பதிவுகள்
Typography

 

தமிழ் மக்கள் பேரவை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே, அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய முன்வரைவினை வெளியிட்டிருக்கின்றது. பேரவையின் உருவாக்கம் மீதான ஆதரவும் அதிருப்தியும் தமிழ்த் தேசிய உரையாடல் பரப்பில் இருந்து இன்னும் அகலவில்லை. அப்படியான நிலையில், எதிர்பார்க்கப்பட்டதைத் தாண்டிய வேகத்தில் பேரவை தன்னுடைய முதல் நடவடிக்கையாக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவினை மக்கள் முன் வைத்திருக்கின்றது. 

தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்ட நீட்சி, காலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றது. ஆனால், அதன் அடிப்படை 'தம்மை ஒரு தேசமாக முன்வைத்து சுயாட்சி' பற்றிய கோடிடல்களோடு இருந்திருக்கின்றது. இந்த அடிப்படையை ஒற்றி, முன்னுக்குப் பின்னான கோரிக்கைகளே கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் வீச்சம் பெற்ற போதும், அது முடிவுக்கு வந்த பின்னரான இன்றைய சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும், ஆட்சியுறுதி பற்றிய அடிப்படையும் மாறிவிடவில்லை.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்கள் பேரவை முன்மொழிந்துள்ள தீர்வுத் திட்ட யோசனைகள் கோருவது என்ன, ஒரு சாதாரண தமிழ் குடிமகனால் விளங்கி வாசிக்கப்படுமளவுக்கான விடயங்களில் எது அதிகமாக தாக்கம் செலுத்துகின்றது?, என்பது பற்றி இந்தப் பத்தி பேச விளைகின்றது.

அரசுகளின் (அரசாங்கம் அல்ல) உரிமைகளும் கடமைகளும் தொடர்பான மொன்தெவீடியோ சமவாயத்தின் (Montevideo Convention on the Rights and Duties of States (1933)) உறுப்புரை ஒன்றில், சர்வதேச சட்டத்தின்படி, நாடு/அரசு ஒன்றுக்கான அடிப்படையான தகுதிகள் என்று 'நிரந்தரமான மக்கள் தொகை, வரையறுக்கப்பட்ட பிரதேசம், அரசாங்கம், மற்றும் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை/ உறவுகளை ஏற்படுத்தக்கூடிய திறன்.' ஆகியவற்றைக் கொள்கின்றது.

இலங்கையின் வடக்கு- கிழக்கில் தொடர்புள்ள பாரம்பரிய நிலப்பரப்பினையும், அங்கு, நிரந்தமான (பெரும்பான்மையான) மக்கள் தொகையையும் தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். இதன் போக்கில், தங்களை தேசிய இனமாகவும், சுயாட்சி கோருவதற்கான உரித்துள்ளவர்களாகவும் தமிழ் மக்கள் கருதி வந்திருக்கின்றார்கள். அதுவே, தங்களை தாமே ஆளுவதற்கான சுயநிர்ணய உரிமைகள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க அடிப்படையாக இருந்திருக்கின்றன.

இலங்கையில், பௌத்த சிங்கள தேசியவாதம், ஒற்றையாட்சிக் கோட்பாட்டோடு இருக்கின்ற வரையில், ஏனைய இனங்கள்/சமூகங்களுக்கான சமத்துவமும் அதிகாரங்களும் பகிரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைக் கோருவதற்கான முனைப்புக்களை பேரவை முன்வைக்கின்றது. அதாவது, 'இலங்கையானது, மதசார்புப் படிமுறையற்ற ஓர் அரசாக உருவாவதற்கு, இலங்கையின் பல்வேறு மக்கள் கூட்டங்களுக்கிடையே ஒரு சமூக ஒப்பந்தம் ஒன்று தேவை என்பதை சிங்கள பௌத்த சமூகமானது ஏற்றுக் கொள்ள வேண்டும்.' என்பது.

அதனை, அடிப்படையாக முன்மொழிந்துவிட்டு, ஒருங்கிணைந்த இலங்கைக்குள் (பிளவுபடாத ஒற்றுமையான இலங்கை அரசுக்குள்) அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பிலான உறுதிப்பாட்டினை பேரவை கீழ் வருமாறு வரையறை செய்கின்றது. 'இவ்வொப்பந்தம் ஊடாக ஒரு புதிய பல்-தேசிய இலங்கை அரசு ஒன்று தோற்றம் பெற வேண்டும். இதன் அர்த்தம் யாதெனில், தமிழ் மக்களினது தனித்துவமும் அவர்களது சுய நிர்ணய உரிமையும் முஸ்லிம், மலையக தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களும் அங்கிகரிக்கப்படல் ஆகும்.'

இவற்றின் போக்கில், தமிழர்களின் தேசம் என்ற அங்கிகாரம், அவர்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை, கூட்டாட்சி அதிகாரம், பாரம்பரிய தாயகம் ஆகியவற்றினைக் கோருகின்றது.

இந்தக் கோரிக்கைகளும், இவற்றுக்கான உடன்படிக்கையும் அதிகாரம் மிக்க மூன்றாம் தரப்பொன்றில் தலையீட்டோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த உடன்படிக்கையை பௌத்த சிங்களவாத தேசியவாதம் தீர்மானம் செலுத்தும் இலங்கை அரசினால் மீறப்படுகின்ற போது, பொதுவாக்கெடுப்பினை நடத்தி தன்னுடைய அரசியல் எதிர்காலத்தினை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதற்கான உறுதிப்பாடு வழங்கப்பட வேண்டும் என்ற வரையறையையும் கொண்டிருக்கின்றது.

உலகம் பூராவும் சுதந்திரத் தனிநாடு அங்கிகாரத்தினைத் தாண்டி, இணக்கப்பாடுள்ள ஒருங்கிணைந்த நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதற்கான பேரங்களும்- பேச்சுக்களும் தீர்க்கமான முடிவுகளை எட்டியதில்லை. அவை, தமக்குள் சில பிணக்குகளை தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருக்கின்றன. அதுவே, கனடாவின் கியூபெக்கிலும், ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து உள்ளிட்ட பிராந்தியங்களிலும் காணப்படுகின்றன.

பேரவை முன்மொழித்துள்ள யோசனைகள் பெரும்பாலும் கியூபெக் பெற்றிருக்கின்ற அதிகாரங்களை ஒற்றியதாக காணப்படுகின்றது என்று கொள்ளலாம். உலகளவிலும் அதிகாரங்களை அதிகளவில் பகிர்ந்துள்ள பிராந்தியத்துக்கான உதாரணமாகவும் கியூபெக்கே நடைமுறையில் கொள்ளப்படுகின்ற நிலையில், அதனை அடியெற்றிய யோசனைகள் வெளியிடப்படுவது இயல்பானதுதான். மத்திய- மாகாண அரசுகள் தமக்கிடையிலான பொறுப்புக்கள்/ அதிகாரங்கள் சார்ந்த வரையறையும், ஒருதரப்பின் மீதான மற்றத்தரப்பின் ஆளுகை பற்றிய கோடிடல்கள் பெரும்பாலும் தனியாளுகை சார்ந்ததாகவே பெரும்பாலும் இருக்கின்றன.

உதாரணமாக, ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைக் கோரும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளில், வெளிநாட்டு கொள்கைகள் சார்ந்து மத்திய அரசுக்கு இருக்கின்ற ஆளுகைகளை வடக்கு- கிழக்கு அரசு சார்ந்து சில வரையறைகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவராலயங்களில் வடக்கு- கிழக்கு மாகாண அரசுக்கான அலுவலகங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதுவும், வடக்கு- கிழக்கு மாகாண விடயங்கள் சார்ந்த வெளிநாட்டு விடயங்களில் மாகாண அரசாங்கத்தின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுவுமாகும்.

இது, தன்னுடைய சுயநிர்ணய உரிமை சார்ந்த அடிப்படைகளோடு 'சுயாட்சி அரசு' ஒன்றுக்கு இருப்பதற்கான அதிகாரங்களின் போக்கில் எழுவது. இப்படியான நிலையொன்றே கனடாவுக்கும்- கியூபெக்குக்கும் இடையில் காணப்படுகின்றது. கியூபெக் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் உத்தியோகப்பற்றற்ற தூதுவராலயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. உத்தியோகப்பற்றற்ற தூதுவராலயங்களுக்கு ஒத்த விடயமொன்றையே தூதுவராலயங்களுக்குள் தனியான அலுவலகம் ஒன்றுக்கான கோரிக்கை வெளிப்படுத்துகிறது.

ஆனால், கியூபெக்கின் இன்னொரு அடிப்படையான விடயத்தை பேரவை அடிக்கோடிடவில்லை. அதாவது, கனடாவின் குடிவரவு- குடியகல்வு கொள்கைகளுக்குள் கியூபெக் இருந்தாலும், அது தன்னுடைய பிராந்தியம் சார்ந்து குடிவரவு- குடியகல்வு அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு அரசு, குடிவரவு- குடியல்வு விடயங்களை இலங்கையின் மத்திய அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிற ஏகபோக உரிமையை விட்டுக் கொடுத்திருக்கின்றது.

இது, குடிவரவு- குடியகல்வு விடயங்கள் எதிர்கால அரசியல் போக்கில் பெரிய தாக்கங்களைத் செலுத்தமாட்டாது என்கிற ரீதியில் அணுகப்பட்டிருக்கலாம். ஆனால், சுயாட்சியுள்ள அரசொன்றுக்கான அடிப்படைகளில் இந்த விடயமும் காணப்படுகின்ற நிலையில், அதனை பேரவையின் யோசனைகள் முக்கியமாக கருதவில்லை.

முக்கிய விடயங்களில் நிலம் சார்ந்தும்- கடற்பரப்பு சார்ந்தும் தமிழ் மக்கள் பேரவை தன்னுடைய யோசனைகளை முன்வைத்திருக்கின்றது. அதாவது, வடக்கு- கிழக்கு மாகாண எல்லைக்குள் காணப்படும் மத்திய அரசின் காணிகள் அனைத்தும் மாகாண அரசின் அதிகாரத்துக்குள் வரும் என்பதும், மத்திய அரசின் தேவைகளுக்கு காணிகள் அவசியப்படும் போது, அது, மாகாண அரசின் ஒப்புதலோடு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் ஆகும். இதுதான், 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிய உரையாடல்களில் காணி அதிகாரம் என்று தொடர்ந்தும் மேல் மட்டத்தில் இருந்து வந்தது.

அடுத்த விடயமாக, வடக்கு- கிழக்கில் பெரும் எல்லை கடல்சார்ந்த நீர்ப்பரப்பு அமைவதால், அதன் மீதான அதிகார ஆளுகை பற்றியது. அதாவது, 'கண்டமேடை மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்ட வரலாற்று நீர்ப்பரப்புகள் உள்ளிட்ட கரையோர வலயங்களுடன் தொடர்புபட்ட மீன்பிடித் தொழில், கனிப்பொருள்கள், சுரங்கங்கள் உள்ளடங்கலான பொருளாதார வளங்கள்.' மாகாண அரசுக்கு உரியவை என்றும், கரையோர பாதுகாப்புப் தொடர்பில் பிரிவொன்றை வைத்துக் கொள்ளும் உரிமை சார்ந்ததாகவும் இருக்கின்றது. ஆழ்கடல் உள்ளிட்ட சர்வதேச கடல் பரப்பு விடயத்தினை மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகள் பரிந்துரை செய்திருக்கின்றது.

மாகாண அரசு வெளிநாடுகளிலிருந்து நேரடி முதலீகள் மற்றும் நன்கொடைகள் உள்ளிட்ட நிதிகளை உட்கொண்டுவது தொடர்பிலான பகுதி அளவான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வரையறை செய்கின்றது.

இப்படியாக, மத்திய- மாகாண அரசுகளின் அதிகார எல்லைகளை வரையறை செய்யும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகள், தமிழ் மக்களின் சுயாட்சி பற்றி அக்கறையை குறிப்பிட்டளவில் உறுதி செய்ய முனைந்திருக்கின்றது. ஆனால், இந்த யோசனைகளை தென்னிலங்கை வாசிக்கின்ற போது ஆற்றும் எதிர்வினை பற்றி கருதினால் அது வேறுமாதிரியான உணர்வைத் தருகின்றது. எனினும், பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகள் தமிழ் மக்களின் நீண்ட கோரிக்கைகளின் போக்கிலானவை தான். அவை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 03, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்