பதிவுகள்

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும்.  அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. 

குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் மெல்லக் கொல்லும் விசம் உணவில் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் அந்தச் சந்தேகங்கள் அலையாக மேலெழும்பின.  புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் கடந்த ஆண்டு புற்றுநோயின் தாக்கத்தினால் மரணமானார். அவரின் மரணத்தை அடுத்தே விச ஊசி விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, விச ஊசி விவகாரம் அனைத்துத் தளங்களிலும் உரையாடப்படும் விடயமாக மாறியது.  இந்த நிலையில், அண்மையில் வடக்கில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர், “புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு தடுப்பு ஊசி என்று தெரிவிக்கப்பட்டு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனால், மரணங்கள் அங்கேயே சம்பவித்ததாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும்” தெரிவித்திருந்தார்.

இப்படியானதொரு நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் தளத்தின் ஒரு பகுதியும் பெரும்பான்மையான ஊடகங்களும் 'விச ஊசி விவகாரத்தை' எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் போதிய அறிவின்றி நடவடிக்கைகளை முன்னெடுத்து, சிக்கலாக்கி விட்டிருக்கின்றன. முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களின் எதிர்கால வாழ்வு காப்புச் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படையானது. அதனை யாருமே கேள்விக்குட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், அந்த விடயத்தைக் கையாளும் போது மிகுந்த கவனமும் பொறுப்புணர்வும் வேண்டும். எனினும், அது இங்கு சாத்தியப்படுத்தப்படவில்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.

எப்போதுமே தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு உணர்ச்சி வேகத்தினாலேயே அதிகம் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. அது,  பெற்றுத்தந்த வெற்றிகளைக் காட்டிலும் தோல்விகள் படுபயங்கரமானவை. அப்படியொரு நிலையே, விச ஊசி விவகாரத்திலும் நடைபெற்று வருகின்றது. விச ஊசி விவகாரம் பொது உரையாடல் தளத்துக்கு வந்ததும், அரசியல்வாதிகளும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எவ்வகையான கருத்துக்களைச் சொன்னால் ஊடகக் கவனம் பெறலாம் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். ஏனெனில், இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் கருத்துக்குப் பின்னாலுள்ள விடயங்கள் பற்றி பெரிதாக ஊடகங்கள் கவனிப்பதில்லை. மாறாக, பரபரப்பு விடயமாக இருக்கின்றதா, அது போதும் என்பதே அடிப்படையாகிப் போயுள்ளது. அதுதான், அரசியல்வாதிகள் விச ஊசி விவகாரத்தில் எல்லா மாதிரியும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். விளைவு, வடக்கு மாகாண சபையிலும் விச ஊசி விவகாரம் பேசப்பட்டது.

முன்னாள் போராளிகளுக்குச் சர்வதேச மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் முக்கியமானது; வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், தீர்மானத்தினை நிறைவேற்றிய பின்னர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போராளிகள் குறித்த அக்கறையை உணர்வு ரீதியாகக் கையாண்டார் என்பது மனவருத்தத்தின் உச்சமாக மாறியது.

அமெரிக்க விமானப் படையின் மருத்துவக்குழு யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாமொன்றை நடத்துவதற்காக அண்மையில் வந்திருந்தது. குறித்த குழுவோடு கொழும்பிலிருந்து பலாலி வரையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பயணித்திருந்தார். அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் 40 நிமிடம் பயணம் செய்ததும், அமெரிக்கா தன்னுடைய ஆருயிர் நண்பன் என்ற ரீதியிலான எண்ணம் அவரிடம் வந்திருக்கலாம். அதுதான், அமெரிக்க மருத்துக்குழு, விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பில் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்வதற்கு உடன்பட்டிருக்கின்றது என்கிற அறிவிப்பை மாகாண சபையில் வெளியிட வைத்திருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு வருமாறு அழைத்தார்கள். முன்னாள் போராளிகளும் அதை நம்பிப் போய் மணிக்கணக்கில் காத்திருந்து எதுவும் நிகழாமல் திருப்பினர். அமெரிக்கா, எந்தவித சோதனையையும் முன்னாள் போராளிகளுக்கு செய்யவில்லை. அதற்கான உபகரணங்கள் எடுத்துவரப்படவில்லை என்று அமெரிக்க மருத்துக்குழு பதிலளித்திருந்தது.

புனர்வாழ்வு காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டிருந்தால், அது போர்க்குற்றங்களில் ஒன்றாக பதிவுசெய்யப்படக்கூடிய சாட்சியம். அப்படிப்பட்ட நிலையில், சாதாரண மருத்துவ முகாமை நடத்த வந்த அமெரிக்கர்களிடம் பரிசோதிக்குமாறு கோருவது உணர்வுநிலையில் எடுத்த முடிவின் பிரதிபலிப்பாகவே தெரிகின்றது. இலங்கையும் அமெரிக்காவும் போர்க்குற்ற விடயமொன்றை அவ்வளவு இலகுவாகக் கையாள அனுமதிக்குமா என்ற விடயத்தை  ஏன் சிந்திக்க முடியாமல் போனது?

சரி‚ முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்தை அடிப்படையில் எவ்வாறு கையாள வேண்டும் என்று நோக்கினால் அது, இலகுவான வழிகளைக் காட்டுகின்றது. அதில், முதலாவது, புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்துள்ள முன்னாள் போராளிகளிடம் முதலில் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், புலம்பெயர் தேசங்களில் அதற்கான வசதியும் வாய்ப்புக்களும் அதிகம். அதனைச் சரியாகச் செய்து, அதன் முடிவுகளைப் பொறுத்து, தாயகத்திலிருக்கும் முன்னாள் போராளிகளை எவ்வாறு சர்வதேச தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துவது, பரிசோதனை மாதிரிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதுபற்றி யோசித்திருக்க வேண்டும். அதுதான், நம்பிக்கையான நடவடிக்கையாக இருந்திருக்கும். ஏனெனில், உண்மையிலேயே பரிசோதனை முடிவுகள், விச ஊசி ஏற்றப்பட்டுள்ள விடயத்தை உறுதி செய்தால், அதனைச் சர்வதேச ரீதியாக, குறிப்பாக ஐக்கிய நாடுகள் ஊடாகக் கையாண்டிருக்கலாம். அதுவொரு, போர்க்குற்ற ஆதாரமாகவும் உறுதி செய்யப்படலாம்.

ஏற்கெனவே சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, சீண்டுவாரற்று இருக்கின்ற முன்னாள் போராளிகளை மேலும் மேலும் பயமுறுத்துவதற்கான காரணியாகவும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான முனைப்புக்களும் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விச ஊசி விவகாரத்தின் முடிவு எவ்வாறு அமையுமென்று தெரியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களிடம் ஒட்டுமொத்தமாக முன்னாள் போராளிகளின் உடல்களில் விசம் கலக்கப்பட்டிருக்கின்றதுƒ அவர்கள், மெல்லமெல்ல மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திருமணமோ, எதிர்காலமோ சாத்தியமானதல்ல என்கிற உணர்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இது, தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களைச் செய்துவிட்டு இன்றைக்கு யாருக்காக போராடினார்களோ அவர்களினாலேயே புறக்கணிக்கப்பட்டு நடைப்பிணங்களாக இருக்கும் முன்னாள் போராளிகளின் மனநிலையை இன்னுமின்னும் பாதிக்கும். இதனை, வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் முன்னாள் போராளி ஒருவரும் பிரதிபலித்திருந்தார்.

இறுதியாக, முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிவன் சுதன் தலைமையிலான மருத்துவர் குழுவொன்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைந்திருக்கின்றது. கட்டம் கட்டமாக செய்ய வேண்டிய விடயங்களைச் செய்யாமல், உணர்ச்சி வேகத்தில் செயற்பட்டுவிட்டு, இறுதியாக இந்தப் பரிந்துரை இடம்பெற்றிருக்கின்றது.

அத்தோடு, விச ஊசி விவகாரத்தை ஊடகங்கள் மிகவும் பொறுப்பாகக் கையாள வேண்டும். ஏனெனில், அது, சுமார் பத்தாயிரம் முன்னாள் போராளிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயம். இறுதி மோதல்கள் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. முன்னாள் போராளிகளின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இன்னமும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் தொடர்கின்றன.

அதுபோல, ஆயுதப் போராட்டமொன்றுக்கு பண ரீதியில் பெரும் பங்களிப்புச் செய்த தரப்புக்கள் கூட முன்னாள் போராளிகளின் மீள் வாழ்வுக்கான உறுதிப்பாட்டினை, வளங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. மாறாக, 'தலைவர் வரட்டும் அவரிடம் திரும்பிக் கையளிக்கின்றோம்' என்று சொல்லிக் கொள்ளும் திருடர்களிடம் மீண்டும் மீண்டும் பெருமளவு நிதி சேர்ந்து கொண்டிருக்கின்றது.

'முன்னாள் போராளிகளாகிய நாங்கள் பெரும் சமூக அழுத்தத்தை எதிர்கொள்கின்றோம். அரசியல்வாதிகளும் எம்மைக் கணக்கெடுக்கிறார்கள் இல்லை. எமது சமூகமே எமது குரல்களைக் கேட்க மறுக்கின்றது. இந்த நிலை நீடித்தால் வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.' என்பது மாதிரியான தொனிப்படும் கருத்தொன்றை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் போராளியுமான துளசி தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துக்குப் பின்னால், நிராகரிப்பின் வலி தெரிகின்றது. ஏற்பட்டிருக்கின்ற காயங்களுக்கு மருந்திட வேண்டியது அவசியம். அதைவிடுத்து, அந்தக் காயங்கள் சீழ்பிடித்து, நாற்றமெடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஆகஸ்ட் 24, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)