பதிவுகள்

நாடு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. மாகாண சபைத் தேர்தல்களோ, பொதுத் தேர்தலோ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. கடந்த ஆண்டு ஒக்டோபர் சதிப்புரட்சியோடு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட போதும், பாராளுமன்றத்துக்குள்ளும் நீதிமன்றத்தினாலும் சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாமல் போனது. அப்போதைய பரபரப்பும் அடங்கியது. இந்த ஆண்டு முழுமையானதொரு தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனாலும், ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு தேர்தல்கள் எதுவும் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றாகிவிட்டது. 

ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து தென் இலங்கை பரபரக்க ஆரம்பித்தாலும், அந்தப் பரபரப்பு வடக்குக் கிழக்கை பெரிதாகத் தொற்றிக் கொள்ளவில்லை. இதனால், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை முன்வைத்து கூட்டணிக் கணக்கினைப் போட்ட தரப்புக்களின் செயற்பாடுகள் மந்தநிலைக்கு சென்றுவிட்டன. அது, தேர்தல் அரசியல் சிந்தனையாளர்களை மட்டுமல்ல, சிவில் சமூக வெளி உரையாடல்களையும் குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தியிருக்கின்றது.

வெற்றிகளை வைத்தே அரசியல் அதிகாரமும், அங்கீகாரமும் வரையறுக்கப்படுகின்றது என்கிற நிலையில், தேர்தல் வெற்றிகள் என்பது ஜனநாயக கட்டமைப்பொன்றில் தவிர்க்க முடியாதது. குறிப்பாக, வெற்றியை அடைய முடியாத தரப்புக்களின் செயற்பாட்டுத்திறன் உச்சபட்சமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம் என்பது இராஜதந்திர தரப்புக்களினால் மாத்திரமல்ல, மக்களினாலும் அவ்வளவாக வழங்கப்படுவதில்லை. அதனால்தான், இறுதிப் போருக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை சிவில் சமூக கட்டமைப்புக்களை பலப்படுத்துவதன் மூலம் இன்னொரு வடிவத்தினூடு கொண்டு செல்ல முடியும் என்று நம்பி, சுமார் ஐந்தாறு வருடங்களாக இயங்கிய அனைத்துத் தரப்புக்களும் இறுதியில், தேர்தல் வெற்றி என்கிற ஒற்றைப் புள்ளியை நோக்கி வந்தன. அந்தப் தரப்புக்களின் முதல் தெரிவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு சில வருடங்களும், 2015க்குப் பின்னரான சி.வி.விக்னேஸ்வரனும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். அன்றிலிருந்துதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான தேர்தல் கட்டமைப்பொன்றை விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு வலுப்படுத்துவதன் மூலம் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்தத் தரப்புக்கள் நம்பின. குறிப்பாக, தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் யாழ். மையவதாக குழுக்களின் ஒற்றை எதிர்பார்ப்பாக அது இருந்தது.

ஆனால், விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் தமிழ் மக்கள் பேரவைக்குள் இணைத்துக் கொள்ள முடிந்த தரப்புக்களினால், தேர்தல் கூட்டணியொன்றுக்குள் இன்னமும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு அவர்கள் இருவரதும் அரசியல் அணுகுமுறையும், அரசியல் முதிர்ச்சியின்மையும் காரணமாக இருக்கின்றன. விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்த போது, அந்தச் செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்தார்கள். முதலமைச்சராக விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை மக்கள் விமர்சித்து வந்தாலும், அமைச்சர்கள் பதவி நீக்க விடயத்தில் அவர் அநீதியாக நடத்து கொண்ட போதிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்து ஆணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி நடந்து கொள்வதாக மக்கள் கருதினார்கள். ஆனால், அந்தப் புள்ளியை தவறாக கையாண்ட கஜேந்திரகுமார் அணியும் பேரவையும் விக்னேஸ்வரனை நோக்கி ஜனவசியமிக்க தலைவர் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கத் தலைப்பட்டார்கள். தலைவர் பிரபாகரனுக்குப் பின்னரான ஒற்றைத் தலைவர் என்கிற கட்டத்தை கட்டமைப்பதில் முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஈடுபட்டார்கள். ஆனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடவில்லை. மாறாக, பெரும் விமர்சனங்களையே தோற்றுவித்தது.

விக்னேஸ்வரனின் ஆறு வருடகால அரசியலைப் பார்க்கும் போது, அவரின் அரசியல் அணுகுமுறையில் தீர்க்கமான கட்டங்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஏதுமில்லை. அவர் இன்றும் கூட்டமைப்பை (குறிப்பாக தமிழரசுக் கட்சியை) எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்கிறார். அடிப்படையில் தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை என்கிற உரையாடல், கூட்டமைப்பை எதிர்ப்பதிலிருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்கிற கட்டமே இன்றுவரை இருக்கின்றது. அதனால், அவரும் அதனையே செய்ய வேண்டியிருக்கின்றது. ஆனால், இரா.சம்பந்தனைத் தாண்டிய அரசியலை தன்னால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை விக்னேஸ்வரன் என்றைக்கும் கொண்டிருந்ததில்லை.

தற்போதைய தலைமையையும், அதன் இயக்கத்தைத் தோற்கடிக்க முடியாது என்ற உள்ளுணர்வு உள்ள தரப்புக்கள் எத்தகைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், மாற்றுத் தலைமை என்கிற கட்டத்தை நியாயபூர்வமாக அடைய முடியாது. ஒரு அடையாளப்படுத்தலுக்காக வேண்டுமானால் மாற்று அணியினர், என்கிற நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அது அரசியல் ரீதியாக அவர்களுக்கும் அவர்களை நம்புகின்ற தரப்புக்களுக்கும் வெற்றியைத் தேடிக்கொடுக்காது. அப்படியான சூழலொன்றே இன்றைக்கு மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

வயது மூப்பு, உடல் நலக்குறை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து சம்பந்தன் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ்த் தலைமையாக நீடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். அவருக்குப் பின்னரான தலைமையொன்றை கட்டமைப்பது சார்ந்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கள் இயங்குவது இன்றியமையாதது. அந்தக் கட்டத்தில், அரசியல் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் தீர்க்கமாகவும் முன்னெடுக்கின்ற தரப்புக்கள் மக்களிடத்தில் நிலைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அல்லாதுவிட்டால், தலைவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து ஒரே நாளில் குதித்து வருவார்கள் என்கிற மோட்டுவாதம் நிலைபெறும்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஏக நிலையை அடைந்துவிட்ட தலைமைத்துவத்துக்கு எதிராகவே எழுந்து வந்திருக்கின்றது. அருணாச்சலம் மகாதேவா குழுவை தமிழர் உரிமைகளை விற்கும் தரப்பாக அடையாளப்படுத்திக் கொண்டும், தமிழ் மக்களின் ஆபத்பாண்டவனாகக் தன்னை முன்னிறுத்திக் கொண்டுமே ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஏக நிலையைத் தலைமைத்துவத்தை அடைந்தார். அவரின் அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக எழுந்து வந்த தந்தை செல்வாவும், பொன்னம்பலத்தின் அடிப்படை அரசியல் அணுகுமுறைகளை எடுத்துக் கொண்டே தமிழ் மக்களிடம் வந்தார். காங்கிரஸ்காரர்களின் அடக்குமுறை ரவுடித்தனங்களை எதிர்கொண்ட செல்வா, தன்னுடைய நிலைப்பாட்டின் உறுதியாக நின்ற தன்மைதான், ஒரு கட்டத்தில் அவரை ஏக தலைவராக்கியது. தலைவர் பிரபாகரன் இராணுக் கட்டமைப்பொன்றின் தலைவராக இருந்தாலும், அவரை ஏக தலைமைத்துவத்துக்கு கொண்டு சேர்த்த புள்ளியில் அரசியல் அணுகுமுறையும் தீர்க்கமான தீர்மானங்களும் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கின்றன. ஒரு கட்டம் வரையில், அவரினால் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அரசியல் அணுகுமுறை மற்றும் தலைமைத்துவத்தின் போக்கில், சகோதரர்களாக அரவணைக்கப்பட்டார்கள். அதுதான், அவர் அரங்கில் இருக்கும் வரையில் ஏக தலைவன் என்கிற நிலையை ஏற்படுத்தக் காரணமானது.

யாராக இருந்தாலும் சந்தர்ப்பங்களைக் கையாளும் உத்தியும், தீர்மானங்களை எடுக்கின்ற திராணியும், அந்தத் தீர்மானங்களின் நியாயப்படுகளை மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய செயற்பாட்டுத்திறனுமே தலைமைத்துவ அடையாளங்களாக நோக்கப்படுகின்றன. அப்படித்தான், தலைவர் பிரபாகரனுக்குப் பின்னரான வெளியில் சம்பந்தன் நிலைபெற்றார். இன்றைக்கு சுமந்திரன் அந்தக் கட்டத்தில் பயணிக்கிறார். சுமந்திரனுக்கு முன்னராகவே அந்த வெளி கஜேந்திரகுமாருக்கு கிடைத்தது. அதனை அவர் வெகு இலாவகமாகத் தவறவிட்டார். அவரை நம்பிய தரப்புக்களை அது கானல் வெளிக்குள் தள்ளியது. அதுதான், விக்னேஸ்வரனை நோக்கி மாற்றுத் தலைமைக்கான அடையாளப்படுத்தல்களை, அவரும் சேர்ந்து முன்வைக்கும் சூழலை உருவாக்கியது.

ஆனால், விக்னேஸ்வரனின் ஆளுமைத் திறன் என்பது, தமிழ்த் தேசிய அரசியலை தூக்கிச் சுமப்பதற்கோ, அடுத்த கட்டத்தை அடைவதற்கோ தகுதியான வழிகளைக் காட்டவில்லை. அதனால், இன்றைக்கு அவரை நோக்கி கஜேந்திரகுமாரும் சேர்ந்து விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட கூட்டமைப்பை நோக்கி குற்றச்சாட்டுக்களை வைத்து அரசியல் அரங்கில் இயங்கிய விக்னேஸ்வரன் அணியும், கஜேந்திரகுமார் அணியும் தங்களுக்கிடையில் மோதிக்கொள்வதில் அதிக நேரத்தை தற்போது செலவிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த அணிகளின் அரசியல் ஆலோசகர்களாகவும், இணைப்பு சக்திகளாகவும் இயங்கிய தரப்புக்கள் போக்கிடமின்றி, அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்களின் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதே பெரும் இக்கட்டில் இருக்கும் போது, இந்த இழுபறிகளைக் கவனிப்பதில் காலத்தைச் செலவிட முடியாது. இன்னொரு தேர்தல் வரும் போது, இந்த இழுபறிகள் பெரும் தாக்கத்தைச் செலுத்தும். அது, கூட்டமைப்பை மீண்டும் பாதுகாக்க உதவலாம்.

 

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.