பதிவுகள்
Typography

கூட்டமைப்பின் தலைவராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவிருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனை மேற்கொள்காட்டி தென் இலங்கை ஊடகமொன்று கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. இரா.சம்பந்தன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வரும் நிலையில், கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்?, என்கிற கேள்வி எழுவது இயல்பானது. அதுவும், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகி, கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் செயற்படும் முடிவை, 2014இல் சம்பந்தன் எடுத்த கணத்திலிருந்து, புதிய தலைமைக்கான வழியொன்றை அவர் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தயாராவிட்டார் என்று உணரப்பட்டது. 

ஆனால், கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கின்றது என்று சரவணபவன், வெளிப்படுத்தியிருக்கும் விடயம் சில கேள்விகளை எழுப்புகின்றது. ஏனெனில், கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் அதிகார மையத்துக்குள் சரவணபவன் பெரிதாக உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதுவும், அவரின் சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் வெளிப்படையானது. அப்படியானால், சரவணபவன் பேச விளைவது எதனை?

கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது, அதன் நிலைபெறுகைக்காலம் வரையில், தமிழரசுக் கட்சியிடம் இருந்து போகவேபோகாது. அதற்கு இரண்டு காரணங்கள் அடிப்படையானவை. முதலாவது, தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், வடக்கு- கிழக்கு பூராவும் பரந்துபட்ட கட்டமைப்புக்களோடு இருக்கும் ஆகப்பெரிய கட்சி. இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் சின்னம் என்பது, 2004 பொதுத் தேர்தல் முதல், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமாக இருப்பது. அவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் தலைமைத்துவம் சார்ந்த விட்டுக்கொடுப்புக்களை தமிழரசுக் கட்சி என்றைக்கும் செய்யாது.

கடந்த காலத்தில் கூட்டமைப்பின் தலைமைத்துவக் கனவுகளோடு இருந்த பங்களிக்கட்சிகளின் தலைவர்கள் சிலர், அதனை அடைவதற்கான சாத்திய வழிகள் இல்லை என்று உணர்ந்து வெளியேறியும் இருக்கிறார்கள். அதுபோக, இன்றைக்கு கூட்டமைப்புக்குள் இருக்கும் ரெலோவின் செல்வம் அடைக்கலநாதனோ, புளொட்டின் த.சித்தார்த்தனோ, கூட்டமைப்பின் தலைமைத்துவம் சார்ந்த கனவுகளோடும் இல்லை. தேர்தல் கால இலக்குகளே அவர்களிடம் இருக்கின்றன. அப்படியான கட்டத்தில், தமிழரசுக் கட்சியைச் சார்ந்த இன்னொருவரே எதிர்காலத்தில், கூட்டமைப்பின் தலைவராக வரப்போகிறார். அத்தோடு, கூட்டமைப்புக்குள் எத்தனை கட்சிகள் அங்கம் வகித்தாலும், நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டாலும், கூட்டுத்தலைமை என்கிற விடயத்தை அது கவனத்தில் கொண்டதில்லை. சம்பந்தன் (அவரும், அவருக்கு இணக்கமானவர்களும்) என்ன முடிவெடுக்கிறாரோ, அதுதான் இறுதியானது என்கிற கட்டம் இன்று வரையில் உண்டு. கூட்டுத்தலைமைக்கான வெளியை அனுமதிக்காத தன்மை என்பது, தமிழ்த் தேசிய அரசியல் சாபக்கேடுகளில் ஒன்று. அதுதான், கடந்த ஏழு தசாப்தகாலமாக நிகழ்ந்தும் வந்திருக்கின்றது. பழைய கட்சிகள் மாத்திரமல்ல, புதிய கட்சிகளாக வருபவர்களும் அதே மனநிலையிலேயே இருக்கிறார்கள்.

சம்பந்தன் மாத்திரமல்ல, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் உடல்நலக்குறைவினால் அவதிப்படுகிறார். கடந்த காலங்களைப் போல, அவரால் தொடர் பயணங்களை மேற்கொள்ளவோ, நீண்ட உரைகளை நிகழ்ந்தவோ முடிவதில்லை. அதற்கான ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினாலும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காது, கூட்டங்களிலேயே அவர் மயக்கமடைந்த சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. அதுபோக, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாவைக்கு வழங்கினாலும், அது, ஒருவகையில் பினாமித் தோரணையிலானதாகவே இருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை அவர் ஏற்றிருந்தாலும், முடிவுகளை எடுக்கும் கட்டத்தில் தன்னை நிரூபித்திருக்கவில்லை. மற்றவர்களின் முடிவுகளுக்கு இணங்கும் ஒருவராகவே அவர் பிரதிபலித்து வந்திருக்கின்றார். இது, கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் தெரியும். அவ்வாறான கட்டத்தில், மாவையை நோக்கி கூட்டமைப்பின் தலைமைத்துவம் வந்தாலும், இல்லையென்றாலும், அது இன்னொருவரின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கும். அதுபோக, தன்னுடைய மகனுக்கு கட்சிக்குள் பிரதான இடமொன்றைப் பெறுவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கும் முடிவிலும் அவர் இருப்பதாகத் தெரிகிறது. (அவர், தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, கட்சியின் உப தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.)

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை அடைந்துவிட வேண்டும் என்கிற கனவு சுமந்திரனிடமும், சி.சிறிதரனிடமும் உண்டு. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன், கடந்த பொதுத்தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் முடிவை எடுத்த போது, அதனால் அதிகம் விசனத்துக்கு உள்ளானவர்களில் சிறிதரனும் ஒருவர். ஏனெனில், மக்கள் ஆதரவை நேரடியாகப் பெறாதவர்கள் கட்சித் தலைமைக்கான போட்டியில் வரும்போது, அதனை இலகுவாக புறந்தள்ளலாம். ஆனால், சுமந்திரன் நேரடித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற விடயம் சிக்கலை உருவாக்கியது. அதுவும், வடமராட்சி மாலி சந்தியில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில், “சுதந்திரனை எப்படியாவது வெற்றிபெற வைத்துவிடுங்கள், எமக்குத் தேவையான ஒருவர்” என்று சம்பந்தன் கூறிய விடயம் பெரும் அடையாளப்படுத்தலாக உணரப்பட்டது.

அதுபோக, விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்த காலங்களில், விக்னேஸ்வரனை வெளிப்படையாக எதிர்த்தவர் சுமந்திரன். அதனால், பெரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஆனால், விக்னேஸ்வரனை ஆதரித்து, அதன்மூலம் பலம்பெறலாம் என்று நினைத்த அணிக்குள் சிறிதரன் இருந்தார். அது, இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியை வெளிப்படையாகக் காட்டியது. ஒரு கட்டத்தில், தமிழரசுக் கட்சியில் தேசிய அமைப்பாளர் என்கிற பதவியை உருவாக்கி தனக்கு வழங்குமாறு, சுமந்திரன் உள்ளிட்டவர்களிடம் சிறிதரன் நேரடியாகவே கேட்டிருக்கின்றார். அதன்மூலம், வடக்கு- கிழக்கு பூராவும் தனக்கு ஆதரவாளர்களை திரட்ட முடியும் என்றும் நம்பினார். ஆனாலும், அதுவும், கட்சியினால் கணக்கில் எடுக்கப்படவில்லை. அத்தோடு, சுமந்திரனின் கை கட்சிக்குள் நாளுக்குநாள் ஓங்க ஆரம்பித்தது. விக்னேஸ்வரனுக்காக சுமந்திரனை எதிர்த்தவர்களும் மெல்ல மெல்ல சுமந்திரன் பக்கம் சாய ஆரம்பித்தார்கள்.

இந்தக் கட்டத்தில், சிறிதரன் கட்சித் தலைமைக்கான கனவினைக் கொண்டிருக்கும் போது, “நான் ஏன் அதற்காகப் போட்டிபோடக்கூடாது” என்கிற கட்டத்துக்கு சரவணபவனும் வந்தார். அவர், மாவையை கையாள்வதன் மூலம், அதனைத் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்று நம்பினார். அதன்போக்கில்தான், மாவையின் மகனுக்கு இளைஞர் அணித் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுக்கும் முனைப்பொன்றை அவர் முன்னெடுத்தார். கட்சியின் எந்தவித அனுமதியும் இன்றி, வடக்கு- கிழக்கில் மாவையின் மகன் தலைமையிலான இளைஞர் குழுவொன்று தமிழரசுக் கட்சி இளைஞர் அணிகளைச் சந்தித்தது. அதற்கான ஒத்துழைப்பை சரவணபவன் வழங்கினார். ஒரு கட்டத்தில், சுமந்திரனுக்கு எதிரான அணியில் சிறிதரனும், சரவணபவனும் இருந்தார்கள்.

அதுவும், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் பின்னடைவோடு, சுமந்திரன் மீதான அழுத்தத்தை பெரும்பிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். குறிப்பாக, விசேட அதிரடிப்படையை சுமந்திரன் அழைத்து வந்தமைதான், தோல்விக்கான காரணம் என்கிற விடயம் கட்சியின் மத்தியகுழுக் கூட்டங்கள் வரை பேசப்பட்டது. ஆனால், கூட்டமைப்பின் தோல்வி என்பது சுமந்திரனின் ஆதிக்கத் தொகுதிகளில் மாத்திரமல்ல, சிறிதரனின் ஆதிக்கமுள்ள கிளிநொச்சியிலும், சரவணபவன் கவனிக்கும் வட்டுக்கோட்டையிலும் நிகழ்ந்திருந்த நிலையில், விசேட அதிரடிப்படை விடயம் இலகுவாகப் புறந்தள்ளப்பட்டது. சுமந்திரனுக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கும் சூழலையும் அது தடுத்துவிட்டது.

இவ்வாறான கடந்த காலக் காட்சிகளையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துவிட்டு, சரவணபவனின் கூற்றைக் காணும் போது, சில விடயங்கள் புலனாகின்றன. அதாவது, சுமந்திரனை கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு முன்நகர்த்துவன் ஊடாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியிலிருந்து அவரை அகற்ற முடியும் என்பது ஒன்று. அவ்வாறான நிலையை உருவாக்கிவிட்டால், தலைமைத்துவத்துக்கான போட்டி என்பது, சிறிதரன் என்கிற ஒப்பீட்டளவில் பலம் குறைந்த ஒருவருடன் மாத்திரமே இருக்கும் என்பது இன்னொன்று.

ஆனால், எந்தவொரு அறிவுள்ள நபரும், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான கனவைக் கைவிட்டு, அதிகாரமற்ற பதவி நிலையை அடைய விரும்பமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கான அதிகாரம் என்பது, சம்பந்தனின் காலத்தோடு முடிந்துபோய்விடும். அப்படியான நிலையில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை அடையாமல், சுமந்திரன் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை விரும்பமாட்டார்; இணங்கவும் மாட்டார். சுமந்திரன் ஏற்றுக்கொண்டாலும் இல்லையென்றாலும் தமிழரசுக் கட்சியை பலப்படுத்திக் கொண்டு (கூட்டமைப்பை அல்ல), அதன் தலைமைத்துவத்தில் அமரும் நோக்கிலேயே அவர் செயற்பட்டு வருகின்றார். அப்படியான நிலையில், அதற்கு எதிரான காய்நகர்த்தல்களில் ஒன்றாகவே, சரவணபவனின் கூற்றையும் அவர் காண்பார். கூட்டமைப்புக்கு (தமிழரசுக் கட்சிக்கு) எதிரான மாற்றுத் தரப்புக்கள் எல்லாமும் சிதறுண்டு தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை அடைவது என்பது, ஏக தலைமையை அடைவதற்கு ஒப்பானது. அதனை, கைவிட யாருமே விரும்பமாட்டார்கள். ஏனெனில், இங்கு யாரும் புத்தர்கள் இல்லை.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 13, 2019) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்