பதிவுகள்
Typography

மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும். மானிட வளர்ச்சி என்பது, அதன் நற்குணவியல்புகள், ஒழுக்கத்தின் விருத்திகள் சார்ந்தது. அது தொடர்பிலான உரையாடல்கள், திறந்த மனதோடு நிகழ்த்தப்பட வேண்டியவை. ஆனால், அந்த உரையாடல்களின் போது, அறம் என்கிற இன்னொரு மானிட உன்னதம், பேணப்பட வேண்டும். 

கடந்த வாரம் கிளிநொச்சியில் வைத்து, போர்க்குற்றங்கள் தொடர்பில் மறைமுகமாகக் குறிப்பிட்டு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, “மறப்போம் மன்னிப்போம்” என்றார். மறந்தும் மன்னித்தும் முன்னோக்கிப் பயணிக்கவும் விரும்பும் சமூகமாக இருப்பதற்கு, எவரும் பின்நிற்கப்போவதில்லை. ஆனால், இழைத்த கொடூரங்களைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற தரப்பு, கோரும் ‘மன்னிப்பு’ எது சார்ந்தது? மன்னிப்பு என்பது, இழைத்த தவறுகள் குறித்து உணர்ந்து, கேட்கப்பட வேண்டிய ஒன்று.

இன்றைக்கு ரணில் கூறியிருப்பதற்கும், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாட்களில், பாராளுமன்றத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகளே” என்று கூறியதற்குமான இடைவெளி எவ்வளவு? பெரும்பான்மையின ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை, ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவதற்கு, அன்றைக்கு மஹிந்த கையாண்ட வார்த்தை விளையாட்டை, ‘மறப்போம் மன்னிப்போம்’ என்கிற வார்த்தைகளினூடாக, ரணிலும் செய்ய நினைக்கின்றார். இது, அறம் என்கிற மானிட மேன்மையைப் புறந்தள்ளி நின்று, உரையாடும் உத்தி; இங்கு நீதிக்கான எந்தவொரு புள்ளியும் இல்லை.

இலங்கையில் இனமுரண்பாடுகள் தோற்றம் பெற்ற காலம் முதல், மானிடத்துக்கு எதிரான பெரும் குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தப்பட்டிருக்கின்றன. அதை, ஒருவித இறுமாப்போடும் பெருமையோடும் கொண்டாடிய தரப்புகளும் உண்டு. இனவாத அரசியல் புரையோடிப்போன பின்னர், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியே, தேர்தல் வெற்றிகளைச் சுகிக்க முடியும் என்கிற நிலை, மேல்நோக்கி வந்த காலங்களும் உண்டு. அதன்போக்கில்தான், மஹிந்த இன்றைக்கும் போர் வெற்றி வாதத்தைத் தாங்கி இருக்கிறார்; தென் இலங்கை போர்குற்றங்கள் சார்ந்த உரையாடலைப் புறந்தள்ளி வருகின்றது.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தம்முடைய இயலுமைக்கு அப்பாலும் சென்று, தமிழ் மக்கள் கூக்குரல் எழுப்பி நீதி கோரிவிட்டனர். அன்றைக்கு, முள்ளிவாய்க்காலுக்குள் அலைக்கழிந்த தமிழ் மக்களின் குரல், எப்படி உலகத்தால் புறக்கணிப்பட்டதோ, அதேமாதிரியாக, இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகின்றது. இறுதி மோதல்களின் போது, இராணுவத்திடம் கையளித்த தங்களது பிள்ளைகளுக்கு, என்ன நடந்தது என்று கேட்டு, ஆயிரக்கணக்கான தாய்மார் இன்னமும் வீதியோரங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடிப் போராடி எந்தப் பதிலும் அறியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்த தாய்மார்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிட்டது. இவ்வாறான தருணமொன்றில் நின்று, மறதி பற்றியும் மன்னிப்புப் பற்றியும் உரையாடுவதற்கான துணிவை ரணில் எங்கிருந்து பெறுகிறார்? அல்லது, ரணிலின் அந்தப் பதிலில் மானிட விழுமியங்கள் இருக்கின்றன. அதனை எடுத்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்க முடியும் என்று அடையாளப்படுத்தும் தரப்புகள், உண்மையில் வெளிப்படுத்த நினைப்பது எதை?

ஜெனீவா அரங்குக்கான காலம் இது. 2015ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் (இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நான்கு வயதாகின்றது. வெளிநாட்டுப் பங்களிப்புடனான, கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்றுக்கொள்வது தொடர்பில், ஜெனீவாவில் இலங்கை வாக்குறுதி அளித்திருக்கின்றது. தீர்மானத்தோடு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால எல்லைக்கு அப்பால், மேலதிகமாக இரண்டு ஆண்டுகால எல்லையும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், ஜெனீவாத் தீர்மானத்தோடு இலங்கை இசைந்து பயணித்திருக்கிறதா, அதன் ஒரு சில கட்டங்களையாவது அர்த்தபூர்வமாகச் செய்திருக்கின்றதா என்கிற கேள்விக்கான பதில், கவலையளிக்கக் கூடியது. காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தோடு அமைக்கப்பட்டதற்கு அப்பால், எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. அதன் மீது, குறிப்பிட்டளவான மக்கள் எந்தவித நம்பிக்கையையும் வெளிப்படுத்தவும் இல்லை. ஏனெனில், இலங்கையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் வரலாறு என்பது, அபத்தமான காட்சிகளையே பதிவு செய்திருக்கின்றன.

இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட தரப்பாகத் தமிழ் மக்கள், இலங்கை நீதிமன்றங்களினூடாக நீதியைப் பெற்ற சந்தர்ப்பங்களைக் காட்டிலும், தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்ட காட்சிகளே அதிகம். ஏனெனில், அதிக நேரங்களில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தரப்புகளுக்கு இணக்கமானவர்களே, விசாரணையாளர்களாகவும் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலை, அந்த விசாரணைகள் மீதோ, நீதித்துறை மீதோ பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்தும்?

கடந்த காலத்தை விட்டுவிட்டு, சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக, கடந்த நான்கு ஆண்டுகளிலாவது, உள்நாட்டு நீதித்துறை இனமுரண்பாடுகள் சார்ந்த வழக்கு விசாரணைகளில், பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இறுதி மோதல்களின் இறுதி நாட்களில், நேரடியாக இராணுவத்திடமே தங்களது பிள்ளைகளைக் கையளித்த தாய்மார், நீதி கோரி நீதிமன்றத்தை நாடி, ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகம் கண்டு வருகின்றது.

சர்வதேச நெருக்கடிகளை அடுத்து, ஒரு கட்டம் வரையில், “உள்நாட்டு நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்துவோம்.” என்று சொல்லிக் கொண்டிருந்த தென் இலங்கை, இன்றைக்கு ‘மன்னிப்பு மறதி’ பற்றிப் பேசுகின்றது.

நல்லிணக்கச் செயலணி, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சர்வதேச தூதுக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிடமும், பெருவாரியான மக்கள் சென்று, தங்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தொடர்சியாகக் கேட்டு வருகின்றார்கள். என்றைக்காவது ஒருநாள், உறுதியானதும் இறுதியானதுமான பதில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடத்தில் சென்று, ‘மன்னித்துவிடுங்கள்’ என்று எப்படிக்கூற முடியும்.

மன்னிப்பதற்கு முன்னர், ‘யாரை மன்னிப்பது’ என்று தெரிய வேண்டும் இல்லையா? தன்னுடைய பிள்ளை மரணித்துவிட்டது என்பதைக் காட்டிலும் அதிக வலியையும், மனரீதியான பிரச்சினைகளையும் தன்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது, என்று தெரியாமல் இருக்கும் தாய் கொண்டிருக்கிறார். அவரிடம் மன்னிப்பு- மறதி என்கிற மேன்குணங்கள் வெளிப்படுவதற்கு, அவர்களின் மனது ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு முதலில், அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்க வேண்டும்.

இன்றைக்கு போராடிக்கொண்டிருக்கும் எந்தவொரு தாய்மாரும், இன்னொரு தாய் பெற்றெடுத்த பிள்ளையைப் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. நாளை தன்னுடைய நிலை, எந்தவொரு தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்கிற உணர்வோடும்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தாய்மாரைத் திருப்திப்படுத்தும் பதிலை வழங்காமல், அவர்களை ஆற்றுப்படுத்த முடியாது. ஆற்றுப்படுத்தலுக்கு உள்ளாகாத எந்தவொருவரிடமும் குற்றமிழைத்த தரப்புகள், மன்னிப்பு என்கிற விடயத்தைக் கொண்டு செல்லவே முடியாது. அது, அறமும் அல்ல.

ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களை நோக்கி, “நாங்கள் குற்றங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; ஆனால், நீங்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்” என்று, குற்றமிழைத்த தரப்புகள் முன்மொழிவதும் கூட, வன்முறையின் உச்சமே. ரணிலின் கூற்றைக் கொண்டு சுமக்கும் தரப்புகளும், அந்த வன்முறையில் பங்காளிகளே.

ஜெனீவாவில் இம்முறையும் இலங்கைக்கான கால நீடிப்புக்கான (சுமந்திரன் மொழியில் கண்காணிப்புக்கான கால நீடிப்பு) தீர்மானம் ஒன்று வருவதற்கான சாத்தியங்களே காணப்படுகின்றன. அதற்கும் அப்பாலான கட்டங்கள் தொடர்பில், என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது தொடர்பில், தமிழ்த் தரப்புகளுக்கு மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளுக்கும் அவ்வளவாகத் தெளிவு கிடையாது. இலங்கையில் அண்மைய ஆட்சிக் குழப்பங்களுக்குப் பின்னராக, மேற்கு நாடுகள் ரணில் அரசாங்கத்தைத் தக்க வைப்பதற்கான தேவையைக் கொண்டிருக்கின்றன. அதனைக் குழப்பும் எந்தவொரு அழுத்தத்தையும் வெளிப்படுத்தவும் விரும்பமாட்டாது. அவ்வாறான கட்டத்தில் நின்றுகொண்டுதான், ஒய்யாரமாக ரணில் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று பேசியிருக்கிறார். அவ்வாறுதான், அதை நோக்க வேண்டும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 20, 2019) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்