பதிவுகள்

“…நாட்டு நடப்பைப் பார்க்கும் போது சலிப்பு வலுகிறது. மைத்திரியும், ரணிலும், மஹிந்தவும் தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தினால் எல்லோரையும் சலிப்படைய வைக்கிறார்கள்…” என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரே, முடிவின்றித் தொடரும் அரசியல் குழப்பத்தினால் சலிப்படைய ஆரம்பித்துவிட்டார் என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? 

ஜனநாயக அடிப்படைகளில் ‘தார்மீக ஒழுங்கு/ஒழுக்கம்’ என்கிற விடயம் எப்போதுமே மேன்மையாகப் பேணப்பட வேண்டியது. எழுதப்பட்ட அரசியலமைப்பினைத் தாண்டியதாகவும் அந்தத் தார்மீக ஒழுங்கு பேணப்படும் பட்சத்தில்தான், ஜனநாயகத்தின் மீதான பற்றுதலை மக்கள் கொண்டிருப்பார்கள். அது அறுபடும் பட்சத்தில், மக்கள் நாட்டின் மீதான இறைமைக்கு அப்பாலான ஒரு குழுமமாக தங்களை எண்ணத் தொடங்குவார்கள். தங்களுக்கும் நாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிற எண்ணத்தை ஒத்தது அது. (அதற்கான பெரு உதாரணமாக, தென்னிலங்கை அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் குறிப்பிட்ட காலம் வரையில் அக்கறையின்றி இருந்ததைக் கூறலாம்.) அவ்வாறான சூழல் சர்வாதிகாரத்தினை நிலைநிறுத்திவிடும். அதிகாரத்தை அடைவதற்கு குறைந்த பட்ச தார்மீகங்களைக்கூட கடைப்பிடிக்க வேண்டிய தேவைகள் இல்லை என்கிற காட்டுமிரண்டித்தனச் சிந்தனை வீச்சம் பெற்று மக்களை அழிக்க ஆரம்பிக்கும். அப்படியானதொரு நிலையை நோக்கி சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை பல தடவைகள் பயணித்திருக்கின்றது. அப்படியானதொரு கட்டத்திலேயே நாடு தற்போதும் இருக்கின்றது.

ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் அடிப்படைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆட்சிக்கு எதிரான குரல்கள் அறுக்கப்பட்டன. மனித உரிமைகளை வலியுறுத்தியவர்கள் வெள்ளை வான்களின் கடத்தப்பட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டார்கள். தேர்தல் ஜனநாயகத்தின் மீது, மோசடி வெற்றிகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வாறான நிலைமை ஜனநாயகப் போராட்டங்களின் மீதான நம்பிக்கை அழித்தொழித்தது. அதன்மூலம், சர்வாதிகாரத்துக்குப் பணிந்து ஒழுகும் நிலையொன்று உருவாகியிருந்தது. அந்தக் கட்டத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான முயற்சி என்பது, ஈனசுரத்திலிருந்து மீளவும் ஆரம்பித்தது. ஆட்சி மாற்றத்தோடு பகுதியளவில் காப்பாற்றப்பட்டது. ஆனால், ஒக்டோபர் 26க்குப் பின்னரான கடந்த 45 நாட்கள், நாட்டை இன்னொரு வடிவில் சிக்கலுக்குள் தள்ளியிருக்கின்றது. அரசியல் மீதும் ஜனநாயக அடிப்படைகள் மீதும் மக்களைச் சலிப்படைய வைத்திருக்கின்றது.

இன்றைய அரசியல் குழப்பம் அனைத்து விடயங்களையும் கொழும்புக்குள் சுருக்கிவிட்டது. அதுவும், ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பாராளுமன்றம், உயர்நீதிமன்றம் என்கிற அளவில் நான்கு கட்டங்களுக்குள் வந்துவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களது தொகுதிகளையோ, மாவட்டங்களையோ பார்த்து நீண்ட நாட்களாகிறது. ஒவ்வொரு பிரதேச மக்களுக்குமான தேவைகளும், அதன் சார்பு அரசியலும் கீழிறங்கி, கொழும்பு அரசியல் மேலெழுந்திருக்கின்றது. இதனால், மக்கள் மாத்திரமல்ல, அவர்கள் சார் அரசியல் கட்சிகளும் சோர்வடைந்திருக்கின்றன. சலிப்படைத்திருக்கின்றன.

பரபரப்புக்களை மனித மனங்கள் விரும்புகின்றன. ஊடகங்கள் அவற்றுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பரபரப்புக்கள் சில நாட்களுக்குள் முடிந்துவிட வேண்டும். இல்லையென்றால், அந்த பரபரப்புக்களை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு மக்கள் வாழப்பழகிவிடுவார்கள்.

மைத்திரி பிரச்சினைகளைத் தோற்றுவித்ததும் பரபரப்போடு பார்த்த மக்கள், சில நாட்களில் அந்தப் பரபரப்பினை ஒரு அழுத்தமாக உணரத்தொடங்கினார்கள். அது, அவர்களை அலைக்கழித்த போது, அதிலிருந்து மீள்வதற்கான வழியாக, பரபரப்புக்களுக்கு அப்பால் நின்று, தாமுண்டு தங்களது வேலையுண்டு எனும் நிலைக்கு செல்ல எத்தணிக்கிறார்கள். அதுதான், சலிப்பினை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு நாளும் பல சந்திப்புக்களிலும், பேச்சுவார்த்தைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடும் மனோ கணேசனே, சலிப்படைய ஆரம்பிக்கும் போது, சாதாரண மக்கள் வேகமாக சலிப்படைந்துவிடுகிறார்கள்.

ஆனால், இந்த உளவியலைக் கொண்டு தனது அரசியல் வெற்றியைப் பதிவு செய்யும் கட்டத்தை நோக்கி மைத்திரி தொடர்ந்தும் பயணிப்பது தெரிகின்றது. ஏனெனில், 225 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தாலும், ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று மைத்திரி, திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார். அதன்மூலம், மக்களை சலிப்படைய வைத்து, தன்னுடைய முடிவினை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையை அவர் தோற்றுவிக்க நினைக்கிறார். மைத்திரியின் இந்தத் தந்திரம், ஜனநாயக அடிப்படைகளுக்கு அப்பாலானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிந்து கொண்டும் அதனை ஆதரிப்பதற்கான மனநிலையை ஏவல் ஊடகங்கள் மக்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்ப்பது என்பது வேதனையானது. ஏனெனில், ஜனநாயகத்தின் காவலனாக இருக்க வேண்டிய தரப்பு, அதிலிருந்து பிறழ்ந்து கொண்டு செயற்படுவது, ஜனநாயக விரோதமானது. இன்றைக்கு தென்னிலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் அந்தக் கட்டங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தளவில், மைத்திரியால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியைக் கோருவதன் மூலம், மக்களை தங்களின் பக்கத்திற்கு கொண்டு வரலாம் என்று நம்புகின்றது. ஆனால், நீதியைக் கோருதல் என்பது பாராளுமன்றத்தின் வழியோ, நீதிமன்றத்தின் வழியோ மாத்திரம் இந்த நாட்டில் செய்துவிட முடியாது. மீள முடியாத நெருக்கடியொன்றை மைத்திரி மீது செலுத்தினால் மாத்திரமே, அவரிடம் இருந்து ஆட்சியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உயர்நீதிமன்றம் இந்தவார இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கும் தீர்ப்பொன்றை வழங்கினாலும், அதிலிருந்தும் சுழித்துக் கொண்டு ஓடி, தன்னைப் பலப்படுத்தும் வேலையைச் செய்ய முடியுமா என்றே மைத்திரி சிந்திப்பார். சிலவேளை அவர், பாராளுமன்றத்தை ஒத்திவைப்பார். அல்லது, தேர்தலொன்றைக் கோருவதற்கான பொதுஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லுவார் என்று தெரிகின்றது. பொதுஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான கோரிக்கையாக எதனை முன்வைப்பார் என்கிற கேள்வி எழுகின்றது. அது, அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்குமா என்கிற சட்டச்சிக்கலும் இருக்கின்றது. ஆனால், சிக்கல் இருந்தாலும், அந்த விடயத்தை கையிலேடுத்து, மீண்டும் நீதிமன்ற வழங்குகளின் மூலம் காலத்தைக் கடத்துவதற்கான முயற்சியை அவர் எடுக்கலாம். இவ்வாறான நிலை, மக்களை இன்னும் இன்னும் சலிப்படைய வைத்து, ஏதோவொரு உறுதியான தரப்பிடம் ஆட்சியை வழங்கினால், போதும் என்கிற கட்டத்தினை ஏற்படுத்திவிடும். உண்மையில், இது, அடிப்படைய ஜனநாயகத்துக்கு முரணானது.

எப்போதுமே பரபரப்போடு காணப்படும் வடக்கு- கிழக்கு அரசியல் சோபையிழந்துவிட்டது. சம்பந்தனும், சுமந்திரனும் கொழும்புக்குள் முடங்கிவிட்டதால், அவர்களுக்கு எதிரான அரசியலும் மக்களிடம் பெரியவில் எடுபடவில்லை. அடுத்த கட்ட அரசியலை எதனை முன்வைத்துக் கொண்டு முன்செல்வது என்கிற குழப்பம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கை அரசியல் போட்டியில் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்கிற விடயத்தினை வைத்துக்கொண்டு சில நாட்களுக்கு சில தரப்புக்களினால் அல்லாட முடிந்தது. ஆனால், அதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் மக்களிடம் எடுபடவில்லை. இன்றைக்கு, வடக்கு- கிழக்கில், சுமந்திரனைக் காணவில்லை. விக்னேஸ்வரனும் ஒன்றும் செய்கிறார் இல்லை. கஜேந்திரகுமாரும் அவ்வளவாகப் பேசுகிறார் இல்லை. கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சோபையிழந்து போயிருக்கிறது.

மலையகத்தைப் பொறுத்தளவில் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான உரிமைக்காக நாட்கள் மாதங்கள் கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். 1000 ரூபா வேதானத்துக்கான அவர்களின் போராட்டம் எந்த முடிவும் இன்றி நீடிக்கின்றது. தோட்டக் கொம்பனிகளோடு பேசி முடிவில்லாத நிலையில், இல்லாத அரசாங்கத்திடம் பேசுவதற்காக ஆறுமுகம் தொண்டமான் காத்திருக்கிறார். ஜனாதிபதியிடம் நேரம் கேட்டுக் கேட்டு அவர் களைப்படைந்திருக்கின்றார். (இந்தப் பத்தி டிசம்பர் 11 காலை எழுதப்பட்டது)

ராஜபக்ஷக்களைப் பொறுத்தளவில், மைத்திரி ரணிலுக்கு வைத்த பொறியில் தாங்கள் கால் வைத்துவிட்டு அதிலிருந்து மீண்டெழுவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. தென்னிலங்கையில் தாங்கள் பெற்றிருந்த செல்வாக்கினை அவசரமான முடிவொன்றினால், குறிப்பிட்டளவில் பறிகொடுத்துவிட்டோமே என்கிற நிலை அவர்களுக்கு. அதனை வெளியிலும் காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டியிருக்கின்றது. அவர்களுக்கு கிட்டத்தட்ட திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

ஆனால், மைத்திரியோ, அணைக்கட்டுக்களில் இருந்து கொண்டு படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். குழந்தைகளின் கன்னங்களைத் தட்டிக்கொண்டு காட்சி தருகிறார். 24 மணித்தியாலத்துக்குள் தீர்வு, ஏழு நாட்களுக்குள் தீர்வு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக காலக் கெடுக்களை வழங்கிவிட்டு, அவர் கொழும்புக்கும் பொலனறுவைக்கும் இடையில் பறந்துகொண்டிருக்கிறார். ஆனால், நாடும் மக்களும் மீட்சிமைக்கு வழியின்றி தவிக்க வேண்டியிருக்கிறது!

(தமிழ்மிரர் பத்திரிகையில் (டிசம்பர் 12, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)