பதிவுகள்
Typography

தற்போதைய அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய இன்னொரு அதிரடி நடவடிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார். 

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் பிரத்தியேக நோக்குடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19வது திருத்தம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகும்வரை அதை ஜனாதிபதி கலைப்பதைத் தடுக்கிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னறிவித்தல் எதையும் கொடுக்காமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி சிறிசேன நியமித்ததையடுத்து அக்டோபர் 26ஆம் திகதி எதிர்பாராதவகையில் மூண்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்தே இந்த பாராளுமன்றக் கலைப்பும் நடந்தேறியிருக்கிறது.

19வது திருத்தத்தின் வீச்செல்லைகளுக்கு வெளியே பிரதமரைப் பதவிநீக்கம் செய்த விதம் அரசியல் மற்றும் பொருளாதார அனர்த்தங்களைக் கொண்டுவரக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும் ஆபத்தைக்கொண்ட ஒரு அரசியல் நெருக்கடிக்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில் எமது நாட்டின் நீண்ட ஜனநாயக வரலாறு குறித்து பெருமைப்பட்டு வந்திருக்கின்றோம்.

நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் ஒரு அரசாங்கத்தில் இருந்து இன்னொரு அரசாங்கத்துக்கு அதிகாரம் நியாயபூர்வமான முறையில் மாற்றப்பட்டுவந்திருக்கிறது. ஜனநாயக நாடாக இலங்கையை நாம் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறோம். சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பின் மேலாண்மையையும் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்களையும் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகார மாற்ற பொறுப்புக்கூறலையும் நாம் மதிக்கிறோம்.

அரசியலமைப்பு செயன்முறைகளுக்கு அப்பாற்பட்ட முறையில் பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் செயலைக் கண்டு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறோம். தனது பதவியின் அதிகாரங்களைத் தியாகம் செய்த ஒரு தனித்துவமான தலைவர் என்று தன்னைப் பற்றி அடிக்கடி பெருமைப்படுகின்ற ஜனாதிபதி சிறிசேனவின் கண்காணிப்பின் கீழேயே அரசியலமைப்புக்கான 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தினால் ஆளப்படுகின்ற சமுதாயம் ஒன்றில் அரசியலமைப்புக்குப் புறம்பான உத்தரவின் மூலம் பாராளுமன்றக் கலைப்பிற்கு இடமிருக்கமுடியாது. ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மேலும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கக் கூடிய முன்னுதாரணமாக அமைந்துவிடும். தேசிய ஐக்கியத்துக்கும் அபிவிருத்திக்கும் சட்டத்தினால் ஆளப்படுகின்ற அரசு ஒன்று முன்னிபந்தனையாகும்.

அத்தகைய அரசு நிலைகுலைந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிறோம். தற்போது காணப்படக்கூடியதாக இருக்கின்ற அரசியலமைப்பு மீறல்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் நீதிமன்றங்கள் தடுக்காதபட்டத்தில் அல்லது தேர்தல்களில் மக்கள் நிராகரிக்காத பட்சத்தில் சட்டத்தினால் ஆளப்படுகின்ற அரசுநிலைகுலைந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS