பதிவுகள்
Typography

முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நாட்களும், மாவீரர் நினைவேந்தல் வாரமும் அண்மிக்கும் தருணங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. எல்லாவற்றையும் திரும்பி பார்த்து, அழுது புலம்பி அரற்றி ஆற்றாமையின் அழுத்தத்தினால் விழுந்து புரண்டு தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க வேண்டியிருக்கின்றது.

இந்த நிலைக்கு, எம்மிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பினையும், அதுசார் தார்மீகத்தினையும் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்கிற குற்றவுணர்ச்சியே பிரதானமாக இருக்கின்றது. இடைநடுவில் நின்ற எமது பயணத்தினை சரியான பக்கங்களை நோக்கி நகர்த்தி கொண்டு செல்ல வேண்டிய அழுத்தமும் பெரியதாக இருக்கின்றது. அது, எம்மால் தூக்கிச் சுமக்க முடியாத பாரமாகவும் இருக்கின்றது.

மலர்கள் தூவி, தீபங்களை ஏற்றி, அஞ்சலிப் பதிவுகளை எழுதிவிட்டு எமது பொறுப்புக்கள் முடிந்துவிட்டதாக நினைத்து ஒவ்வொரு மாவீரர் தினத்தையும் கடந்து செல்லும் போது, எரிந்து கொண்டிருக்கும் தீபங்கள் எங்களை நோக்கி ஆயிரமாயிரம் கேள்விகளை எழும்புகின்றன. அந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தீபங்களை திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக நடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.

அதில், கடந்த சில வருடங்களாக பிரதானமாக எழும் கேள்விகளையாவது நாம் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு இப்போது உண்டு.

*மாவீரர்களாக வீழ்ந்துவிட்டவர்களின் ஆயிரமாயிரம் குடும்பங்கள் பேரழிவுக்குப் பின்னராக வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வை எவ்வாறு மீட்டெடுத்துக் கொடுக்கப் போகின்றோம்?

*முன்னாள் போராளிகள் வாழ்க்கையை முற்றாக தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்ற வேண்டிய பொறுப்பினை எப்போது நிறைவேற்றப் போகின்றோம்?

இந்த இரண்டு கேள்விகளையும் புறந்தள்ளிவிட்டு தீபங்களை ஏற்றுவதாலோ, அஞ்சலிக் கவிதைகளை வாசிப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. நாம் அரசியல் ரீதியாக எவ்வளவு விழிப்புணர்வுடன் முன்னோக்கி செல்ல வேண்டுமோ, அதனையும் தாண்டிய அர்ப்பணிப்புடன் எங்களின் கடப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். அதனை செய்யாமல் எவ்வளவு தூரம் சென்றாலும், எம்மோடு ‘தோற்றுப்போனவர்கள்’ என்கிற அடையாளம் ஒட்டிக்கொண்டு வரும்.

அவ்வாறான நிலையை, மாவீரர்களாக உறங்கிக் கொண்டிருக்கும் உறவுகள் என்றைக்குமே எதிர்பார்க்கவில்லை. மாவீரர்களின் கனவுகளை கொண்டு சுமப்பது போல… அவர்கள் விட்டுச் சென்ற பொறுப்புக்களையும் நிறைவேற்ற உறுதி பூணுவோம். அது, தமிழ் சமூகத்தைப் பீடித்துள்ள குற்றவுணர்ச்சியிலிருந்து மீட்பதற்கும் உதவும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து உறங்கிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கும், போராட்ட வாழ்வில் தமது உயிர்களை கொடுத்துவிட்ட பொதுமக்களுக்கும் அஞ்சலிகள். நீங்கள் விட்டுச் சென்ற விடுதலைக்கான பயணத்தை சாத்தியமான வழிகளில் எப்படியாவது தொடர்வோம்… அஞ்சலி வணக்கங்கள்!

-புருஜோத்தமன் தங்கமயில்

BLOG COMMENTS POWERED BY DISQUS