பதிவுகள்

நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். 

இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை 2017ஆம் ஆண்டுவரை அரசாங்கம் பெருமளவிற்கு நிறைவேற்றி இருக்கவில்லை. எனவே 2017இல் மற்றொரு தீர்மானத்தின் (34/1) மூலம் அரசாங்கத்திற்கு இரு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இம்மாதத்தோடு முடிவடைகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்க்கான தனது பொறுப்புகளை அரசாங்கம் பயன் பொருத்தமான விதங்களில் நிறைவேற்ற தவறிவிட்டது. அதனாலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடங்கிய அதே நாளில் கிளிநொச்சியில் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடும் உறவினர்களில் 23 பேர் இதுவரை இறந்து போய் விட்டார்கள். அதாவது நிலைமாறுகால நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையோடு அவர்கள் இறந்து போய் விட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல ஏனைய பாதிக்கப்பட்ட மக்களும் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பகத்தக்க விதத்தில் நாட்டில் எத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கட்டி எழுப்பத் தவறியதற்கு யார் பொறுப்பு? இலங்கை அரசாங்கம் மட்டும்தானா பொறுப்பு? நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகள் பொறுப்பில்லையா? அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவை பொறுப்பில்லையா? கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை விவகாரத்தை கையாண்டுவரும் ஐ.நா மன்றம் பொறுப்பில்லையா?

எல்லோருக்குமே பொறுப்புண்டு. பாதிப்பை ஏற்படுத்திய தரப்புக்களில் ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டி விட்டு ஏனைய தரப்புக்கள் தப்பி விட முடியாது. உலகப் பொது நீதி என்ற அடிப்படையில் நிலைமாறு கால நீதியை முன்வைத்த ஐ.நா. மன்றத்திற்கும் அதனை முன்மொழிந்த மேற்கத்தைய நாடுகளுக்கும் அப் பொறுப்புண்டு. இது ஒரு கூட்டுப் பொறுப்பு. உள்நாட்டுப் நீதி பரிபாலன கட்டமைப்பானது இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு பொறுப்பு கூறவில்லை என்ற காரணத்தினால்தான் அதை விட அடத்தியான அனைத்துலகப் பரிமாணத்தைக் கொண்ட நிலைமாறுகால நீதியை ஐ.நா முன் வைத்தது. எனவே இதில் இலங்கை அரசாங்கம் அளவிற்கு ஐ.நா வுக்கும் பொறுப்புண்டு.

இதைச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். கிளிநொச்சியில் வசிக்கும் ஒருவர். இவர் முன்பு ஐ.நா அலுவலகம் ஒன்றில் வேலை செய்தவர். மேற்படி தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியின் கூற்றிற்கு எதிர்வினையாற்றி முகநூலில் எழுதியிருந்தார். ஒர் உலகப் பொது நிறுவனம் அல்லது தொண்டு நிறுவனம் எந்த நாட்டில் பணிபுரிகிறதோ அந்த நாட்டின் அரசாங்கம் வெளியேறுமாறு சொன்னால் அது வெளியேறத்தான் வேண்டும் என்று அவருடைய பதில் அமைந்திருந்தது.

அப்படியானால் ஒரு நாட்டில் சேவையாற்றும் ஐ.நா அல்லது தொண்டு நிறுவனமானது அந்நாட்டின் அரசுக்கா பொறுப்புக் கூற வேண்டும்? மக்களுக்குப் பொறுப்புக் கூறத்தேவையில்லையா?

ஐ.நா. எனப்படுவது இறைமையுள்ள நாடுகளின் அரங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டின் மக்கள் இறைமையை தேர்தல் மூலம் பிரயோகித்து ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் போது அம்மக்கள் கூட்டத்தின் இறைமை அரசிடம் பாராதீனப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் இறைமை உள்ள அரசாங்கம் கேட்டுக்கொண்டால், உலகப்பொது நிறுவனங்களோ அல்லது தொண்டு நிறுவனங்களோ வெளியேறத்தான் வேண்டும். ஆனால் யுத்தகாலத்தில் ஓர் அரசாங்கம் தனது குடிமக்களையே கொல்லும் போது கொல்லப்படும் மக்கள் கூட்டம் தனது இறைமையை குறிப்பிட அரசாங்கம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஏற்றுக் கொள்ளுமா? ரூவாண்டாவில் இனப்படுகொலை நடந்தபோது இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தன. இறைமை ஏதிர் இனப்படுகொலை என்று அது வர்ணிக்கப்பட்டது. சேர்பியாவில் மிலோசவிச்சும் இறைமையுள்ள தலைவர்தானே? அவருக்கு எதிராக விசாரணைகள் மேட்கொள்ளப்படடனவே? அல்லது ருவண்டாவிலும் பொஸ்னியாவிலும் தோற்கடிக்கப்பட்ட தலைவர்களே விசாரிக்கப்படடார்கள் இது இலங்கைக்குப் பொருந்தாது என்று கூறப்படுமா?அப்படியானால் இறைமை எனப்படுவது வென்றவர்கள் கூறும் வியாக்கியானமா?

ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் யுத்த களத்தை விட்டு வெளியேறும் உலகப் பொது நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு கூறத் தேவை இல்லையா? என்ற கேள்விதான. இங்கு இறைமை எனப்படுவது தனியச் சடடரீதியிலானது மட்டுமல்ல. அதை மக்களுக்குரியதாகவும் பார்க்கவேண்டும்.எனவே இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்களை ஐ.நா வே முதலில் கைவிட்டது என்ற குற்றச்சாட்டு உண்டு.

இறுதிக்கட்ட போரின் போது வன்னியை விட்டு வெளியேறிய ஐ.நா.வும் தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் போதியளவு நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. மாத்தளன் கப்பற்துறை ஊடாக வன்னி கிழக்கிற்குள் வந்து சில மணிநேரம் தங்கி நின்ற ICRC யின் தென்னாசிய பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி அங்கு தான் கண்டவற்றை பின்வருமாறு தெரிவித்தார், “என்னுடைய பதவிக்காலத்தில் நான் கண்ட நரகங்களில் மிகவும் மோசமானது இது.”

அவர் நரகம் என்று வர்ணிக்கும் பொழுது வன்னி கிழக்கு உலகின் மிகப் பெரிய ஒரு மரணச் சேரியாகக் காணப்பட்டது. அதற்குப் பின்னரும் சில கப்பல்கள் வன்னி கிழக்கிற்கு வந்தன. ஒரு கட்டத்தில் எந்த கப்பலும் வர முடியவில்லை. அப்பொழுது வன்னி கிழக்கு உலகின் மிகப் பெரிய இறைச்சிக் கடைகளில் ஒன்றாகவும் உலகில் மிகப் பெரிய பிரேத அறையாகவும் மாறியது. இதற்கெல்லாம் பின்னரே அதாவது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரே பான் கி மூன் ஹெலிகொப்டரில் பறந்தபடி வன்னி கிழக்கைப் பார்வையிட்டார். அவரும் ஏறக்குறைய மேற்சொன்னICRC பிரதிநிதி கூறியதைப் போன்று ஆனால் தாக்கம் குறைந்த வார்த்தைகளில் கருத்துத் தெரிவித்தார்.

2010இல் ஐ.நா ராஜபக்ச அரசாங்கத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. உலகின் வெல்ல கடினமான ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பை வெற்றிகரமாக தோற்கடித்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் அது. அப்பொழுது போரில் கொல்லப்பட்டவர்களை ஐ.நா.வும் உட்பட மேற்கு நாடுகள் பக்க சேதங்கள் என்றே பார்த்தன -collateral damage. ஒரு பெரிய மரத்தை வெட்டி வீழ்த்தும் போது தவிர்க்கப்பட முடியாமல் நசுக்கப்படும் புல் பூண்டுகளாகவே கொல்லப்பட்ட தமிழ் மக்களைப் பார்த்தன.

2012 இல் சீன சார்ப்பு ராஜபக்ச அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டிய தேவை வந்த போது ஐ.நா அரசாங்கத்திற்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது. இத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த கியூபப் பிரதிநிதி என்ன சொன்னார் தெரியுமா? போரை முடிவிற்கு கொண்டு வர 60வீதமான ஆயுதங்களை வழங்கிய நாடுகளே இப்பொழுது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

அதுதான் உண்மை. அது இலத்திரனியல் அர்த்தத்தில் சாட்சிகள் அற்ற ஒரு யுத்தம் அல்ல. உலகின் சக்தி மிக்க நாடுகளின் செய்மதிக் கமராக்கள் யுத்த களத்தைத் தொடர்ச்சியாகப் படம் பிடித்தன. எனவே அவர்களுக்கு தெரியாமல் அங்கே ஓர் இறைச்சிக்கடை இருக்கவில்லை. உலக சமூகமும் ஐ.நாவும் விலகி நின்று போரின் முடிவை அவதானித்தமை என்பது இயலாமையின் பாற்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க ஓர் அரசியல் தீர்மானம். தலையிடாமல் விலகி நின்று போரை முடிவுக்கு கொண்டு வரும் ஓர் அரசியல் தீர்மானமே அது.

எனவே, ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டுவர உதவி நாடுகளுக்கும் அதன் பின் ஐ.நா வின் நிலைமாறு நீதியை முன்மொழிந்த நாடுகளுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதற்கு முழு உலகத்திடமும் உதவியைப் பெற்ற அரசு இப்பொழுது நிலை மாறுகால நீதியின் விடயத்தில் உலக சமூகத்தின் தலையீட்டை எரிச்சலோடு நிராகரிக்கிறது. எனவே போரில் ஆயுதங்களையும் புலனாய்வுத் தகவல்களையும் செய்மதித் தகவல்களையும் தார்மீக ஆதரவையும் விலகி நின்று மறைமுகமான ஆதரவையும் வழங்கிய எல்லா நாடுகளுக்கும் இதில் பொறுப்பு உண்டு.

தமிழ் மக்கள் நிலைமாறு கால நீதியை கேட்கவில்லை. அவர்களிற் கணிசமானவர்கள் இனப் படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைத்தான் கேட்டார்கள். ஐ.நா தான் நிலைமாறு கால நீதியை முன் மொழிந்தது.அது தொடர்பில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. அத் தீர்மானங்களின்படி இலங்கை அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்பதனை இலங்கைக்கு வந்து போகும் எல்லா ஐ.நா சிறப்பு தூதுவர்களும் அறிக்கையிட்டு இருக்கிறார்கள். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் துணை ஆணையாளரும் அறிக்கையிட்டிருக்கிறார்கள். ஆனால் ஐ.நா தீர்மானங்கள் மென்மையான சொற்களால் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன. ஐ.நாவின் சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளுக்கும் ஐ.நா தீர்மானத்திற்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு. ஐ.நாவின் அரசியல் அல்லது ஐ.நாவின் கட்டமைப்பு சார் செயலின்மை, கையறுநிலை அதற்குள் வெளிப்படுகிறது. ஈழத்தமிழர்கள் இந்த இடைவெளிக்குள் தான் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஐ.நா சிறப்பு தூதுவர்களின் அறிக்கைகளின் தொகுப்பாக ஐ.நா தீர்மானம் வெளிவருமாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சமாவது நிலைமாறுகால நீதியை நம்பத் தொடங்குவார்கள். அதாவது அரசாங்கம் பொறுப்பு கூறுகிறதோ இல்லையோ ஐ.நா. தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறட்டும்.