலு பற்றிய உரையாடல்கள் தொடரப்பட வேண்டியதன் அவசியத்தை எம்.ஏ.சுமந்திரன் ஏற்படுத்தி விட்டிருக்கின்றார். 

ஏனெனில், தமிழ் அரசியல் அரங்கில் மென்வலு (Soft Power) பற்றிய உரையாடல்களை மீண்டும் தோற்றுவித்தவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொள்ள முடியும். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் தன்னுடைய பிரசார நடவடிக்கைகளில், 'எம் விதியை நாம் வரைவோம்; மென்வலு எம் வலு' என்கிற வாசகத்தை முன்வைத்து வாக்குக் கோரினார்.  மஹிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்திற்குப் பின்னரான நாட்களில், மென்வலு அரசியல் முனைப்பு வெற்றிகளை நோக்கியதாகவும் தென்னிலங்கையில் நம்பிக்கைகளை ஏற்படுத்துமளவுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரனும் இன்னமும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

மென்வலு பற்றிய சொல்லாடல், கூட்டமைப்பு மற்றும் சுமந்திரன் எதிர்ப்பாளர்களினால் தற்போது எள்ளல் தொனியோடு பெரும்பாலும் கையாளப்படுகின்றது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் அதன் பிரதிபலிப்பைக் காண முடியும். ஆனால், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்களுக்கு மத்தியில் மென்வலு தொடர்பில் சாத்தியமான உரையாடல்கள் நிகழ வேண்டிய தேவையொன்று ஏற்பட்டது. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தவிர்க்க முடியாத நபராக சுமந்திரன் வளர்ந்து வருகின்ற நிலையில், அவரை எதிர்கொள்ள வேண்டிய தேவையொன்று உண்டு. அதன்போக்கில், அவர் முன்வைக்கும் விடயங்களைக் கையாள வேண்டியதும் அவசியமானது.

அமெரிக்கப் பேராசிரியரான ஜோசப் நெய், 1980களில் அப்போதிருந்த உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அமெரிக்க மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு எது தேவையோ அதுபற்றிய சிந்தனைகளை வெளியிடும் போது முன்வைத்ததே மென்வலு பற்றிய எண்ணக்கருவாகும். வன்வலு (Hard Power) எல்லா இடங்களிலும் அதிகாரத்தினை அல்லது மேலாதிக்கத்தினைப் பெற்றுத்தராது. மாறாக, இழக்கப்படாத வன்வலுவுடன், மென்வலுவும் இணைகின்ற போது சாத்தியமான வழிகள் திறக்கும் என்பது தொடர்பிலானதே அந்தச் சிந்தனையின் அடிப்படை. இங்கு வன்வலு என்பது ஆயுத ரீதியிலான ஆதிக்கம்; பொருளாதார ரீதியான பலம்; பிராந்திய முக்கியத்துவம் உள்ளிட்டவற்றைக் குறிப்பதாகக் கொள்ள முடியும்.

அதற்கான அண்மைக்கால உதாரணமொன்றைப் பார்க்கலாம். அதாவது, விடுதலைப் புலிகளை அரங்கிலிருந்து அகற்றும் வரை, மஹிந்த அரசாங்கத்துக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட்ட அமெரிக்கா, மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் சென்றதும், உலக ஒழுங்கின் போக்கில்  ஒரு வகையான வன்வலுவைப் பிரயோகிக்க ஆரம்பித்தது. அதை ஐக்கிய நாடுகள் ஊடாக மேற்கொண்டது. நெருக்குவாரங்கள் (மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள்) மற்றும் பொருளாதார நெருக்குதல்களின் போக்கில் அது நிகழ்ந்தது. ஆனால், மஹிந்தவின் வெளியேற்றத்திற்குப் பின்னரான அமெரிக்காவின் நடவடிக்கை என்பது இலங்கை தொடர்பில் பெரும்பாலும் மாற்றம் கண்டது. சர்வதேச ரீதியில் தான் ஏற்படுத்திய நெருக்குதல்களை மெல்ல மெல்ல அகற்றி, மேற்குலகோடு இணக்கமான நாடாக இலங்கையை மாற்றுவதில் கவனம் செலுத்தியது. அதுபோல, தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறாத வண்ணம் பார்த்துக் கொள்வதில் குறியாக இருக்கின்றது. இங்கு வன்வலுவும் மென்வலுவும் இணக்கமாக இயங்கிய புள்ளிகளைக் காணலாம்.

தமிழ் மக்களின் வன்வலு என்று கருதப்பட்டு வந்த ஆயுதப் போராட்டம் அகற்றப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வன்வலு என்கிற பகுதி எவ்வாறான நிலைப்பாட்டினூடு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்கிற கேள்வி இங்கு பலருக்கும் உண்டு. ‘மென்வலு அரசியல் எண்ணக்கரு’ சாத்தியமற்றது என்று நாளும் பொழுதும் எழுதி வருபவர்களும் பேசுபவர்களும் கூட வன்வலு தொடர்பிலான புதிய கட்டமைப்பு எப்படி உருவாக வேண்டும் என்று எழுதியதுமில்லை; பேசியதுமில்லை.

ஏனெனில், ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகள் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல. அவர்களின் அரசியல் செயற்பாட்டுத் தளத்திலும் ஒரு இடைவெளியையும் சிந்தனைத் தேக்கத்தையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.  ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்தாத வன்வலு வடிவம் எது? அது எங்கிருந்து தோற்றம் பெற வேண்டும்? என்கிற கேள்விகளுக்கான பதில்கள்தான் தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய அடைவுகளைத் தீர்மானம் செய்யும். ஆக, தற்போது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் வன்வலு பற்றிய நம்பிக்கைகள் எந்தப் பக்கத்திலும் எழுந்து வரவில்லை. அப்படியான நிலையில், ஒருவித கவர்ச்சியை மாத்திரம் தோற்றுவிக்கும் மென்வலு சாத்தியமான வழிகளை அவ்வளவு இலகுவாக திறந்துவிடாது. ஏனெனில், பலமற்ற எதிரியை கையாள்வது தொடர்பில் பலமுள்ள தரப்பு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இடத்தில் சுமந்திரன் முன்மொழிந்த மென்வலு அரசியல் எண்ணக்கரு என்பது, தமிழ் மக்களின் ஒருமித்த வாக்களிப்பு மூலம் வெளிப்படுத்தப்படும் ஆணையின் மூலம் உறுதி செய்யப்படும் என்ற வகையில் இருந்தது. அரசியல் சாபக்கேடு நிரப்பிய பிராந்தியமொன்றில் வாழ்கின்ற ஈழத்தமிழ் மக்களுக்கு, தேர்தல் வாக்களிப்பினூடு கிடைக்கின்ற அங்கீகாரம் மாத்திரம் அதிகாரங்களையோ, தீர்வினையோ அடைவதற்கு போதுமானது இல்லை. மாறாக, பிராந்திய வல்லரசான இந்தியாவையும் உலக வல்லரசான அமெரிக்காவையும் கையாள்வதற்கான சூழ்நிலைகளும் அவசியம் என்பது அடிப்படையானது. இந்த இடத்திலும் சுமந்திரன் அமெரிக்காவின் பாரிய ஒத்துழைப்பு தொடர்பில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். இன்னமும் கொண்டிருப்பது போல காட்டிக் கொள்கின்றார்.

தமிழ்த் தேசிய அரசியலில் வன்வலு மற்றும் மென்வலு எவ்வாறான நிலைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்று பார்ப்போம். ஓங்கி வளர்ந்து, விழுதுகள் விட்ட ஆலமரம் ஒன்றை தமிழ்த் தேசிய அரசியலாகக் கொள்வோம். ஆலமரத்தின் ஆணி வேராகவும் விழுதுகளாகவும் வன்வலு இருக்க வேண்டும். காற்றுக்கு அசைந்து கொடுக்கின்ற கிளைகளாக மாத்திரம் மென்வலு இருக்க வேண்டும். ஆனால், ஆலமரத்தின் வேராகவும் விழுதுகளாகவும் கிளைகளாகவும் தமிழ் மக்கள் இருக்க வேண்டும். கிளைகளாக இயங்கும் மென்வலு காற்றோடு (பொது எதிரியும், வெளிச்சக்திகளும்) இணக்கமான பாங்கினை வகிக்க வேண்டும். மாறாக, காற்று சூறாவளியாக மாறுகின்ற போது, ஆணி வேரும், விழுதுகளுமே எந்தவித பாதிப்புமின்றி ஆலமரத்தின் இருப்பினைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் என்பது கோறையாகிப்போன, செல்லரித்த ஆலமரத்தினை ஒத்த நிலையைக் கொண்டிருக்கின்றது. ஆனால், கிளைகள் மாத்திரம் உயிர்ப்போடு இருப்பது மாதிரியான தோற்றப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், மென்வலு அரசியல் எண்ணக்கரு சற்று வேகம் கூடிய காற்றுக்கே ஆலமரத்தை மொத்தமாக சாய்த்துவிடும். இதுதான் இன்றைய நிலை.

இங்கு சுமந்திரனின் அரசியல் நிலைப்பாட்டினை எதிர்ப்பது மாத்திரம் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்களின் வேலையல்ல. மாறாக, தற்போதைய உலக ஒழுங்கில் தமிழ்த் தேசியப் பரப்பில் வன்வலுவை கட்டமைப்பது தொடர்பிலானதாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கூடி, கூட்டுப் போராட்டங்களை வடக்கு - கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். 2000களின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட 'பொங்கு தமிழ்' நிகழ்வுகளை ஒத்ததாக அந்தப் போராட்டங்கள் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றார்கள்.

சரி, பொங்கு தமிழ் நிகழ்வுகளை ஒத்த மக்களின், மாணவர்களின் பெருவாரியான ஒருங்கிணைவொன்றை தற்போது நிகழ்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தமிழ்ச் சூழலில் காணப்படுகின்றதா என்ற கேள்விக்கு ஏமாற்றமான பதிலே கிடைக்கின்றது. ஏனெனில், பொங்கு தமிழ் நிகழ்வுகள் கூட பெரும் முனைப்பும், வெற்றியும் பெற்ற ஆயுதப் போராட்டத்தினை பிரதானமாகக் கொண்டதாகவே அமைந்தன. 

அதாவது, விடுதலைப் புலிகள் மீதான அபிமானத்தின் அடிப்படையிலானது அது‚ அப்படிப்பட்ட நிலையில், புலிகளின் ஆயுதப் போராட்ட ஓய்வுக்குப்  பின்னரான இன்றைய நாட்களில் பொங்கு தமிழை ஒத்த நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது சாத்தியமானது அல்ல. ஆனால், மெல்ல மெல்ல மக்களிடம் உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும் தரப்புக்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்ற நிலையில், அந்த இடத்தினை யார் பிடிக்கப்போகின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வன்வலு அரசியல் எழுச்சியும் அதன் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். அவ்வாறான நிலையில், வன்வலு தோற்றம் பெறாத அரசியல் களத்தில், மென்வலு பற்றிய நம்பிக்கைகள் பொய்த்துப் போனதாகவே முடிந்து போகும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஆகஸ்ட் 17, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)