பதிவுகள்
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி, மீண்டுமொரு அரசியல் சதுரங்கத்தை ஆடுவதற்கு தென்னிலங்கை தயாராகின்றது. அதிகாரங்களின் அரசனாக அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பேரரசனாகும் கனவோடு அரசியலமைப்பில் பல திருத்தங்களைச் செய்து நகரந்து கொண்டிருந்த போது, தேர்தல் சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலில் வீழ்த்தப்பட்ட வடு கொஞ்சமும் தணிவதற்கு முன்பே, பொதுத்தேர்தல் களத்தில் இறங்கி அங்கும் சூடுபட்டுக் கொண்டார். இன்றைக்கு முன்னாள் ஜனாதிபதியாக, சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றாமையோடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு செல்வதே திருடனுக்கு தேள்கொட்டிய நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது. அவரினால், சபை அமர்வுகளில் எதுவும் பேச முடியவில்லை. அவரது முன்னாள் சகாக்களே அவரை நோக்கி திருடன், சர்வாதிகாரி என்கிற தோரணையில் கருத்துக்களை முன்வைத்து இன்னும் இன்னும் அலைக்கழிக்கின்றார்கள். அவர், விகாரைகள், கோயில்களுக்குச் சென்று வழிபடுவதோடு, அங்கு கூடும் பொதுமக்களிடமும், ஊடகவியலாளர்களிடமும் ஒருமாதிரியாக புலம்புவதுமாக இருக்கின்றார்.

இந்த உலகம் தோற்றவனின் வலியை அவ்வளவாக புரிந்து கொள்வதில்லை. அப்படித்தான் மஹிந்த ராஜபக்ஷ இப்போது உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருப்பார். திரும்பத் திரும்பத் தன்னை ஒரு கருவியாக சில தரப்புக்கள் கையாள நினைப்பதும், அது, தன்னையே அதிகமாக காயப்படுத்தி பெரும் வலியைப் பெற்றுத் தரப் போகின்றது என்பதையும் அவர் உணராமல் இல்லை. ஆனாலும், எதிர்காலத்தில் கிடைக்கும் சிறு அதிகாரம் கூட தன்னுடைய நிலையை சற்று ஏற்றம் பெற வைக்கும் என்றும், தன்னுடைய வாரிசுகளின் அரசியல்- வாழ்வியல் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்றும் அவர் இன்னொரு பக்கம் கருதுகின்றார். அப்படியானதொரு உணர்ச்சி- உறவுச் சிக்கலுக்குள்ளும் மஹிந்த ராஜபக்ஷ மாட்டிக்கொண்டு தவிக்கின்றார். இப்படிப்பட்ட நிலையில் தான் மீண்டும் அவரை முன்னிறுத்திய அரசியல் சதுரங்கத்துக்குத் தென்னிலங்கை தயாராகி வருகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் போர் வெற்றிக் கோசம் பகுதியளவில் தோற்கடிக்கப்பட்டாலும், அதன் ஆணிவேரின் உறுதிப்பாட்டினை எந்தவொரு தரப்பினாலும் அசைக்க முடியவில்லை. பௌத்த சிங்கள தேசியவாதம் ஆட்சி செலுத்தும் தென்னிலங்கையில், போர் வெற்றிக் கோசத்தினை இலகுவாக அகற்றவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கான அபிமானம் என்பது குறிப்பிட்டளவில் நீறுபூத்த நெருப்பாக இன்னும் சில காலத்துக்கு நீடிக்கும்.

1. மஹிந்த ராஜபக்ஷ மீதான தென்னிலங்கையின் அபிமானத்தை சாதகமாக பயன்படுத்தி தங்களுடைய அதிகாரங்களைப் பெருக்கிக் கொள்வது தொடர்பில் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிரணி பெரும் கரிசனையோடு இருக்கின்றது.

2. ஆனால், ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டின் போக்கில் மஹிந்த ராஜபக்ஷ மீதான மக்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றது.

3. ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு சுதந்திரக் கட்சியை தொடர்ச்சியான உடைவு நிலைக்குள் வைத்திருப்பதை விரும்புகின்றது. இப்படியொனதொரு நிலைக்குள் வைத்தே மஹிந்த ராஜபக்ஷவும், அவர் மீதான மக்களின் மீதமுள்ள அபிமானமும் கையாளப்படுகின்றன.

'புதிய சுதந்திரக் கட்சி' என்கிற பெயரில் தாமரைச் சின்னத்தைக் கொண்ட புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில், சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் மஹிந்த ஆதரவுத் தளமும், கூட்டு எதிரணியும் தயாராகி வருவதாக தென்னிலங்கையில் பரபரப்புக்கள் எழுந்திருக்கின்றன. அதனை உறுதி செய்வதான நிகழ்வுகளும், ஊடக உரையாடல்களும் கூட இடம்பெற்றிருக்கின்றன. அதனை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்தொன்றும் உறுதி செய்திருக்கின்றது.

'நாட்டில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் உதயமாகும். அந்தக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இணைந்து கொள்வார். நாட்டில் பலமானதொரு எதிர்க்கட்சி இல்லை. அனைத்து மக்களையும் இரா.சம்பந்தன் பிரதிபலிக்கவில்லை. ஆகவே, புதிய அரசியல் கட்சி உருவாகும்.' என்றவாறாக கோத்தபாய ராஜபக்ஷவின் கருத்து இருந்தது.

நல்லிணக்க அரசாங்கத்துக்குள் அங்கம் வகித்தாலும் அதிகாரங்கள் அற்று இருக்கும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வது தொடர்பிலான உறுதிபாட்டோடு அணுக நினைக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆளுமை செலுத்தும் நல்லிணக்க அரசாங்கத்துக்குள் இருப்பது என்பது சுதந்திரக் கட்சியை செல்லரிக்கச் செய்வதற்கு ஒப்பானது. அந்த நிலையில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை ஒருங்கிணைப்பது தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இரு முன்னாள் ஜனாதிபதிகளையும் ஒரேயிடத்தில் ஒருங்கிணைக்க முடியுமா என்பதுவும், சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் ராஜபக்ஷக்களின் அதிகாரம் ஓங்குவதை மைத்திரிபால சிறிசேன விரும்புவரா என்பதுவும் வெளிப்படையான கேள்விகள்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், மஹிந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விடயங்கள் விரைவாக மேல் மட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. ராஜபக்ஷக்கள் அனைவருமே கிட்டத்தட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானார்கள். சிலர் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட குற்றவியல் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. இன்றைக்கு அந்த விசாரணைகளின் வேகம் குறைந்திருக்கின்றது. விரைவில், அவை கரையில் தரை தட்டும் கப்பல்களின் நிலைக்கு செல்லலாம். அல்லது, அதற்கான சூழல் உருவாகலாம்.

கட்சியின் தலைவர் என்கிற ரீதியில் சுதந்திரக் கட்சி பிளவுபடுவதை மைத்திரிபால சிறிசேன விருப்ப மாட்டார். அது, எதிர்காலத்தில் கட்சியின் ஸ்திரத்தன்மையை பெருமளவு குறைக்கும். அது, ஐக்கிய தேசியக் கட்சியை பெரும் அதிகாரங்களுள்ள தரப்பாக மாற்றும். அப்படியான நிலையில், மஹிந்த தரப்பும் இந்த விடயத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு போக்குக் காட்டி பெரும் பேரத்துக்கு வர நினைக்கின்றது. குறிப்பாக, தங்கள் மீதான விசாரணைகளை அற்றுப் போகச் செய்வதுடன், வாரிசு அரசியலின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த நினைக்கின்றது. குறிப்பாக, நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்தினை பாதுகாப்பது மற்றும் யோஷித ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்துக் கொள்வது என்பன மிக அவசரமான விடயங்களாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்றது.

இப்படியான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் இரகசியமான சந்திப்பொன்று இடம்பெற்றிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கட்சியை பிளவுபடுத்தும் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்று மைத்திரி, நாமலிடம் வலியுறுத்தியதாக தெரிகின்றது. இதன்போது, தம் சார்பிலான பேரங்களை நாமல் முன்வைத்திருக்கின்றார்.

அதாவது, ராஜபக்ஷக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அது தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்கிற விடயங்கள். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களும், முன்னைய அரசாங்கத்தில் பெரும் அதிகாரங்களோடு வலம் வந்தவர்களுமான கோத்தபாய ராஜபக்ஷவும், பஷில் ராஜபக்ஷவும் புதிய கட்சியொன்றை தோற்றுவிப்பதினூடு, மீண்டும் சுதந்திரக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றார்கள்.

அதாவது, சுதந்திரக் கட்சியின் தற்போதைய பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு புதிய கட்சியொன்றை தோற்றுவித்து, அதன் மூலம் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது பலத்தினை உறுதிப்படுத்திக் கொள்வது. அது, தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் பின்னரான தேர்தல் காலத்தில் சுதந்திரக் கட்சிக்குள் பெரும் பேரத்தை பேசவும், மீளவும் கட்சிக்குள் ஆளுகை செலுத்தவும் முடியும் என்ற எண்ணப்பாட்டிலானது.

ஏனெனில், அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் பிரதான கட்சிகளுக்கிடையிலான தனித்த மோதல்களாகவே பெரும்பாலும் இருக்கும். அப்படியான தருணத்தில் மஹிந்த ராஜபக்ஷ மீதான மீதமுள்ள மக்கள் அபிமானத்தை முன்நகர்த்திக் கொள்வது அதிகாரங்களைப் பெற்றுத் தரும்.

ரணில் விக்ரமசிங்க, அதிகாரத்தினைப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருந்து பெரும் போராட்டத்துக்குப் பின்னர் இந்த இடத்தினை அடைந்திருக்கின்றார். அதனை, சில வருடங்களுக்குள்ளேயே இழப்பதற்கு விருப்பமாட்டார். அப்படிப்பட்ட நிலையில், சுதந்திரக் கட்சியில் இருக்கும் பிளவுகளை அதிகரிப்பதற்கான முனைப்புக்களை அமைதியாக முன்னெடுப்பார். அப்படிப்பட்ட நிலையில், ராஜபக்ஷக்கள் மீதான விசாரணைகளை பெரிதாக துரிதப்படுத்தாமல் காலம் நீடித்துக் கொண்டு செல்வதினூடு கொதிநிலையொன்றைத் தக்க வைக்க நினைக்கின்றார். அதேவேளை, ராஜபக்ஷக்களை தண்டிப்பதை நோக்கிய நகர்வையும் அவர் வெளிப்படுத்தவில்லை. இப்படியான நிலையினூடு சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் நீடிக்கும். அதனூடு, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைக்க முடியும் என்று கருதுகின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல்- இராஜதந்திர போக்கு என்பது குறுகிய காலத்திலானது அல்ல. அது, நீண்ட காலத்திட்டங்களிலானது. அதுதான், நீண்ட கால போராட்டத்தின் பின்னர் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது. அப்படியான நிலையில், சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து புதிய கட்சியொன்று உருவாகும் சூழலை ரணில் விக்ரமசிங்கவும் விரும்புகின்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் கருவியாக தென்னிலங்கையில் மாற்றப்பட்டிருப்பது இப்படித்தான்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஜனவரி 27, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்